அவர்களை வெளியேவிடாமல் தடுத்த இருவர், பணம் கட்டாமல் வெளியே போக முடியாது என்று சொல்லி, அவர்கள் கையில் இருந்த 1,800 ரூபாயைப் பறித்துக்கொண்டார்கள். அதற்கு ரசீது கொடுங்கள் என்று கேட்டதற்கு, அதெல்லாம் வீடு தேடி வரும் என்றதோடு, 'போய்த் தொலையுங்கள்' என்று ஆங்கிலத்தில் கத்தியபடியே அந்த ஆள் அவர்களை வெளியேவிட்டிருக்கிறான்.
பயம், அவமானம், தங்கள் கனவு சிதறிப்போனதன் வலி யாவும் ஒன்று சேர, அவர்கள் வெளியே வரும்போது, இன்னொரு ஜோடி தங்களின் விடுமுறைக் கனவுகளுடன் வரவேற்பறையில் உட்கார்ந்திருப்பதைக் கவனித்திருக்கிறார்கள்.
நடுக்கத்துடன் வீடு வந்து சேர்ந்த நண்பர் இரவுஎல்லாம் அவமதிப்பின் வலியில் புரண்டுகொண்டேஇருந்தார். இணையத்தில் அந்த நிறுவனம்பற்றித் தேடினார். அங்கே அவரைப் போல ஏமாந்துபோன வர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் இருப்பதை அறிந்தார். அவர்களில் பலர் இதை வெளிப்படை யான புகாராக ஏமாந்த கதையை எழுதியிருந்தார்கள். இலவச மோசடி பற்றி வாசிக்க வாசிக்க... அந்த வலி அதிகமானது. மறுநாள் அதே நிறுவனத்தில் இருந்து போன். மிச்சப் பணம் எப்போது கிடைக் கும் என்ற மிரட்டல். வெளியே பகிர்ந்துகொள்ள முடியாத அந்தக் காயம் அவரது அன்றாட வாழ்க்கையைச் சில வாரங்களுக்கு நடுக்கம்கொள்ளச் செய்துவிட்டது. பின்பு தானாக அந்தத் தொலைபேசி அழைப்பு நின்றுபோனது.
இப்படி ஏமாந்த கதைகள் யாவர் வீட்டிலும் இருக்கின்றன. ஆனால், ஏமாந்தவர்களில் ஒருவர்கூட அதைத் தடுக்க முன்வரவும் இல்லை. அடுத்து ஏமாறாமலும் இல்லை. நகரம் ஒரு பக்கம் நம்பிக்கையின் வெளிச்சமாகத் தெரிவது போலவே மறுபக்கம் ஏமாற்றின் இருளாகவும் விரிந்து இருக்கிறது.
ஷாப்பிங் மால், தீம்பார்க், சினிமா தியேட்டர், உணவகம் என்று பல இடங்களிலும் இலவசப் பரிசு பற்றிய விண்ணப்பங்களைக் கொட்டி இருக்கிறார்கள். அதை மிகச் சிரத்தையோடு பூர்த்திசெய்து போடும் மக்களில் பெரும்பான்மையோர் இது போன்று ஏமாந்து, தங்களின் கைப்பொருளைப் பறிகொடுத்து, வசையும் அவமானமும்பட்டுத் திரும்பி இருக் கிறார்கள். இவர்களில் ஒருவர்கூட இது வரை வெளிப்படையாகப் புகார் செய்ய முன்வரவில்லை. காரணம், தங்கள்பட்ட அவமானம் வெளியே தெரிந்துவிடுமே.
ஏமாற்றுபவர்கள் எளிய மனிதர்களையே குறிவைக்கிறார்கள். மனைவி, குழந்தைகளுடன் கு¬றவான செலவில் சில நாட்கள் தனக்குப் பிடித்த உல்லாச ஸ்தலங்களில் தங்க நடுத்தரவர்க்க மனிதன் ஆசைப்படுகிறான். அதைச் சாத்தியப்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படாமல் போகவே, எப்படியாவது இது நிறைவேறுமா என்று ஏக்கம் கொள்ள ஆரம்பிக்கிறான். அந்த ஆதங்கத்தை, நிரா சையை இதுபோன்ற கொள்ளை நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன.
