வலிக்க வலிக்க
விடாது தாங்கிப் பிடித்திருக்கும்
நியாயத் தராசை
ஓரம் வைத்துவிட்டு
கொஞ்சம் ஓய்வெடுப்போம்
தீர்ப்புகளற்ற
ஒரு சிந்தனையேனும்
வாய்க்கிறதா பார்க்கலாம்!
மலைப்பிரதேசக்
கனவுக் குடிலொன்றின்
வெளியில் கிடக்கும்
கட்டில் மீது
அமர்ந்திருக்கும்
என்னை நோக்கி
மரத்தடியில் நிற்கும் நீ
ஒரு கவிதை சொல்கிறாய்
ஒவ்வொரு வரியும்
முடித்த பிறகு
உன்னைப் பார்க்காது
மரம் பார்த்திருக்கும்
என் அலட்சியத்துக்காக
ஆதங்கப்படுகிறாய்
நானோ
உன் ஒவ்வொரு வரிக்கும்
மரக்கிளையின் ஒரு கொப்பு
அசைந்தாடும் அற்புதத்தை
அதிசயமாய்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்!
தாய்ப் பாலின்
இதமான வெம்மையில்
கலந்து சுரக்கிறது
தொன்ம நீரோடை!
|