துப்பறியும் படங்களைப் பார்ப்பது போன்று அத்தனை ஈர்ப்பு. எங்கே டவ் மோஸ்மெனைச் சந்திக்க முடியாமலே இந்தப் பயணம் முடிந்துவிடுமோ என்ற ஆதங்கம் பார்ப்பவர் மனதில் உருவாகிறது. இருவரும் சந்திக்கிற நிமிடத்தில் பார்வையாளன் தானே அந்த எழுத்தாளரைக் கண்டுபிடித்தது போல உணர்கிறான். சிறந்த டாகுமென்டரிக்கான உலகத் திரைப்பட விழா விருதுகள் பல பெற்றுள்ள இந்த ஆவணப் படம் நிறையக் கேள்விகளை எழுப்புகிறது.
ஏன் காரணம் இல்லாமல் ஒன்றைப் புறக்கணிக்கிறோம்? நம்மைச் சுற்றிய கலைஞர்களை, கலைகளைக் கொண்டாட ஏன் மறந்துபோனோம்? நமது புத்தக அலமாரியில் உள்ள படிக்கப்படாத புத்தகத்தில் ஒன்று நம் சிந்தனையை மாற்றி விடக்கூடியது என்பதை எதற்காக மறந்துபோகிறோம்? பாராட்டும், அங்கீகாரமும், தொடர்ந்த அரவணைப்பும் இல்லாத கலைஞன் ஒடுங்கிப்போய்விடுவான். அல்லது கலையைவிட்டு விலகிப் போய்விடுவான் என்ற உண்மையை ஏன் நாம் புரிந்துகொள்வதே இல்லை?
இந்த டாகுமென்டரி என்னை மிகவும் பாதித்தது. தமிழில் 'இடைவெளி' என்ற சிறந்த நாவலை எழுதிய சம்பத் நினைவுக்கு வந்தார். அவர் ஒரே ஒரு நாவல் மட்டுமே எழுதினார். கூடுதலாக ஐந்தாறு சிறுகதைகள் எழுதியிருக்கக்கூடும். ஆனால், அது புத்தகமாக வரவில்லை. இந்த ஒரு நாவலின் வழியே சம்பத் என்றென்றும் தமிழ் நாவல் உலகில் முக்கிய இடம் பெற்றிருப்பார். சம்பத்தை இன்றுப் படிக்கத் துவங்கும் ஒரு வாசகன், நிச்சயம் மாஸ்கோவிட்ச் தேடிச் சென்றது போன்று அலையக்கூடும். அவனுக்கு மிச்சமாகக் கிடைப்பது 40 வயதுக்குள்ளாகவே இறந்துபோய்விட்ட சம்பத்தின் நினைவு மட்டுமே.
கவனமின்மையும் புறக்கணிப்பும் இரண்டும் சகோதரர்கள் போலும், இரண்டும் ஒன்றாகவே வருகின்றன. அல்லது ஒருவர் வந்தவுடன் மற்றவர் இணைந்துகொண்டுவிடுகிறார்.
சிறு வயதில் கிராமக் கோயிலில் நாகஸ்வரம் வாசிப்பவர்களின் மயக்கும் இசையை மெய்ம்மறந்து கேட்டபடியே நிற்பேன். காற்றெங்கும் நாகஸ்வரத்தின் நறுமணம் பரவிக்கொண்டு இருக்கும். உலகின் உன்னதமான இசை அது. மேளமும் நாகஸ்வரமும் இணைந்து கோயில் சிலைகளைக்கூட கைகால் வீசித் துடிக்கச் செய்யும்படியாக இருக்கும். வசீகரமான சர்ப்பம் ஒன்று நெளிந்து உடல் அழகைக் காட்டியபடியே, துடிக்கும் நாவுடன் ஒளிரும் கண்களுமாக வேகவேகமாகக் கடந்து செல்வது போன்றிருக்கும், அந்த இசையின் தன்மை.
மிக நன்றாக வாசிக்கிறார்கள் என்று பாராட்டிச் சொல்ல வேண்டும் என்று மனதில் தோன்றும். ஆனால், சொன்னதே இல்லை. அவர்களின் பெயர்களைக்கூட அறிந்துகொள்ள ஆர்வப்பட்டது இல்லை. என்ன காரணம்? யோசிக்கையில் அவமானமாக இருக்கிறது.
அவர்கள் பிரபலமானவர்கள் இல்லை. அவர்களின் இசை குறுந்தகடாகவோ, இசைத்தட்டாகவோ வெளியானது இல்லை. அருகாமைக் கிராமங்களைத் தாண்டி அவர்கள் பெரிய கச்சேரிகளுக்குச் சென்று தங்கள் இசைத் திறமையைக் காட்டி பாராட்டுகள் பெற்றதில்லை. துளசிச் செடிகளைப் போல அவர்கள் கோயில் மாடத்துக்குள்ளாகவே ஒடுங்கி, தங்கள் வாழ்க்கையின் பாதியைக் கடந்து போய்விட்டார்கள்.
காலம் அவர்களை எப்போதுமே புறக்கணிப்பின் பிடிக்குள்ளாகவே வைத்திருந்தது. தெரு அதிர சாமி தேரில் உலா வரும்போது, அவர்கள் மல்லாரி வாசித்தபடியே முன்னால் வருகிறார்கள். வீதியெங்கும் மலர்களை வீசி எறிவது போன்று இசை உதிர்கிறது. ஆயிரம் கைகள் சாமியைக் கும்பிடுகின்றன. ஒரு கரம்கூட வாசிப்பவர்களின் திறமைக்குக் கை தட்டுவதில்லை. அன்போடு ஒரு வார்த்தை சொல்வதில்லை. கடவுளின் மௌனத்தைவிடவும் மனிதர்களின் மௌனம் கொடுமையானது.
|