நடந்ததை நினைக்கும்போது படித்து உயர் பதவி ஒன்றில் வேலை செய்யும் என் நண்பர் மீதுதான் கோபமாக இருந்தது. நல்ல வேலையில் உள்ளவர்கள் கூடப் பகுத்தறிவை மறந்து இலவசமாகக் கிடைக்கிறது என்றவுடன் எதையும் பெற்றுக்கொள்ள ஏன் துடிக்கிறார்கள். இதைப்பற்றி ஊடகங்கள், காவல் துறை எவ்வளவு விழிப்பு உணர்வு தந்தபோதும் ஏன் அதைப் பொருட்படுத்துவதே இல்லை.
உண்மையில், பொதுமக்கள் மனதில் இலவசத்தின் மீது அதீத விருப்பம் கொப்பளித்துக்கொண்டு இருக்கிறது. சாலையில் நின்றபடியே போகிற வருகிற ஒவ்வொருவருக்கும் 10 ரூபாய் பணம் கொடுங்கள். எதற்கு என்று கேட்காமல் வாங்கிக்கொண்டு போய் விடுவார்கள். இதே ஆட்களில் ஒருவரை நிறுத்தி '10 ரூபாய் பணம் வேண்டும்' என்று கேளுங்கள். 'ஏன் கை, கால் இல்லையா, உழைத்துச் சாப்பிடக் கூடாதா' என்று அறிவுரை சொல்வார்கள். நீ இலவ சமாக 10 ரூபாய் வாங்கியபோது எங்கே போனது உன் கை, கால்கள். ஏன் இந்த இலவசப் புத்தி?
அடிப்படை வசதியற்ற ஏழை எளியவர்கள் இந்த ஏமாற்றுகளில் அதிகம் பலியாவது இல்லை. இலவசமாக ஒரு பாக்கெட் ரவை கிடைக்கிறது என்று 1,000 ரூபாய்க்குப் பலசரக்கு வாங்குவது இல்லை. ஹாலிடே ரிசார்ட்டின் நீச்சல் குளத்தில் குளிப்பது பற்றிக் கனவு காண்பது இல்லை. அவர்கள் பசித்த வயிறோடு இருந்தபோதும் இலவசக் கனவுகளுக்கு ஆசைப்படாதவர்களாகவே இருக்கிறார்கள். நடுத்தர வர்க்க மனிதன்தான் எதையும் இலவசமாகப் பெறத் தயாராக இருக்கிறான். அதற்கான வரிசையில் நிற்கிறான்... போராடுகிறான்... அவமானம் அடை கிறான். அதிலும் அறிவைப் பயன்படுத்தி நடை பெறும் மோசடிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாமல் பெருகிவிட்டிருக்கிறது.
'Not a Penny More, Not a Penny Less' என்றொரு படம். ஜெஃப்ரி ஆர்ச்சரின் நாவலை அடிப்படையாகக்கொண்டது. ஏமாந்துபோனவர்களின் வலியைப் பிரதிபலிக்கிறது. ஹார்வி பங்குச் சந்தை விற்பனையைப் பயன்படுத்தி, மக்களை ஏமாற்றுவதில் கில்லாடி. அவன் வலையில் விழாத ஆட்களே இல்லை. ஒரு போலி நிறுவனத்தின் பேரில் அவன் பங்குச் சான்றிதழ்களை விற்பனை செய்து ஏமாற்றுகிறான். இதில் நான்கு பேர் ஏமாந்துபோயிருக்கிறார்கள். ஒருவர், ஸ்டீபன் என்ற பேராசிரியர். மற்றவர், ராபின் என்ற மருத்துவர். மூன்றாவது, ஜீன் பியாரி என்ற கலைப் பொருள் விற்பனையாளர். நான்காவது, ஜேம்ஸ். பரம்பரைப் பணக்காரன்.
|