அயல்நாடுகளிலிருந்து எப் போது எந்தக் கப்பலில் என்ன சாமான்கள் வரும் என்ற செய்தி முதலில் வெளிநாட்டிலிருந்து எனக்குதான் கிடைக்கும். நான் அந்தச் செய்தியை, நைலான் குழந்தைச் சட்டையில் ரகசிய எழுத்துக்களில் பின்னி, ஒரு பெட்டியில் போட்டு, பெட்டி பெட்டியாகச் சம்பந்தப்பட்ட வர்களுக்குப் பரிசுகள் அனுப்பு வதுபோல அனுப்புவது வழக் கம்!''
இதைச் சொன்னதும் கண் களை மூடிக் கொண்டாள் பிரபாவதிதேவி. ரத்தம் அதிக அளவில் வெளியேறியதால் களைப்படைந்திருந்தவள், மெது வாகக் கண்களைத் திறந்து மீண்டும் சொல்லத் தொடங்கி னாள்.
''உயர்ந்த கடிகாரங்களும் விலைமதிக்க முடியாத வைரங் களும் பணமாக மாறி மொத்தப் பணமும் கேசவதாசுக்கு வந்துவிடும். அவர் அதை எல் லாருக்கும் பகிர்ந்து கொடுப் பார். பெரிய ஐயாவுக்கு இந்தப் பணத்தில் பெரும் பங்கு போய்ச் சேரும். அந்தப் பெரிய ஐயா யார் தெரியுமா?''
பிரபாவதிதேவியின் இந்தக் கேள்விக்குச் சுற்றியிருந்தவர் களில் எவருமே பதில் சொல்ல வில்லை. பிரபாவதிதேவியே தொடர்ந்தாள்...
''அந்தப் பெரிய ஐயா நான் தான்! நான்தான் இந்தக் கொள் ளைக் கூட்டத்தைப் பெரிய ஐயா என்ற பேரில் நடத்தி னேன். பெரிய ஐயா என்றால் கூட்டத்தைச் சேர்ந்த அத்தனை பேர்களும் அஞ்சுவார்கள். எனக்குப் பெரிய ஐயா ரொம்ப வேண்டியவர் என்று எல்லோ ரும் நினைத்தார்கள். அதனால் பெரிய ஐயா என்ற பெயரைச் சொல்லி என்னால் எல்லாரை யும் மிரட்ட முடிந்தது.
குழந்தைச் சட்டைகளை அட்டைப் பெட்டிகளுள் வைத்து அனுப்பும்போது, அவை ஒழுங்காக உரியவர்களுக் குப் போய்ச் சேருகின்றனவா என்பதைப் பார்க்கச் சில வேளைகளில் பெரிய ஐயா அனுப்பியதாக நான் சொல்வது உண்டு.
மருதநம்பி நம்பிக்கையோடு நடந்துகொண்டதால் அடிக்கடி நான் அவருக்கு இந்த வேலை களைக் கொடுத்தேன். அப்படி ஒரு தரம் சில பெட்டிகளை மருதநம்பிக்கு அனுப்பி உரிய வர்களிடம் சேர்ப்பிக்கச் சொன்னபோது, என் விலாச முள்ள பெட்டியை, வழக்கத் திற்கு மாறாக மணிமொழி கொண்டு வந்து தந்தாள். உடனே, அவளையும் எங்கள் கூட்டத்தில் சேர்த்துவிடுவது என்று முடிவெடுத்தேன்.
விவரம் ஏதும் அறியாத மணிமொழி, எதிர்பாராத விதமாகக் கேசவதாஸ் கொலை வழக்கில் சிக்கிக் கொண்டாள். மணிமொழி என்னை வந்து பார்ப்பதற்குச் சற்று முன்னர் தான் நான் கேசவதாஸைச் சுட்டுக் கொன்றுவிட்டு வந்தி ருந்தேன்.
அவர் நான் கேட்டபோதெல் லாம் எனக்குப் பணம் தர வில்லை. என்னை ஏமாற்றவும் முயன்றார். அது மட்டுமல்ல, 'இனிமேல் நான்தான் பெரிய ஐயா' என்றார். பொறுமை இழந்த நான் அவரைச் சுட்டு விட்டு, ஓடி வந்துவிட்டேன்!''
உதவிப் போலீஸ் கமிஷனர் தன் டைரியில் அவள் சொல் வதை ஒன்றுகூட விடாமல் எழுதிக்கொண்டே வந்தார்.
''கேசவதாஸ் கொலை வழக் கில் மணிமொழியைச் சிக்க வைத்துவிட்டு நான் தப்பித்துக் கொள்ள எண்ணினேன். மணி மொழி பம்பாயிலிருந்து போய் விட்டால், மணிமொழி ஓடி விட்டாள் என்ற செய்தி பர வும்; அவள் குற்றவாளி என்று அவள் மேல் பழி விழும் எனக் கருதி, மணிமொழியைச் சென் னைக்கு அனுப்பத் திட்டமிட் டேன். அதன்படி, அவள் சில பெட்டிகளை எடுத்துக் கொண்டு சென்னைக்குப் போகும்படி செய்தேன்.
