தஞ்சாவூர்க்காரர். தஞ்சையிலும், காரைக்குடியிலும் படித் தார். ஜாதகப்படி பிள்ளையும் தாமும் ஒன்றாக இருக்கக் கூடாது என்று தந்தை நம்பிய தால், பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு, பதினாலாவது வயதில் சென்னைக்கு வந்து நடிகரானவர் முத்துராமன். சுமாராகப் பாடத் தெரியும் என்பதைத் தவிர, வேறு நாடக மேடை அனுபவம் எதுவும் கிடையாது.
அப்போது மவுன்ட் ரோடு சுகுண விலாச சபை அரங்கத் தில் நடைபெற்று வந்த வைரம் செட்டியாரின் ராம பால கான சபையின் நாடகங்களில் நடித் தார். எஸ்.எஸ்.ஆருடன் சேர்ந்து சிறிது காலம் நடித்தார். பிறகு 'வைரம் நாடக சபா'வில் சேர்ந்து பல இடங்களுக்குச் சென்று நாடகங்கள் நடத்தி விட்டு, கடைசியாக சேவா ஸ்டேஜில் வந்து அடைக்கலம் புகுந்தார். 'என்னை நடிகனாக்கி, பல விதங்களில் உதவி புரிந் துள்ளவர் திரு.சகஸ்ரநாமம் தான். இன்றைக்கும் எனக்கு சான்ஸ் கொடுக்கவேண்டும் என்பதற்காக என் சௌகரியத்தை உத்தேசித்துத் தம் நாடகங்களை ஒத்தி வைத்துக் கொள்கிறார்.அதே போல் டைரக்டர் ஸ்ரீதரும் தம் சொந்தப் படங்களிலும், அவர் டைரக்ட் செய்யும் படங்களிலும் நல்ல பாத்திரங்களாக அமைத்து எனக்கு சான்ஸ் கொடுக்கிறார். தந்தை, தாய்க்குப் பின், இவ்விருவர்களைத்தான் நான் போற்றி வணங்குகிறேன்''என்கிறார் முத்துராமன்.
அவர் முக்கியமாக மூன்று கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறார்.
1. சினிமா தியேட்டர்கள் போல் நிறைய நாடகக் கொட்டகைகள் ஏற்பட வேண்டும். அவற்றில் தினம் நாடகங்கள் நடக்க வேண்டும். அதற்குச் சர்க்கார் ஆதரவும் இருக்க வேண்டும். அப்படிச் செய்தால் சினிமாவுக்குப் புதுப்புது நடிகர்களும் கதாசிரியர்களும் கிடைப்பார்கள்.
2. சினிமாவில் நுழையும் புதுமுகங்கள், முன்னணியில்உள்ள நட்சத்திரங்களிடம் மரியாதையுடனும் பண்புடனும் பழகவேண்டும். தொழிலில் ஈடுபட்ட உடனேயே பெரிய நடிகனாகிவிட்டோம் என்று நினைத்து, அனுபவம் வாய்ந்தவர்களைப் பற்றிக் கேவலமாகவோ அலட்சியமாகவோ பேசக் கூடாது.
3. புதுமுகங்களுடன் நடிப்பதற்கு பெரிய ஹீரோயின்கள் மறுக்காமல் முன் வர வேண்டும். இந்திப் படங்களில் ராஜேந்திர குமார், ஜாய்முகர்ஜி போன்றவர்களுடன் ஆரம்பத்திலேயே முன்னணியிலிருக்கும் ஹீரோயின்கள் நடித்திருக்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.
|