''ஒரு லாயரிடம் பொய் சொல்லக் கூடாது என்பது பொதுவான விதி. உங்களுக்கு வந்தது ராங் நம்பர் இல்லை. சரியான நம்பர்தான். ஆனால், பேசியது மட்டும் ராங் பர்சன். நான் சொல்வது சரியா?''
விஜேஷ் அவளை வியப்பாகப் பார்க்க, அவள் சிரித்தாள். ''உங்களுக்கு வந்தது ராங் நம்பராக இருந்திருந்தால், அந்தப் பேச்சு ஒரு பத்து விநாடிகளுக்குள் முடிந்துபோயிருக்கும். ஆனால், நீங்கள் ஒரு நிமிடம் பேசினீர்கள். அந்த ஒரு நிமிடப் பேச்சு முடிவதற்குள், உங்கள் முகத்தில் ஓராயிரம் முகபாவங்கள். அதிர்ச்சி அலைகள். போனில் ஏதாவது கெட்ட செய்தியா?
''கிட்டத்தட்ட...''
''பேசியது யார்... ஆணா, பெண்ணா?''
''பெண்.''
''என்ன சொன்னாள்?''
விஜேஷ் தயங்க, ஃப்ளோரா சிரித்துக் கண் சிமிட் டினாள். ''என்னைப்பற்றி அந்தப் பெண் ஏதாவது மோசமான முறையில் விமர்சனம் செய்தாளா?''
''இல்லை.''
''பின்னே?''
''என்னை எச்சரிக்கை செய்தாள்.''
''எச்சரிக்கை செய்தாளா?''
''ம்... கடந்த ஆறு மாத காலத்தில் நீங்கள் சொல் லும் அந்த வீட்டை வாங்க அக்ரிமென்ட் போட்ட இரண்டு பேர் அடுத்தடுத்து இறந்துபோய்விட்டார் களாம். 'இப்போது நீங்கள் மூன்றாவது நபராக அந்த வீட்டை வாங்க வந்திருக்கிறீர்கள். இந்த நிமிஷத் தோடு அந்த எண்ணத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, பாரீசுக்குப் போக அடுத்த ஃப்ளைட் டைப் பிடியுங்கள்' என்று சொன்னாள்.''
ஃப்ளோராவின் முகம் லேசாக மாறியது. ''நீங்கள் என்ன சொன்னீர்கள் விஜேஷ்?''
''நான் மேற்கொண்டு அவளிடம் பேசுவதற்கு முன்பாக இணைப்பைத் துண்டித்துவிட்டாள். பப்ளிக் பூத்தில் இருந்து பேசியிருக்கிறாள். அவள் ஒரு இந்தி யப் பெண். அதிலும் தமிழ்நாட்டுப் பெண். பெயர் காமாட்சி. ஊர் காஞ்சிபுரம்.
ஃப்ளோரா சில விநாடிகள் வரை மௌனம் காத்து விட்டு, விஜேஷைத் திரும்பிப் பார்த்தாள். ''இப்போது உங்கள் முடிவு என்ன விஜேஷ்? அந்த வீட்டை வாங்கப் போகிறீர்களா, இல்லை அவள் சொன்னது போல அடுத்த ஃப்ளைட்டைப் பிடித்து, பாரீஸ்போகப்போகிறீர்களா?''
''அந்த காமாட்சி சொன்னது உண்மையா, பொய்யா? நீங்கள் சொல்லும் அந்த வீட்டை இரண்டு பேர் வாங்க முயற்சி செய்து, அடுத்தடுத்து இறந்துபோனது உண்மையா?''
''உண்மைதான்!''
''எப்படி இறந்தார்கள்?''
