தொடர் வேலையின் காரணமாக, ஓய்வே இல்லாமல் அலைந்த காரணத்தினால் மார்ட்டின் உடல் நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் காலையில் அவருக்கு ஒரு தொலைபேசி வந்தது. பேசியவர் கராட்டா. அவரது குரலில் அபரிமிதமானஉற்சா கமும் மகிழ்ச்சியும் வழிந்துகொண்டு இருந்தது. ''மார்ட்டின், நியூயார்க் டெலிவிஷன் நெட்வொர்க்கில் இருந்து பேசினார்கள். உங்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்து இருக்கிறதாம்.''
மார்ட்டினால் அதை நம்ப முடியவில்லை. மகிழ்ச்சி அவரது எண்ணங்களின் கட்டுப்பாடுகளை உடைத்துக்கொண்டு பீறிட்டது. ''இது எனக்கு மட்டுமே சொந்தம் இல்லை. என்னோடு பேருந்து நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் சொந்தமானது'' எனத் தீர்மானித்துக்கொண்டார்.
1964, டிசம்பர் 10-ம் நாள் நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில்... அந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை மார்ட்டின் பெற்றார். அப்போது அவருடைய வயது 33. இத்தனை சிறிய வயதில் அந்த விருதை இதற்கு முன் எவரும் வாங்கியது இல்லை. அன்றைய தினம் அவர் ஆற்றிய உரையும் ஒரு தலை சிறந்த உரையாக மாறியது. 'இன அநீதி என்ற நீண்ட இரவுக்கு முடிவுகட்ட அமெரிக்காவின் 22 மில்லியன் கறுப்பின மக்கள் ஒரு நூதனமான போராட்டத்தில் ஈடுபட்டுகொண்டு இருக்கும் இந்நேரத்தில், அமைதிக்கான நோபல் பரிசை நான் ஏற்றுக்கொள்கிறேன்...' எனத் தொடங்கிய அந்த உரை, இன்றும் கறுப்பின விடுதலை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதிக்கப்படும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
அமெரிக்காவின் டென்னிஸ் மாநிலத்தில் மெம்பிஸ் எனும் நகரம். அங்கு பணிபுரிந்த கிட்டத்தட்ட 1,500-க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டுப் போராட்டம் நடத்தினர். நிர்வாகம் பணிய மறுக்கவே, போராட்டம் தொடர்ந்தது. இதனிடையே தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியை நடத்தத் திட்டமிட்டவர்கள், அதற்கு மார்ட்டினைத் தலைமை ஏற்க வரும் படி அழைப்பு விடுத்தனர்.
1968, மார்ச் 28-ம் நாள் நடந்த பேரணிக்கு மார்ட்டின் தலைமை ஏற்றார். பிரமாண்டமான அந்தப் பேரணியின் ஊடே எதிர்பாராத கல வரம் வெடித்துக் கிளம்ப, பேரணி பாதியில்தடை பட்டது. மார்ட்டின் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், இரண்டாவது முறையாக அந்தப் பேரணி மீண்டும் நடத்தப்பட வேண்டும் எனக் கோரினார். அது போலவே இரண்டாவது முறை அந்தப் பேரணி ஏப்ரல் 4-ம் நாள் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஏப்ரல் 3-ம் நாளே மெம்பிஸ் வந்த மார்ட்டினை இந்த முறை லாரெய்ன் என்ற விடுதியில் தங்கவைத்தனர். அந்த விடுதிக்கு நேர் எதிராக இருந்த இன்னொரு விடுதிக்கு ஒரு மர்ம நபர் கையில் ஒரு பெட்டியுடன் வந்து இறங்கினார். தன் பெயர் ஜேம்ஸ் எர்ல் ரே எனப் பதிவு செய்தான். பகல் வெளிச்சம் விழும்படியான அறை ஒன்றைக் கேட்டு, சாவியை வாங்கிக்கொண்டான்.
மறுநாள் மார்ட்டின் தன்னைச் சந்திக்க வந்த ஜெஸ்ஸி ஜாக்ஸனுடன் பேசியபடி பால்கனிக்கு வந்தார். எதிர் விடுதியில் துப்பாக்கியுடன் காத்திருந்த ரே விசையைத் தட்டிவிட, மார்ட்டின் சத்தம் இன்றிக் கீழே சரிந்தார். கீழே விழுந்த மார்ட்டினைத் தூக்கிய ஜெஸ்ஸி ஜாக்ஸன் கைகள் முழுவதும் ரத்தம். இன வெறிக்கு எதிராக அகிம்சையின் வழியில் போராடிய அந்த மாமனிதருக்கு, காலம் ஜேம்ஸ் எர்ல் ரே எனும் எதிரி ஒருவனை உருவாக்கி, அவன் கையில் துப்பாக்கி ஒன்றையும் கொடுத்து அனுப்பி, அவரது கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
மார்ட்டின் இறந்த சேதி அமெரிக்காவையே உலுக்கி எடுத்தது. வன்முறைக்கு எதிராகக் காலம் எல்லாம் போராடி வந்த அந்த மாமனிதரின் இறப்புச் செய்தி பெரும் வன்முறைகளுக்குக் காரணமாக அமைந்தது ஒரு பரிதாபமான முரண்.
|