விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

காதலினால் பெண்கள் செய்வீர் -திடீர் ஜிலீர் தொடர்கதை

காதலினால் பெண்கள் செய்வீர் -திடீர் ஜிலீர் தொடர்கதை

காதலினால் பெண்கள் செய்வீர் -திடீர் ஜிலீர் தொடர்கதை
கி.கார்த்திகேயன்
காதலினால் பெண்கள் செய்வீர் -திடீர் ஜிலீர் தொடர்கதை
காதலினால் பெண்கள் செய்வீர் -திடீர் ஜிலீர் தொடர்கதை
திடீர் ஜிலீர் தொடர்கதை
காதலினால் பெண்கள் செய்வீர் -திடீர் ஜிலீர் தொடர்கதை
காதலினால் பெண்கள் செய்வீர்
காதலினால் பெண்கள் செய்வீர் -திடீர் ஜிலீர் தொடர்கதை
காதலினால் பெண்கள் செய்வீர் -திடீர் ஜிலீர் தொடர்கதை

'போலீஸ்... போலீஸ்... போலீஸ்!' என் மூளையின் சைரன்கள் ஆயுளுக்குமான அவசரத்தோடு அலறிப் பதறின. கிட்டத்தட்ட அரை நிர்வாணமாக ஈரமாக ஒரு பெண், பேக்கு கணக்காக நான். தாலி, மோதிரம், மெட்டி போன்ற கல்யாண சாட்சி சமாசாரங்கள் எதுவும் கிடையாது. 'அழகியுடன் அழகனும்(!) கைது!' 'வீடு பிடித்து விபசாரம்' என்றெல்லாம் மறுநாள் செய்தித் தலைப்புகளுக்குக் கீழே சியாமந்தா படம் பெரிதாகவும் எனது படம் சின்னதாகவும் இருப்பது போலவெல்லாம் விபரீதக் கற்பனைகள். அப்படியே அந்த இரண்டாவது மாடியில் இருந்து குதித்து ஓடிவிடலாமா என்பதுதான் மனதில் தோன்றிய முதல் எண்ணம். ஆனால், இதயம் உள்ளுக்குள் துள்ளத் துடிக்கக் கதவைத் திறந்தேன். கண்களில் எரிச்சலுடன் அந்த போலீஸ் நின்றிருக்க, அவருக்குப் பக்கத்தில்... என் ஆப்த நண்பன் தினகரன்!

'அட சண்டாளா... நீ கதவைத் தட்டுறதுக்கு என்னடா?' என்று மனதுக்குள் அவனைச் சபித்துக் கொண்டே பதற்றம் நீங்காமல் போலீஸ் முகத்தைப் பார்த்தேன்.

''மச்சான் இவன்தான்டா. இனி நான் பார்த்துக்குறேன். ரொம்ப தேங்க்ஸ்டா. ஸாரி! உன்னை ரொம்பத் தொந்தரவு பண்ணிட்டேன். நிச்சயம் வர்ற சண்டே நாம் சங்கமிக்கிறோம். ஒரு கால் அடிச்சுட்டு வந்துரு!'' என்று கொஞ்சிக் குலாவி அந்தப் போலீஸை வழியனுப்பி வைத்துவிட்டு, என் பக்கம் திரும்பினான் தினகரன். இனி அந்த போலீஸால் எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெரிந்த பிறகுதான் எனக்குக் கண்கள் பளிச்சென தெரிந்தன.

''ஏன்டா! உன் டப்பா போனை மாத்துன்னு கரடியாக் கத்தினாலும் கேக்குறியா? நாட் ரீச்சபிள், பிஸி, சுவிச்ட் ஆஃப்னு என்னன்னவோ வருது. கரெக்ட் அட்ரசும் சொல்லாமப் போயிட்ட. குத்துமதிப்பா ரயில்வே ஸ்டேஷனுக்குப் பின்னாடி இருக்குற ஒவ்வொரு ஃப்ளாட்டா விசாரிச்சுட்டு வர்றேன். இந்த நேரத்துல புது ஆளுங்களை அலவ் பண்ண மாட்டாங்கன்னுதான் என் போலீஸ் ஃப்ரெண்ட் ஒருத்தனை ஹெல்ப்புக்குக் கூட்டிட்டு வந்தேன்!''