''ஹார்ட் அட்டாக்! வீட்டை வாங்க வந்த அந்த இரண்டு பேருமே 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். ஒருவர் பெண். மற்றவர் ஆண். பெண்ணின் பெயர் பிரிட்டனி ஜான்சன். ஆணின் பெயர் ஜான் கரோல். முதலில் வீட்டை வாங்க முயற்சி செய்து அக்ரிமென்ட் போட்டவர் பிரிட்டனி ஜான்சன். அவருக்கு ஏற்கெனவே இருதய ஆபரேஷன் நடந்திருக்கிறது. டாக்டர் சொல்லியிருந்த நடைப்பயிற்சி தூரத்தைக் காட்டிலும் அதிக தூரம் நடந்ததால், மாரடைப்பு ஏற்பட்டு மரணம். அதற்குப் பிறகு இரண்டாவதாக அக்ரிமென்ட் போட்டவர் ஜான் கரோல். அவர் பைபாஸ் சர்ஜரி செய்துகொண்டவர். குடிகாரர். ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் அளவுக்கு மீறிக் குடிப்பவர். ஒரு சனிக் கிழமை இரவு மதுவின் தாக்கம் அதிகமாகி, மாஸிவ் அட்டாக் ஏற்பட்டு மரணம். இரண்டுமே இயற்கையான முறையில் நேர்ந்த மரணங்கள். வீட்டை வாங்க நினைத்ததற்கும் அவர்கள் இறந்து போனதற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. இது ஒரு சாதாரண பிரச்னை. இதை யாரோ ஊதிவிட்டுப் பெரிதாக்க நினைக்கிறார்கள்.''
''இதனால் யாருக்கு என்ன லாபம்?''
''அதுதான் எனக்கும் புரியவில்லை. உங்களுக்கு போன் செய்து பயமுறுத்திய காமாட்சி யார் என்று தெரிந்தால்தான் இந்தக் கேள்விக்கான பதில் கிடைக்கும். ஆனால், மறுபடியும் அந்தக் காமாட்சி உங்களுக்கு போன் செய்ய மாட்டாள். ஏனென்றால், அந்த வீட்டை வாங்க விடாதபடி பயமுறுத்துவது ஒன்றுதான் அவளுடைய நோக்கம். இப்போது நான் உங்களிடம் கேட்க விரும்புகிற கேள்வி இதுதான். காமாட்சியின் எச்சரிக்கைக்கு உங்களுடைய ரியாக்ஷன் என்ன?''
விஜேஷ் சிரித்தான். ''அவளுடைய எச்சரிக்கையை நான் குப்பைக் கூடைக்கு அனுப்பியாயிற்று. உங்களுடைய சகோதரன் ஃப்ரெட்ரிக் என் உயிர் நண்பன். எனக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவன். நியூயார்க்கில் நல்ல வேலை கிடைத்து போகப்போகிறேன் என்று தெரிந்ததும், அங்கே ஒரு வீட்டை வாங் கும் யோசனையை அவன்தான் சொன் னான். அதற்கேற்றாற்போல் ஒரு பழங் கால வீடு உடனடியாக விற்பனைக்கு இருக்கிறது என்று நீங்கள் போனில் சொன்னதும், நான் உடனே புறப்பட்டு வந்துவிட்டேன். நீங்கள் ஒரு லாயர். அந்த வீட்டை விற்கக்கூடிய உரிமையான பவர் ஆஃப் அட்டர்னி உங்களிடம் இருப்பதால், எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.''
''நீங்கள் இப்படிப் பேசுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இது எந்தப் பிரச்னையும் இல்லாத வீடு. காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக, வீட்டை வாங்க முயற்சித்த இரண்டு பேர் இயற்கையான முறையில் இறந்து போயிருக் கிறார்கள். அதை ஒரு பெண் பொழுது போகாமல் கிளறிப் பார்த்து உங்களுக்கு கிலியை ஏற்படுத்த நினைத்து போன் செய்திருக்கிறாள்.''
''நான் அவளை மறந்துவிட்டேன் ஃப்ளோரா! எனக்கு அந்த வீட்டைக் காட்டுங்கள். முடிவாக ஒரு விலை பேசி அக்ரிமென்ட் போட்டுக்கொள்ளலாம். எனக்கு பேங்கில் லோன் சாங்ஷன் ஆன துமே ரெஜிஸ்ட்ரேஷன்!''
