''ஓ..!'' கண்களை உருட்டினார்.
''முட்டி முட்டியா... கள்ளு! மூச்சுமுட்டக் கஞ்சா! அதுதான் அந்த ஆளுக்கு அன்ன ஆகாரமெல்லாம்! கண்ணைச் சுருக்கிச் சொன்னா... சொன்னதுதான். அத்தனையும் பலிக்குது!''
பாரதி, நெஞ்சு நிறையச் சிரித்தார். ''அவை எல்லாவற்றிலும் எமக்கும் இஷ்டம் உண்டு. எமது சகவாசத்துக்கு கோவிந்தசாமிப் புலவன் சிலாக்கியமான ஆள்தான் போலிருக்கிறது!''
''எட்டையபுரத்துல இருந்து நடந்தே வந்திருக்கீங்களே. பசி ஆறுனீங்களா சாமி?'' பாரதியின் காலடியில் குத்தவைத்தான்.
''மாரிச்சாமி நாயக்கன் வீட்டில் மதியம் குடித்தது கம்பங் கஞ்சி. இரவு... 'இருளாண்டித் தேவன் வீட்டுக் கஞ்சி' என்பது கொடுப்பினை.''
''சாமீ..!''
''ஏன் பதறுகிறாய்?''
''ஐயர் மகன் நீங்க! நாங்க... கம்பஞ்சோத்தையும் கருவாட்டுக் கொழம்பையும் பெசஞ்சு திங்கிற ஆளுக.''
''ஆஹா... எச்சில் ஊறுகிறதே! போ... போ... போய் கஞ்சியையும் கருவாட்டையும் சீக்கிரம் கொண்டுவா.''
''ஆத்தாடீ! அந்தப் பாவத்தை நான் செய்ய மாட்டேன் சாமி'' - இருளாண்டித்தேவன் எழுந்தான். ''கொஞ்சம் இங்ஙனயே தாமசிங்க சாமி. பெருநாழியிலே ஒரு ஐயர் வீடு இருக்கு. குருநாத சாமி வீடு. அங்கே போயி 'ஒங்க சோறு' ஏதாச்சும் வாங்கியாறேன்.''
''ஏய்!'' கை நீட்டினார்.
சொல் கேட்காமல் இருளாண்டித் தேவன் வேகமாக நடந்தான்.
''சாமீ... சாமீ!''
''யார்றா அவன் இந்நேரம்?'' வீட்டுக்குள் இருந்து குருநாத சாமியின் வெண்கலக் குரல், வாசலை அறுத்தது.
''காவக்கார இருளாண்டி வந்திருக்கேன் சாமி.''
''என்னடா... சொல்லு'' - வெளியே வரக் காணோம்.
''ஒங்க வர்ணாச்சியத்தோட ஒரு சாமி வந்திருக்காரு. வைரவன் கோயில் பொட்டல் ஆலமரத்தடியிலே ஒக்காந்திருக்காரு. பாவம்... பசிக்குதாம்! 'சாமி வீட்டு ஆகாரம்' ஏதாச்சும் குடுத்தீங்கன்னா... அவரைப் பசி ஆத்தலாம்.''
குருநாதசாமி கதவைத் திறந்தார். ''எந்த ஊர் சொன்னான்?''
''எட்டையபுரமாம்!''
''என்ன பேர் சொன்னான்?''
''சுப்ரமணிய பாரதியாம்!''
''மீசை வெச்சிருக்கானா?''
''ஆமா சாமி. நல்லா முறுக்கிவிட்டுருக்காரு!''
''முண்டாசு கட்டியிருக்கானா?''
''ராசா மதிரி முண்டாசு!''
''பூணூல் போட்டிருக்க மாட்டானே!''
''இருட்டுல நான் கவனிக்கலே சாமி.''
''அவன் பட்டினி கெடந்தே சாகட்டும்'' - வீட்டுக்குள் திரும்பினார்.
''சாமீ!'' - இருளாண்டித்தேவன் கை ஏந்தினான்.
''கோத்திரம் கெட்ட அந்தக் கிறுக்குப் பயலை... எங்காள் ஜாதிப் பிரஷ்டம் பண்ணி இருக்கான்! பச்சத் தண்ணிகூட குடுக்க முடியாது. போ... போ!'' கதவைச் சாத்தினார்.
பாறையில் மலர்த்திவைத்திருந்த முண்டாசுக்குள் கருநாகம் சுருண்டுகிடந்தது. எட்டுத் திக்கும் பறந்து திரும்பிய வெளவால்கள், கனி வர்க்கங்களை பாரதியின் கை வாக்கில் அடுக்கி இருந்தன.
''ஆஹா... என்னே ருசி! என்னே ருசி!'' - கலயத்துக் கம்பங் கஞ்சியை மாந்தினார். ஒரு வாய் கஞ்சிக்கு, ஒரு வெங்காயத்தை, உப்புக் கல்லைத் தொட்டுக் கடித்துக்கொண்டார். மீசையில் ஒட்டி இருந்த கஞ்சியை, இடது கையால் துடைத்துக்கொண்டார். இருளாண்டித் தேவன், பாரதியின் காலடியில் அமர்ந்து, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.
''குருநாதனிடம் போனாயா? என்ன சொன்னான்?''
''நான் அங்கே போகலை சாமி'' - கண்களைத் துடைத்தான்.
''டேய்... களவாணிப் பயலே! பொய் சொல்கிறாயா? என் பெயரைக் கேட்டதும் உன்னை அவன் துரத்தி இருப்பானே!'' என உற்றுப் பார்த்தவர்'' கிறுக்குப் பயலே! நீ ஏன் அழுகிறாய்?'' துடைத்துவிட்டார்.
''வேற ஒண்ணுமில்லே சாமி. எங்க வீட்டுக் கஞ்சியை ஒங்களைக் குடிக்கவெச்சு... நான் பாவம் பண்ணீட்டேனோன்னு ஒரு நெனப்பு வந்துச்சு.''
''அட கிறுக்கா... கிறுக்கா! இந்தக் கஞ்சியைக் குடிக்க நான்தான்டா புண்ணியம் பண்ணி இருக்கணும்.'' - கஞ்சிக் கலயத்தை அன்னாக்க விட்டார்.
இருளாண்டித் தேவன் கவிழ்ந்துகொண்டே பேசினான். ''குருநாத சாமி மேலே இருந்த மதிப்பு, மரியாதை எல்லாம் போச்சு சாமி. ச்ச்சேய்... என்ன மனுசன் அவரு! 'பசின்னா என்ன?'ன்னு தெரியாத அந்த ஆளை ரெண்டு பொழுதுக்குப் பட்டினி போட்டா... சாதியைப் பத்திப் பேசுவாரா சாமி? கோயில்ல அவரு பூஜை பண்ணி, எங்க பாவம் தீரப் போகுதாக்கும்?''
தொண்டை நிறையக் கஞ்சி இறங்கிக்கொண்டு இருந்த தால் பாரதிக்கு வாய்விட்டுச் சிரிக்க முடியவில்லை.
முண்டாசுக்குள் சுருண்டுகிடந்த கருநாகம், அவிழ்ந்து, பாரதியின் வலது தொடையில் ஏறியது!
|