''டவுசரு... அதுக்காக இந்த நேரத்துல போலீஸைக் கூட்டிட்டு வந்து இப்படித்தான் கலவரப்படுத்துவியா?'' என்று ஆரம்பித்து, இரண்டு நிமிடங்கள் நான்- ஸ்டாப்பாகத் திட்டிக்கொண்டு இருந்தபோதுதான் தினகரனின் முகத்தில் இருந்த அதீத பதற்றத்தைக் கவனித்தேன்.

''என்னடா எதுவும் பிரச்னையா?'' என்று கேட்டேன்.

''ஊர்ல இருந்து மாதவியோட தங்கச்சி பேசுனா. அவகிட்ட உன் நம்பர் இல்லை. மாதவியை நாளைக்குப் பொண்ணு பார்க்க வர்றதா இருந்தாங்களாம். அவ உன்னைத்தான் கட்டிக்குவேன்னு அப்பா, அம்மாகிட்ட சொல்ல முடியாம விஷம் குடிச்சுட்டாளாம். ராத்திரி தாண்டுறது கஷ்டம்னு சொல்றாங்களாம். எதுவும்னா உயிரோட இருக்குறப்பவே ஒரு தடவை பார்த்துருவியேன்னுதான் தேடித் திரிஞ்சு வந்தேன்!''

மாதவியா? அந்த அப்பாவி கிராமத்துப் பெண்ணா? விஷம் குடிக்கும் அளவுக்கு என் மேல் அவ்வளவு ஆசையா? எனக்குக் கிறுகிறுவெனத் தலை சுற்றுவது போல இருந்தது! சுதாரித்து சியாமந்தாவிடம் விவரம் சொல்லி, உடனே ஊருக்குக் கிளம்பினேன்.

நான் காபி குடித்து முடிக்கும் வரை காத்திருந்த சியாமந்தா, ''சொல்லு பால்... பொண்ணு உயிருக்கு ஆபத்தில்லைன்னு போன்ல சொன்ன. இப்ப எப்படி இருக்கா... பேசுனியா?'' என்று மெத்தையில் வசதியாக சாய்ந்து அமர்ந்துகொண்டு கேட்டாள். நான்கு நாட்கள் கழித்து இன்றுதான் சென்னை திரும்பிஇருந்தேன்.

''பேசுறதா..! ஆஸ்பத்திரியிலயே வேற ஆளை விசாரிக்கிற மாதிரி போய்த்தான் அவளையே பார்க்க முடிஞ்சது. எனக்காகத்தான் அவ விஷம் சாப்பிட்டான்னு தெரிஞ்சா, அவங்க அப்பாவே அவ கழுத்தை நெரிச்சுக் கொன்னுடுவாருங்க. முரட்டு முட்டாளு. உயிருக்கு ஆபத்தில்லைன்னாலும் பேசக் கூடிய நிலைமையில மாதவி இல்லை. என்னைப் பார்த்ததும் அவ கண்ணுல ஒரு பிரகாசம். யாரும் பாக்காதப்போ என்னைக் கையெடுத்து வேற கும்பிட்டா. ஐயோ! 'இந்தப் பொண்ணு இவ்வளவு அன்பு காட்ட நாம என்ன செஞ்சோம்'னு எனக்குள்ள மனசாட்சி

காதலினால் பெண்கள் செய்வீர் -திடீர் ஜிலீர் தொடர்கதை

குறுகுறுக்க ஆரம்பிச்சு அதுக்கு மேல அங்கே நிக்க முடியாம வந்துட்டேங்க. நினைச்சு நினைச்சு அழுகையா வருதுங்க. கல்மிஷம் இல்லாத அப்பாவிப் பொண்ணு. 'எதுக்கும் பயப்பட வேணாம்னு அக்காட்ட சொல்லு. நான் இருக்கேன்'னு மாதவி தங்கச்சிகிட்ட மட்டும் சொல்லிட்டு வந்தேன். இன்னும் நல்ல வேலை, நல்ல சம்பாத்தியம்னு மாதவி அப்பாகிட்ட போய் பொண்ணு கேட்கணுங்க. அதுதான் இப்ப எனக்கு!''

