பயம்... மனிதனின் ஆதார உணர்ச்சி. எதற்குப் பயம், எதைக் கண்டு பயம் என்ற பட்டியல் முடிவில்லாதது. ஆனால், பயமில்லாத மனிதன் எவனும் இல்லை. பயத்தைக் காட்டிக்கொள்ளாதவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.
பயம்தான் மனிதக் கற்பனையின் ஆதாரப் புள்ளி. பல கண்டுபிடிப்புகளுக்குப் பின்னே பயம் ஒரு விதையாக இருக்கிறது. காந்திஜி இரவில் விளக்கைப் போட்டுக்கொண்டுதான் உறங்குவார் என்ற வரியைப் படித்த என் நண்பர் மிகுந்த சந்தோஷத்துடன், ''இந்த விஷயத்தில் நானும் காந்தி மாதிரி. நான் தூங்கும்போது அறையில் விளக்கு பிரகாசமாக எரிய வேண்டும்'' என்றார். ''நீங்கள்தான் தூங்கிவிடுவீர்களே... பிறகு எதற்கு வெளிச்சம்?'' என்று கேட்டேன். அவர், ''அதைச் சொன்னால் உங்களுக்குப் புரியாது. இந்தப் பிரச்னையால் ரயிலில் போனால், என்னால் தூங்கவே முடியாது'' என்றார்.
உலகம் இப்படி எண்ணிக்கையற்ற பயங்களால் ஆனது. ஒவ்வொரு பயமும் ஒரு பிரச்னையாக வளர்ந்துவிடுகிறது. அதை நாளெல்லாம் சுமந்துகொண்டே அலைகிறோம். சில பயங்கள் காலமாற்றத்தில் வடிந்து போய்விடும். சில பயங்கள் வயதான பிறகுதான் வரவே துவங்கும். பயம் விசித்திரமானது. அதைப்பற்றி நினைக்கத் துவங்கியதும் அதற்கு கைகால்கள் முளைத்துவிடும். ஆக்டோபஸ் பற்றிக்கொள்வது போல நம்மை அது பற்றிக்கொண்டுவிடுகிறது. ஒவ்வொரு வயதிலும் அதற்கேற்ற பயங்கள் நம்மோடு இருக்கின்றன.
எனக்குத் தெரிந்த பேராசிரியர் ஒருவர் சென்னையின் புறநகரில் புதிதாக வீடு கட்டினார். பல வருடக் கனவு அது. வங்கிக் கடனில் கட்டியது. சிறிய குடும்பத்துக்குப் போதுமான வீடு. அந்த வீட்டுக்குக் குடி போன நாலைந்து வாரங்களுக்குப் பிறகு ஒருநாள் என்னைத் தேடி வந்தார்.
''எப்படி இருக்கிறது புதிய வீடு?'' என்று கேட்டேன். ''வீடு நன்றாக இருக்கிறது. ஆனால், பயமாக இருக்கிறது'' என்றார். ''என்ன பயம், உங்கள் வீட்டைச் சுற்றிலும் நிறைய வீடுகள் இருக்கின்றனவே?'' என்றேன். ''பயம் அதைப்பற்றி இல்லை. என் புதிய வீட்டில் பல்லியே இல்லை. 'பல்லி வராத வீட்டில் மனிதர்கள் வாழ முடியாது' என்று என் மனைவி சொல்கிறாள்'' என்றார்.
|