மற்றபடி எந்த உறவும் உங்களுடைய உண்மையான உள்தன்மையைப் பிரதிபலிக்கும்விதமாக அமைவது இல்லை. உயிர் என்றால் என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அமெரிக்கத் தொலைக்காட்சியில் ஒருவர் வேடிக்கையாக அது காமத்தால் தொற்றிக்கொண்ட நோய் ('life is a sexually transmitted disease') என்றார். காமம் என்பது உடல்நிலை அளவிலும், மனநிலை அளவிலும் மட்டுமே பிறக்கிறது. உடல், மனம் இவற்றை மட்டுமே அனுசரித்து வாழும் சமூகத்தில் அதையே மனிதனின் அடிப்படை என்று கற்பனை பண்ணிக்கொண்டதில் ஆச்சர்யம் இல்லை.
உண்மையில் உங்கள் உயிர் முற்றிலும் முழுமையானதாகத்தான் படைக்கப்பட்டு இருக்கிறது. அதை இட்டு நிரப்ப அதற்கு இன்னொரு உயிரின் உதவி ஒன்றும் தேவை இல்லை.
ஆனால், அந்த முழுமையை உணர இயலாதவர்களுக்குத் தங்கள் பக்கத்தில் ஏதாவது ஓர் உறவை வைத்துக்கொண்டாக வேண்டியிருக்கிறது.
வெள்ளியங்கிரி மலை ஏற வேண்டும் என்று வருகிறீர்கள். மாமியார், மனைவி, இரண்டு குழந்தைகள் சகிதம் வந்தீர்கள். மாமியாருக்கு கால் சொன்ன பேச்சைக் கேட்காது. மனைவி நீங்கள் சொன்ன பேச்சைக் கேட்க மாட்டாள். குழந்தைகள் யார் சொல்லும் பேச்சையும் கேட்க மாட்டார்கள் என்று ஒரு நிலைமை.
'சம்போ, சிவ சம்போ' என்று உணர்ச்சிவசப்பட்டுக் கத்திக்கொண்டு மலை ஏறுபவர்களைப் பார்க்கிறீர்கள். உங்களுக்கும் அவர்களுடன் ஏழு மலை ஏற வேண்டும் என்று ஆசை தான். ஆனால், உடன் வந்தவர்களைப் பார்க்கிறீர்கள். பஸ்ஸில் இருந்து இறங்கியதும், உங்கள் மனைவி 'ஊ...ஃப் ஊஃப்' என்று பெருமூச்சு விடுகிறார். குழந்தைகள் குய்யோ குய்யோ என்று கத்துகின்றன. மாமியார் முழங்காலைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிடுகிறார்.
'அட! மலை உச்சிக்குப் போனால்தானா? அடிவாரமே எவ்வளவு அழகாக இருக்கிறது, பார்' என்று உங்கள் வாயில் இருந்து ஒரு தத்துவம் உதிர்கிறது. முற்றிலும் உணர்ந்ததால் உரைத்த தத்துவமா இது? இல்லை. இயலாமை காரணமாக, பலவீனம் காரணமாக உதிர்க்கப்படும் ஒரு தத்துவம் இது. இதுவே தனியாக வந்திருந்தால், ஒருவேளை மலை ஏறிப் பார்த்திருப்பீர்கள்.
ஒருநாள் சங்கரன் பிள்ளையை அவருடைய அப்பா, அம்மா, மாமா, அத்தை, சித்தி என்று அத்தனை பேரும் சூழ்ந்திருந்தார்கள்.
சங்கரன் பிள்ளை சொன்னார், 'பக்கத்துத் தெருவில் துளசி இருக்கிறாளே, அவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்!'
சங்கரன் பிள்ளையின் அப்பா சொன்னார், 'டேய் முட்டாள்! அந்தப் பெண்ணுக்கு ஒரு காசுகூட சொத்து இல்லை!' அம்மா, 'அவ அநாதைடா... என்ன சாதின்னே தெரியாது!' என்றாள். அத்தை சொன்னார், 'அவள் தலைமுடியைப் பார்த்தாயா? கேவலமாக இருக்குமே?' மாமா சொன்னார், 'அவ அழகா இல்லடா!'
மாமாவின் வாண்டுப் பையன் கத்தினான், 'ஐயோ அங்கிள், அவளுக்கு கிரிக்கெட்னா என்னன்னு தெரியல!'
'இப்படி ஆளாளுக்குக் குழப்புவதற்குக் குடும்பத்தார் யாரும் அவளுக்கு இல்லை என்பதுதான் அவளை நான் தேர்ந்தெடுத்த காரணம்!' என்றார், சங்கரன் பிள்ளை.
|