அலட்சிய மனப்பான்மையுடன் நடந்துகொண்ட சம்பந்தப்பட்ட ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டோ, சிறையில் அடைக்கப்பட்டோ தர்மத்துக்கு வெற்றி கிடைக்கும் வரை பசி, தாகம், வேலை என எதையும் பொருட்படுத்தாமல் பிணத்தைச் சுற்றி வியூகம் அமைத்துப் போராடுவார்கள். அவர்களுடைய சமூக விழிப்பு உணர்வு அப்படி.
அப்படிப்பட்டவர்கள்தான் இப்போதும் ரங்காவைச் சுற்றி வியூகம் அமைத்திருந்தார்கள். கூட்டத்தில் இருந்த ஒருவன் சிக்னல் கம்பத்தில் ஒட்டியிருந்த ரத்தத்தைக் காட்டினான். ஹோவென்ற இரைச்சல் அதிகமானது.
“ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு..." என்று ஒருவன் அடித்தொண்டையில் இருந்து குரல் எழுப்பினான்.
“முர்தாபாத்..."
“கொடூரமான ரயில்வே நிர்வாகம்...''
“முர்தாபாத்..."
மக்களின் கோஷங்கள் லெவல் கிராஸிங்கின் மறுபக்கமும் எட்டின. ரங்காவைச் சுற்றி மேலும் ஆட்கள் சேர்ந்தார்கள். கோஷம் இடும் குரல்கள் கூடின.
ரங்காவுக்குப் பார்வை மங்கியது. 'குபுக்' என்று சரளைக் கற்களின் மீது வாந்தி எடுத்தான். வேதவல்லி பிசைந்து கொடுத்த சாம்பார் சாதம் தொண்டைக் குழாயை எரித்துக்கொண்டு வெளிப் பட்டது.
“ப்ளீஸ்! தண்ணி... தண்ணி...'' என்று உதடுகளை அசைத்துப் பார்த்தான். குரல் மிக பலவீனமாக இருந்ததால், ஆவேச மக்கள் யாரையும் அது எட்டவில்லை. களைப்பு மிகுதியில் ரங்கா கண்களை மூடிக்கொண்டான்.
ரயில்வே போலீஸ்காரர்களுக்கு விஷயம் எட்டி அவர்கள் ஒரு கொத்தாக ரங்கா விழுந்துகிடந்த இடத்தை நோக்கி வந்தார்கள். கூட்டத்தை விலக்கி எட்டிப் பார்த்தார்கள்.
ரங்காவின் தலையில் இருந்து வழிந்துகொண்டு இருந்த ரத்தம் ஸ்லீப்பர் கட்டையில் திட்டாகப் பரவியிருந்தது.
“அந்தாளை ஆஸ்பத்திரில சேக்கணும்... நகருங்க'' என்று ஒரு போலீஸ்காரன் முன்னால் வந்தான்.
“மயிரு..." என்றான் ஒரு பெங்காலி.
''அதுக்கு வேற ஆளைப் பாருங்கடா. போய் ஆபீஸர் அலிங்களை வரச் சொல்லுங்கடா. இந்த சிக்னல் கம்பத்தைப் புடுங்கி எறியணும். இந்தாளை இங்கேர்ந்து எடுத்துட்டா ஆபீஸருங்க மறுபடியும் சீட்டாடப் போய்டுவானுங்க.''
“ஆள் செத்துப் போய்டப்போறான்யா...''
மக்கள் ரங்காவைச் சுற்றி வியூகம் வகுத்தார்கள். “எவனாவது உள்ள நுழைஞ்சீங்க... போலீஸ்காரன்னு பாக்க மாட்டோம். போட்ருவோம். போய் ஆபீஸர் பொறுக்கிங்களை அனுப்பு. நாய் மாதிரி பாசஞ்சர் அடி பட்டுக்கெடக்கறதைப் பார்த்தாதான் புட்டத் துக்குக் கீழயே தண்ணி வந்திரிச்சிடான்னு அவனுங்களுக்கு உறைக்கும்... ஆக்ஷன் எடுப்பாங்க."
சுற்றிலும் பெங்காலியில் சிதறிக்கொண்டு இருந்த இரைச்சலான வார்த்தைகள் ரங்காவுக்குப் புரியவில்லை. இமைகள் கனத்துக்கொண்டே வந்தன. ''தண்ணி... வேதம்... அம்மா... ஆஸ்பத்திரி... கண்ணா... ஜானு'' என்று என்னென்னவோ வாய்க்குள்ளேயே முனகினான்.
ஆவேசக் கூட்டத்தினரிடம் இருந்து போலீஸ்காரர்கள் விலகினார்கள். தள்ளி நின்று, மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டார்கள். போராளிகளைச் சமாளிக்க காவல் படையை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்கள்.
கூட்டத்தில் இருந்த ஒருவன் போலீஸ்காரன் பேசியதை ஒட்டுக்கேட்டான். போலீஸ் படை வரப்போகிறது என்ற செய்தியை ஒலி பரப்பினான். ஒரு சரளைக் கல் கூட்டத்தின் நடுவில் இருந்து பறந்து வந்து ஒரு போலீஸ் காரனின் தொப்பியைத் தாக்கியது.
