சில நேயர்கள் எழுதியிருக்கும் விடையைப் பாருங்கள்: அசுவத்தம்மா, எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, எஸ்.டி.சுப்புலக்ஷ்மி, எம்.எஸ்.விஜயாள், எஸ்.ஸி. கோமதி, எஸ்.பி.எல்.தனலக்ஷ்மி, கண்ணாம்பாள், காஞ்சனமாலா, குமாரி ருக்மணி, கே.எல்.வி.வஸந்தா, சந்தானலக்ஷ்மி, கே.பி.சுந்தராம்பாள், சூரிய குமாரி, செல்லம், டி.பி.ராஜலக்ஷ்மி, டி.எஸ். தமயந்தி, தவமணிதேவி, பாலசரஸ்வதி, பேபி சகுந்தலா, பேபி சரோஜா, டி.ஆர்.ராஜகுமாரி, ராஜம்மாள், ராஜாமணி, ஜனகம், ஜி.சுப்புலக்ஷ்மி
இப்படித் தமிழ்நாட்டில் ஒரு சினிமா நடிகை பேர் பாக்கி விடாமல் பொறுக்கியெடுத்து எழுதி யிருக்கிறார்கள். சில நேயர்களோ சாந்தா ஆப்தே, கண்ணன் பாலா, நஸ்ஸீம், நெரிஸ்ஸா, லீலா சிட்னிஸ், லீலா தேசாய் என்று வடநாட்டு நடிகை களின் பெயர்களையும் எழுதியிருக்கிறார்கள்.
சில நேயர்கள் எம்.கே.தியாகராஜ பாகவதர், சிறுகளத்தூர் சாமா, எம்.கே.ராதா, பெத்தாபுரம் ராஜு, பி.எஸ்.ஸ்ரீநிவாஸராவ் என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள். படத்திலிருப்பவர் ஒரு நடிகை என்று நாம் சொன்னதைக்கூட அவர்கள் நம்பத் தயாராயில்லை.
இப்படிப் பலரைப் புது வேஷத்தால் ஏமாற்றும் இந்த நடிகை யார்? ஸ்ரீமதி டி.ஏ.மதுரம்தான். மெஸ்ஸர்ஸ் நாராயணன் கம்பெனியாருக்குச் சொந்தமான பக்ஷிராஜா பிலிம்ஸ் கம்பெனியாரால் தயாரிக்கப்பட்டு வரும் 'அலிபாபா' படத்தில் இந்த வேஷத்தில் தோன்றுகிறார்.
|