தீண்டாமை!
ஆசையாய்
அடம்பிடித்து வாங்கிய
மயில் கழுத்து பார்டரில்
தாழம்பூ தவழும்
பட்டுப் பாவாடை
பத்திரமாகத்
தூங்குகிறது பெட்டியில்.
பலவித பலகாரங்களைப்
படையிலிடுகிறாள் அம்மா
என்னை
பட்டினி போட்டுவிட்டு.
அடிவயிற்றில்
பிசையும்
வலியோடு அவளை
அணைத்து அழ
நெருங்குகையில்
'தொடாதே...
தீட்டு ஒட்டிக்கும்'
என்கிறாள் கோபமாக!
அப்பா முதுகில்
உப்பு மூட்டை தொங்கியபடி
பழிப்புகாட்டி
சிரிக்கிறாள் இன்னும்
பருவமெய்தாத் தங்கை.
கருகும் பூக்களென
கைப்பட்டாலென
செடிக்கு நீரூற்றும் உரிமையும்
மறுக்கப்படுகிறது எனக்கு.
சனி மூலை, அக்னி மூலை
தெற்கு மூலை, குபேர மூலை என எந்த மூலையிலும்
எனக்கோர் இடமின்றி
தள்ளப்படுகிறேன்
வீட்டுக்கு வெளியே.
பொம்பளத் தீட்டு
அம்மனுக்கு ஆகாதாம்.
அம்மனும் பெண்தானே...
அப்புறமேன் ஆகாது?
தனிமை மட்டுமே
துணையிருந்த இரவில்
இடி சத்தத்துக்கும்
பூனையின் அலறலுக்கும்
பயந்து
தூக்கம் தொலைத்த
இரவின் மறுநாள்
இரும்புத் துண்டை நீட்டி
அம்மா சொன்னாள்...
'வெச்சுக்க... இல்லேன்னா
பேய் பிடிச்சுடும்!'
வேகமாக
வீசி எறிகிறேன் அதை.
கோபமென அவள்
நினைத்திருக்கக் கூடும்.
உண்மையில்,
பேய்க்காவது என்னைப்
பிடிக்கட்டுமே என்கிற
நப்பாசைதானே தவிர
மற்றபடி
வேறொன்றும் இல்லை!
- சுமதி பெனடிக்ட் |