மிருகண்டு மகரிஷி தம் மனைவி மருத்து வதியுடன், எளியதொரு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். நிறைவான வாழ்க்கைதான் எனினும், கொஞ்சி விளையாட ஒரு குழந்தை இல்லையே என்ற குறை இருந்தது. ரிஷியும் ரிஷிபத்தினியும் ரிஷபவாகனனிடம் குழந்தை வரம் அருளுமாறு யாசித்தனர்.
ஒருநாள் இரவு, முனிவரின் கனவில் முக்கண்ணன் எழுந்தருளினான். 'நூறு ஆண்டுகள் வாழக்கூடிய, ஆனால் மந்த புத்தியுள்ள மைந்தன் வேண்டுமா? அல்லது, பதினாறு ஆண்டுகளே ஆயுள்கொண்ட ஞானக் குழந்தை வேண்டுமா?' என்று கேட்டார்.
முனிவர் ஞானக் குழந்தையே வேண்டும் என்று உரைக்க, அவ்வாறே அருளிய ஈசன் மறைந்தார்.
மருத்துவதி கருவுற்றாள். உரிய காலத்தில் ஆண் மகவை ஈன்றெடுத்தாள். மார்க்கண்டேயன் என்னும் பெயரோடு, குழந்தை வளர்ந்தான். அழகில் அர்ச் சுனன்; ஒழுக்கத்தில் ஸ்ரீராமன்; குறும்புகளில் பிருந்தாவனத்து நந்தகுமாரன்; அறிவிலோ அந்த ஆதிசங்கரனே!
மார்க்கண்டேயனுக்குப் பதினைந்து வயது பூர்த்தி ஆகியது. தமது குலக்கொழுந்து பதினாறாவது ஆண்டு நிறைவன்று ஆயுள் துறக்க நேரிடுமே என மனம் வருந்திக் கண்ணீர் சிந்தினார் முனிவர். விஷயம் அறிந்து, மருத்துவதி கதறி அழுதாள். மார்க் கண்டேயனோ, ''கயிலைநாதனின் கருணையால் உதித்த உயிரை அழைத்துக்கொள்ளவோ, 'இங்கேயே இரு' என்று ஆசீர்வதிக்கவோ அவருக்குத்தான் அதி காரம் இருக்கிறது. ஈசனின் தலங்கள் அத்தனைக்கும் யாத்திரையாகச் சென்று, அவன் அடி பணிவோம். எனது ஆயுளை அதிகரிப்பதோ அபகரிப்பதோ அவன் திருவுளப்படி ஆகட்டும்'' என்றான்.
பல தலங்களில் பரமேஸ்வரனைத் தரிசித்தார்கள். பதினாறாம் ஆண்டு நிறைவு பெறும் நாளன்று திருநாவாய் வந்தடைந்தார்கள். மார்க்கண்டேயன் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை உச்சரித்தபடி திருநாவாய் முகுந்தனைத் தரிசிக்க ஆலயத்துள் நுழைந்தான்.
அது சமயம், கூற்றுவனும் அங்கு வந்து சேர்ந் தான். ஆலயத்துள் சென்ற மார்க்கண்டேயன் வெளி வர வாயிலில் காத்திருந்தான்.
மார்க்கண்டேயனிடம், வாயிலில் எமன் காத்து இருப்பதைச் சொன்ன மாலன், எமனை மருட்ட வல்லவர் மகாதேவனே என்பதால், அருகிலிருக்கும் திருப்பரங்கோடு ஆலயத்துள் உறையும் மகாதேவனைச் சரணடையுமாறு கூறி, ஆலயத்தின் பின் வாசல் கதவைத் திறந்து, அனுப்பிவைத்தார்.
மார்க்கண்டேயன், மகாதேவன் ஆலயம் வந்து அடைந்தான். செய்தி அறிந்த கூற்றுவனும் மகாதேவனின் ஆலயத்தை அடைந்தான். கூற்றுவனைக் கண்ட மார்க்கண்டேயன், உடனே ஓடிச் சென்று 'அபயம்' என மகாதேவனைத் தழுவினான்.
கூற்றுவன் வீசிய பாசக் கயிறு மார்க்கண்டேயனை மட்டுமின்றி, மகாதேவரையும் சேர்த்துக் கட்டியது. அடுத்த கணம், சிவ லிங்கம் இரண்டாகப் பிளந்தது. |