கண்ணன், தன் நண்பன் அரவிந்துடன் பைக்கில் காம்ராபாத் லெவல் கிராஸிங்கை நெருங்கியபோது ஏராளமான ஷ்மக்கள் எதிர் திசையில் இருந்து ஓடி வந்துகொண்டு இருந்தார்கள். ஸ்டேஷன் அருகில் பிளாட்ஃபாரத்தை ஒட்டி அடுக்கப்பட்டு இருந்த ஸ்லீப்பர் கட்டைகள் திகு திகுவென எரிந்துகொண்டு இருந்தன. புகை சுருண்டு மேலேறியது. ரத்தம் சொட்டும் காலுடன் ஒருவன் “உங்கம்மாள..." என்று போலீஸ்காரர்களைக் கெட்ட வார்த்தைகளால் திட்டியபடி ஓடி வந்தான்.
“என்ன ஆச்சி?" என்று அரவிந்தன் பெங்காலியில் கேட்டான்.
“போலீஸ்கார நாய்ங்க தடியடி நடத்தறானுங்க..." என்று அவன் கத்திக்கொண்டே ஓடினான். தூரத்தில் கருங்கற்கள் ஏவுகணைகளாகப் பறந்தன.
வேடிக்கை பார்த்த கூட்டம், இரைச்சலும் ஆர்ப்பாட்டமுமாகச் சிதறி எட்டுத் திக்கும் ஓடிக்கொண்டு இருந்தது.
''நிக்காத, போ... போ...'' என்று புதிதாக வந்து இறங்கிய போலீஸ் லத்தியைச் சுழற்றி பைக்கில் அடித்து இவர்களைத் துரத்தியது.
“கண்ணா. உங்கப்பா இந்தக் கலவரத்துலதான் காயப்பட்டுக்கிட்டாரா தெரியலையே? பக்கத்துல ஏதாவது ஆஸ்பத்திரிக்குப் போய்ட்டிருப்பார்டா. அங்க போய்ப் பார்ப்போம். வீணா நாம இங்க அடிபட வேணாம்'' என்று அரவிந்தன் அவசரமாக பைக்கைத் திருப்பினான்.
மூன்று மணி நேரத்துக்குப் பிறகு, போலீஸ் ஜீப்பில் ரங்காவின் அம்மாவும், வேதவல்லியும் காம் ராபாத் ரயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்கள். கண்ணன் அலைபேசியில் அழைக்கப்பட்டு, ஜானுவைப் பள்ளியில்இருந்து அழைத்து வந்து சேர்ந்திருந்தான்.
“ஐயோ... ஐயோ..." என்று மார்பில் அறைந்துகொண்டே வேதவல்லி உள்ளே ஓடினாள். ரங்காவின் அம்மாவைப் போலீஸ்காரர்கள் கைத்தாங்கலாக பிளாட்ஃபாரத்துக்குக் கூட்டிச் சென்றார்கள். பிளாட்ஃபாரத்தை நிறைத்து, போலீஸ் தலைகள். ஒரு மூலையில் ஸ்ட்ரெச்சர் தெரிந்தது. ரத்தத்தில் நனைந்த போர்வையை போலீஸ்காரர் விலக்கினார்.
கருநீலமான முகத்துடன் ரங்கா அடங்கிக்கிடந்தான். உடல் முழுக்க ரத்தம் திட்டுத் திட்டாக உறைந்திருந்தது.
“ரங்கா... ரங்கா. பெருமாளே... என்னடா அக்கிரமம் இது?" என்று ரங்காவின் அம்மா ஓலமிட்டாள். வேதவல்லி ஸ்ட்ரெச்சரில் தலையை மோதி மோதி அழத் தொடங்கினாள். ஜானுவும் கண்ணனும் பொறுக்காமல் கதறினார்கள்.
ஆஜானுபாகுவான அந்த காவல் துறை உயர் அதிகாரி நெருங்கினார். குன்றிப்போய் ரங்காவின் அம்மா அருகே குனிந்தார். “மாஜீ! கலவரத்துல ஈடுபட்ட மூணு பேரைக் கைது பண்ணிட்டோம் மாஜீ" என்றார்.
“அதனால..? ரங்காவோட உயிர் திரும்ப வந்துடுமா?" என்று வீறிட்டாள் ரங்காவின் அம்மா.
பதில் சொல்ல முடியாத அந்தக் கேள்விக்குப் பதில் தேடுவதற்குள் அவருடைய வாக்கிடாக்கி கரகரத்தது.
காவல் துறையின் அராஜகத்தை எதிர்த்து பொதுமக்கள் ஆங்காங்கே திரண்டு ரயில் பாதைகளின் குறுக்கே கூட்டமாக உட்கார்ந்து மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதை உடனே கவனிக்கச் சொன்னது!
|