மருதநம்பி கைது செய்யப் பட்டார். எங்கே அவர் உண் மையைச் சொல்லிவிடுவாரோ என அஞ்சி, மருத்துவ விடுதி யிலிருந்த அவரை அங்கிருந்து தப்புவிக்கச் செய்தேன். பின் னர், அவரைத் தீர்த்துக் கட்டுவ தற்காகச் சென்னைக்குப் புறப் பட்டேன்.
என் திட்டப்படி, 'பெரிய ஐயா'வின் கட்டளைப்படி, தங்கதுரை மருதநம்பியைச் சுட்டுக் கொன்றுவிட்டான். ஆனால், அதே தங்கதுரை என் திட்டத்திற்கு மாறாக என் னையே சுட்டுவிட்டான்.
தீமை வென்றதாகச் சரித் திரமே இல்லையே! என் வாழ் வில் மட்டும் எப்படித் தீமை வெல்லும்? நான் உண்மைகள் அனைத்தையும் அப்படியே சொல்லிவிட்டேன். என் கூட் டத்தைச் சேர்ந்தவர்களது பட் டியல் என் குறிப்புப் புத்தகத்தில் இருக்கிறது. இதற்கு மேலும் நான் சொல்வதற்கு ஏதும் இல்லை!'' என்றாள் பிரபாவதி தேவி. இந்த நேரத்தில் அங்கே வந்த பொன்மலை, பிரபாவதி தேவியின் கைக்கடிகாரத்தை உதவிப் போலீஸ் கமிஷனரிடம் கொடுத்தார்.
தன் கைக்கடிகாரத்தைப் பார்த்ததும் பிரபாவதிதேவியின் கண்கள் ஒருமுறை மின்னின. அடுத்த கணம் அவள் உயிர் பிரிந்தது.
30. சிவகாமியின் தியாகமே பெரிது!
மங்கிய மாலைப் பொழுதி னிலே, மண்ணில் உட்கார்ந் திருந்த மணிமொழியின் கால்களையும் முத்தழகின் கால்களையும் கடல் அலைகள் கழுவிச் சென்றன.
முத்தழகு, மணிமொழியின் கையை எடுத்துத் தன் கையில் வைத்துக்கொண்டான். காதல் மொழிகள் கரை புரண் டன. பின்பு, அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டான். கொஞ்ச நேரம் அப்படியே மௌனமாக இருந்தவன், ''மணி, அண்ணா அவர் பையனுக்கு என் நினைவாக முத்தழகு என்று பெயர் வைத்திருக்கிறார். நீ இளங்கோ என்று புளுகிவிட்டாயே!'' என்றான்.
மணிமொழி மெல்லச் சிரித்துக்கொண்டே, ''நீங்கள் எனக்குக் கணவராக வரப்போகிறீர்கள் என்பது எனக்கு அப்போதே தெரியும்! அதனால்தான் நான் அந்தப் பெயரைச் சொல்லவில்லை! இளங்கோவை யார் என்ன பெயர் சொல்லிக் கூப்பிட்டாலும், நான் இளங்கோ என்றுதான் கூப்பிடப் போகிறேன்'' என்றாள்.
''நீ மட்டும் என்ன, அவனுக்கு அம்மாவாகப் போகிற சிவகாமியே அவனை இளங்கோ என்றுதான் கூப்பிடுகிறாள். அதனால், எல்லாருமே அவனை இளங்கோ என்றுதான் கூப்பிடுவார்கள்!'' என்று சொன்ன முத்தழகு, மணிமொழியின் உதடுகளில் விரலை வைத்து, ''மணிமொழி, உன் தியாகம் மிகப் பெரிது!'' என்றான். இதைச் சொல்லும்போது அவன் கண்கள் கலங்கின.
''இரண்டு கண்களையும் இழந்துவிட்ட, ஒரு பையனைப் பெற்றுவிட்ட உங்கள் அண்ணனைச் சிவகாமி நாளைக்கு கல்யாணம் செய்துகொள்ளப் போகிறாளே, அதைவிடவா என் தியாகம் பெரிது? சிவகாமியின் தியாகமே சிறந்தது!'' என்றாள் மணிமொழி. இதைச் சொல்லும்போது அவள் கண்களும் கலங்கின.
மணிமொழி, நாளை உனக்குத் திருமணம். தீர்க்க சுமங்கலியாக இரு. உனக்கு ஒரு குறையும் வராது. 'மணிமொழி நீ என்னை மறந்து விடு!' என்று உன்னிடம் உன் கணவன் சொல்லாமல் பார்த்துக் கொள். வாழ்க நீ! வளர்க நீ!
(முற்றும்)
|