கே.செந்தில்வேலன்
மனநல மருத்துவர்.
''நீங்கள் குறிப்பிடும் அறிகுறி எல்லா மன வியாதிகளுக்குமான அறிகுறி. உங்கள் வார்த்தைகளை வைத்துப் பார்க்கையில், உங்களுடையது மனப் பதற்ற நோயாக (Anxiety Disorder) இருக்கலாமோ என்று தோன்றுகிறது. இனம்புரியாத பயம், ஓய்வு எடுக்க முடியாத மனநிலை, எப்போதும் ஏதோ ஒரு வேலை மிச்சம் இருப் பது போன்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். கவனம் இன்மை, ஞாபக மறதி, எதிர்மறை எண்ணங்கள், எரிச்சல், பதற்றம் போன்றவை அறிகுறிகள். இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும். கை நடுக்கம், உள்ளங்கை குளிர்ச்சியாவது, நாக்கு வறட்சி, தலைசுற்றல், அதிக வியர்வை, போன்றவற்றையும் உணரலாம். அடிப்படையிலேயே கூச்ச உணர்வு இருந்தாலும், சோஷியல் ஃபோபியா இருந்தாலும் பிறர் கண்களைப் பார்த்துப் பேசுவதில் தயக்கம் இருக்கும். யாரும் கவனிக்காத சமயம் சிறப்பாகச் செய்து முடிக்கும் வேலையை யாரேனும் கவனித்தால் சரியாகச் செய்ய முடியாது. கவலைப் படாதீர்கள். இதை எளிதாகச் சரி செய்துவிடலாம். தினமும் வீட்டிலேயே யோகாசனம், மனதை ரிலாக்ஸ் ஆக்கும் பயிற்சிகள், தியானம், உடற்பயிற்சி போன்றவற்றைச் செய்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடனே, ஒரு மனநல மருத்துவரை அணுகித் தக்க ஆலோசனை பெறுங்கள்!''
|