இன்று இந்திய சினிமா வானில் ஓர் ஒப்பற்ற நட்சத்தி ரமாகப் பிரகாசித்துக்கொண்டுஇருக்கிறார் ஸ்மிதாபடீல். 12 ஆண்டுகளுக்கு முன்பு, 17 வயது மங்கையாக, பம்பாய் டி.வி-யில் செய்தி படித்துக் கொண்டு இருந்த பெண், கலைப்படங்களில் நடிக்கத் தொடங்கி, இன்று வியாபார ரீதியான பல்வேறு மொழிப் படங்களில் நடித்து, மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக மின் னிக்கொண்டு இருக்கிறார்.
அவர் நடித்த 'பூமிகா', 'சக்ரா' இரு படங்களுக்கும் அவருக்குத் தேசிய விருது கிடைத்துள்ளது. கடந்த ஜூலையில் அவருக்கு பிரான்ஸ் நாட்டின் திரைப்பட விழாவில் 'ரெட்ராஸ்பெக்டிவ்' கௌரவம் கிடைத்துள்ளது. அதாவது, அவர் நடித்துள்ள ஏழு படங்கள் அங்கு இரண்டு ஊர்களில் வரிசையாகத் திரையிடப்பட்டன. சாதாரணமாகச் சிறந்த டைரக்டர்களுக்குத்தான் இந்தக் கௌரவம் வழங்கப்படுவது வழக்கம். இந்தியாவில், சத்யஜித்ரே, மிருணாள் சென், ஷ்யாம் பெனகல், குருதத் ஆகிய டைரக்டர்களின் படங்கள் 'ரெட்ராஸ்பெக்டிவ்' கௌரவம் பெற்றிருக்கின்றன.
இந்தக் கௌரவத்தைப் பெறும் முதல் இந்திய, ஆசிய நடிகை ஸ்மிதாதான். உலகிலேயே லிவ் உல்மன், மெர்ல் ஸ்ட்ரீட் இருவருக்கும் பின்னர் ஸ்மிதா இந்தக் கௌரவத்தைப் பெற்றிருக்கிறார். அது மட்டுமல்ல, மான்ட்ரியல் உலகத் திரைப்பட விழாவில், ஏழு ஜூரிகளில் ஒருவராகப் பணியாற்றும் அரிய வாய்ப்பையும் பெற்றிருக்கிறார் ஸ்மிதா.
1955 அக்டோபர் 17-ம் தேதி பிறந்தவர் ஸ்மிதாபடீல். 29 வய தில் உலக அரங்கில் இத்தகைய மகத்தான கௌரவங்களைப் பெற்றுள்ள ஸ்மிதாபடீலை விகடன் மனமார வாழ்த்துகிறான்.
|