ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.
கம்ப ராமாயணம் எழுதிய கம்பரும், அமராவதியின் காதலனான அம்பிகாபதியின் தகப்பனார் கம்பரும் ஒரே நபர்தானா?
அம்பிகாபதி-அமராவதி கதையே ஒரு கதை தான்! கவிச்சக்ரவர்த்தி கம்பர் இருந்தது உண்மை; அவர் ராமாயணம் எழுதியது உண்மை. அவ்வளவே!
எருமை, பொறுமையாக அசைந்தாடிச் செல்லும் வாகனம். உயிரைப் பறிக்கச் செல்லும் எமனுக்கு வாகனமாக எருமையை வைத்ததற்கு என்ன காரணம் இருந்திருக்கலாம்?
எனக்குத் தெரிந்த வரையில் (அது ரொம்பக் கொஞ்சம்!) புராணங்களில் எமனுக்கு வாகனம் எருமை என்று குறிப்புகள் எதுவும் இல்லை! பிற்பாடு, அது மனிதர்கள் எமனுக்குத் தந்த வாகனமாகி இருக்கலாம். எருமையின் வெறித்த பார்வையைக் காணும் போது அதற்கு இம்மை, மறுமை என எல்லா ரகசியங் களும் தெரியுமோ என்கிற சந்தேகம் வருகிறது! எருமையை விடுங்கள்... எமனே இல்லாமல் இருந்த ஒரு யுகம் உண்டு. முதல் யுகமான கிருத யுகம். அப்போது இறப்பே நிகழாமல், மக்கள் தொகை தாங்க முடியாத அளவுக்குப் போய், பூமி அமிழ்ந்து போக ஆரம்பிக்க, பூமாதேவி கலங்கிப்போய் விஷ்ணுவிடம் ஓடினாள். விஷ்ணு வராகமாக மாறி, பூமியைத் தூக்கி நிறுத்தி, கூடவே எமனையும் படைத்தார் என்று மகாபாரதத்தில் வருகிறது.
|