''அப்படியென்றால் அந்தக் காமாட்சி யின் எச்சரிக்கையைப் பொருட்படுத்த வில்லையா?''
''ஒரு சதவிகிதம்கூட! உங்கள் வீட்டுக்குப் போகும் வழியில்தான் அந்த வீடு இருப்பதாகச் சொன்னீர்கள் ஃப்ளோரா. போகும்போதே ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போய்விடலாமா?''
''வீட்டுக்குப் போய்க் குளித்துச் சாப்பிட்டு, சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு பிறகு போகலாமே?''
''இல்லை ஃப்ளோரா! எனக்கு விமானப் பய ணக் களைப்பு கொஞ்சம்கூட இல்லை. எதற்காக நியூயார்க் வந்தேனோ, அந்த வேலையை முதலில் பார்த்துவிடலாம்.''
''இன்னும் பத்தே நிமிடங்களில் அந்த வீடு இருக் கும் ஓல்ட் ப்ளாக் க்ரூவ்ஸ் ஏரியா வந்துவிடும்.''
''பிறகென்ன? பார்த்துவிட்டே போய்விடலாம்!''
கார் நெடுஞ்சாலையில் நான்காவது டிராக்கில் ஓர் இலவம்பஞ்சுத் துணுக்காகப் பறந்தது. நியூ யார்க்கின் பிரமாண்டமான கட்டடங்கள் இப்போது காணாமல் போயிருக்க, தொலைவில் மலைகள் நீல நிற பென்சிலால் கிழிக்கப்பட்ட கோணல்மாணல் கோடுகளாகத் தெரிந்தன.
விஜேஷ், ஃப்ளோராவிடம் ஏதோ பேச முயல, அவனுடைய செல்போன் ரிங்டோனை வெளியிட் டது. எடுத்து, அழைப்பது யார் என்று பார்த்தான். புது நம்பர். செல்போனைக் காதுக்குக் கொடுத்து, ''யெஸ்'' என்றான்.
''நான் காஞ்சிபுரம் காமாட்சி. என்ன முடிவு பண்ணியிருக்கீங்க விஜேஷ்?''
''ஒரு பப்ளிக் டெலிபோன் பூத்துக்குள்ளே பூந் துட்டுப் பேசறவங்களை நான் நம்பறது இல்லை. ஃப்ளோரா இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த வீட்டைக் காட்டப்போறாங்க. நான் பார்க்கப் போறேன்.''
காமாட்சி சிரித்தாள்.
''என்ன சிரிக்கிறே?''
''வலிது... வலிது... விதி வலிது! இப்ப சிரிச்சது நானில்லை. உங்க முதுகுக்குப் பின்னாடி இருக்கிற விதி!''
இந்த வாரக் கேள்வி: 'பெல்லாரி' எதற்குப் புகழ்பெற்றது?
1. தக்காளி 2. உருளைக்கிழங்கு 3. வெங்காயம்
AVCRIME என்று டைப் செய்து, ஒரு ஸ்பேஸ் விட்டு, சரியான விடைக்குரிய எண்ணையும் டைப் செய்து, கூடவே மறக்காமல் இந்த அத்தியாயம் பற்றிய உங்கள் கமென்ட்டையும் பளிச்சென்று ஐந்தே ஐந்து வார்த்தைகளுக்குள் டைப் செய்து, 562636-க்கு உடனே எஸ்.எம்.எஸ். பண்ணுங்க! |
|
|
|
சென்ற வாரக் கேள்விக்கான சரியான விடை 'நியூயார்க்'. 'இனி, மின்மினி' தொடரின் முதல் அத்தியாயம் பற்றிய சூப்பர் கமென்ட்டுடன் இந்தச் சரியான விடையை எஸ்.எம்.எஸ். செய்திருந்த கீழ்க்கண்ட மூன்று பேருக்கும் தலா ரூ. 101 பரிசுத் தொகை அனுப்பிவைக்கப்படுகிறது.
| | | | |