ரெண்டு பிஸ்கட் பாக்கெட்
ரஞ்சனிக்கு
ஆபரேஷன் முடிந்துவிட்டது
ரவிக்கு வண்டியில்
போகும்போது விபத்தாம்
பெரியகோயிலைத்
தரிசித்து வரலாம்
ரஞ்சனியைப் பார்க்கச் சென்றால்
ரொம்ப நாள் ஆசை நிறைவேறும்
பார்த்து மாதங்களாகிவிட்ட மாயவரம் பெரியப்பாவையும்
கண்டு வர வேண்டும்
ரவியிடம் ஆறுதல் சொல்லித் திரும்பும்போது
ரஞ்சனிக்கு ஒரு ஹார்லிக்ஸ், பழங்கள்
ரவிக்கு ஒரு ஹார்லிக்ஸ், பழங்கள்,
கொஞ்சம் பணம்
பட்டியல் போட்டதில்
இயலாமை அறிவிக்கும்
வங்கிச் சேமிப்பு
சகதர்மிணியிடம் பேசிய இரவில்
'ரெண்டு பிஸ்கட் பாக்கெட்டோடுதான் வந்தாங்க என் சிசேரியனுக்கு'
என்றாள் தீர்மானமாய்!
- கணேசகுமாரன்
|