காந்தியின் தோல்வி
இந்த விஷயத்தில், விகடன்கூட காந்திஜியை ஆதரிக்க முடியாமலிருப்பதற்காக மிகவும் வருந்துகிறான். சுபாஷ்போஸின் கட்சியைத்தான் விகடன் ஒப்புக்கொள்ள வேண்டியதாகிறது. சென்ற இதழில் அவருடைய வெற்றிக்குக் காரணங்கள் இன்னின்னவையென்று விகடன் எழுதிய பிறகு, சுபாஷ் போஸ் ஓர் அறிக்கை விடுத்திருக்கிறார். அதில், விகடன் கூறிய காரணங்களையேதான் அவரும் கூறியிருக்கிறார்.
''தேர்தல் போட்டி உங்களுக்கும் எனக்குமா நடந்தது? இல் லையே? பின் உங்களுக்கு எப்படித் தோல்வி?'' என்று சுபாஷ் பாபு மகாத்மாவைக் கேட்கிறார்.
''என் கொள்கைகளின் பிரதிநிதியே நான்; என் கொள்கைகளுக்குத் தோல்வி ஏற்பட்டிருக்கிறது; அது என்னுடைய தோல்விதான்!'' என்று காந்திஜி விளக்கிச் சொல்லியிருக்கிறார்.
இதற்கு, சுபாஷ் என்ன சொல்கிறாரென்றால், ''இந்தத் தேர்தல் போட்டியில் காந்திஜியின் கொள்கைகளோ என்னுடைய கொள்கை களோ பிரச்னையாக வைக்கப்படவில்லையே?
1. காங்கிரஸ் பிரதிநிதிகளின் வோட்டு சுதந்திரம்
2. பெடரேஷனுக்கு தீவிர எதிர்ப்பு
ஆகிய இரண்டு விஷயங்களைத்தான் என்னுடைய தேர்தல் விண்ணப்பத்தில் குறிப்பிட்டேன். இவைதான் எனக்கு வெற்றி அளித்தன. மேற்கொண்டு, அபேட்சகர்களின் தராதரத்தையும் பிரதி நிதிகள் கவனித்திருக்கலாம். மற்றபடி, காந்திஜியின் கொள்கைகளுக்கு மாறாக என்னுடைய கொள்கைகளுக்கு அவர்கள் வோட்டுக் கொடுத்து விடவில்லை'' என்கிறார்.
''ரொம்பச் சரி'' என்றுதான் இதற்கு விகடன் ஒப்பம் வைக்க வேண்டியதாயிருக்கிறது.
|