''இன்ட்ரஸ்டிங்... மாதவி என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிட்டா பால். இந்தக் காலத்துல இப்படியும் பொண்ணுங்க இருங்காங்களா?''

சியாமந்தா குரலை இடைமறிப்பது போல என் செல்போன் சிணுங்கியது. எங்கள் ஊர் கோட் நம்பர்! திடீர் பதற்றத்துடன் போனை காதுக்குக் கொடுத்தேன். மாதவியின் தங்கை அழுகைகளுக்கு இடையில் திக்கித் திக்கிப் பேசினாள்.

''மச்சான்... அக்கா... அக்கா போயிட்டா. திடீர்னு வலிப்பு வந்து இழுத்துகிட்டே இருந்து... உங்க பேரைக் கடைசியா சொல்லிட்டுப் போயிட்டா!'' செல்போன் கையிலிருந்து நழுவ, இதயம் உடலிலிருந்து நழுவுவது போல இருந்தது.

உண்மை உரைக்க ஒரு முழு நிமிடமாயிற்று. 'மாதவி... மாதவி போயிட்டா. என்னை விட்டுட்டுப் போயிட்டா. என் மாதவி இல்லை... அவ இல்லை!' என்று நான் அழுதுகொண்டே அரற்ற, சியாமந்தா விஷயத்தைக் கிரகித்துக்கொண்டாள்.

மெத்தையில் இருந்து வேகமாக எழுந்து வந்து என் கைகளைப் பிடித்துக்கொண்டு, ''பால்... ரிலாக்ஸ். ஒண்ணுமில்லை. என்னன்னு போய்ப் பார்க்கலாம். நானும் வரேன். எக்ஸைட் ஆகாத!'' என்று சமாதானப்படுத்தினாள்.

''இல்லை... என் மாதவி... நான் பாவி! அவளே போயிட்டா... நான் எதுக்கு இருக்கணும். என் பேர்தான் கடைசியா சொல்லியிருக்கா. நானும் போகணும்... விடு என்னை. அவ ஆவி கிளம்புறதுக்குள்ள நானும் போகணும்!'' என்று வெறி பிடித்தாற் போலக் கத்தினேன்.

என் கண்கள் பிதுங்கி நாக்கை நானே கடித்துக் கொள்வதை என்னாலேயே உணர முடிந்தது. உடலின் அத்தனை ரத்தமும் மூளைக்குள் பாய்ந்ததைப் போல தலை பாரமானது. என்ன நினைத்தாளோ, சட்டென சியாமந்தா என்னை இறுக்கமாகக் கட்டிஅணைத்தாள். அவள் உடல் முழுக்க என் மேல் அழுந்தி மென்மையும் வெம்மையுமான மின்சாரம் ஊடுருவியது. என் உதடுகளைத் தன் உதடுகளால் ஒற்றியெடுத்தவள், இரு கைகளாலும் என் முகத்தைப் பிடித்து கண்ணோடு கண்ணாகப் பார்த்தாள். சியாமந்தாவின் மூச்சுக்காற்று இல்லை. இது இது... இது என் மாதவி. மாதவிதான் எனக்கு முத்தம் கொடுத்தது. அவள் மூச்சுக் காற்றுதான் என் கன்னம் தீண்டுகிறது. எனக்குள் குபீர் ஆவேசம்! மாதவியை நான் படுக்கையில் சாய்த்தேன். என்னைத் தாங்கிக் கொண்டாள். திக்கித் திண்டாடிய எனது வேகம், வெறிக்கு வடிகால் கிடைத்த திசையில் அது வெடித்துப் பாய்ந்தது. இயங்கத் தொடங்கினேன்!

மெரினா பீச். உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையை நானும் தினகரனும் பாராக மாற்றிஇருந்தோம். மணலில் சில பீர் பாட்டில்கள் அரைகுறையாகப் புதைந்திருந்தன. நள்ளிரவு கடந்த பொழுதில் 'ஹோ... ஹோ'வெனக் காற்றும் அலையும் மாறி மாறி சுருதி சேர்த்துக்கொண்டு இருந்தன.

''அப்புறம் என்ன ஆச்சு மாப்ள?'' ஆச்சர்யமாக அத்தனை போதைக்குப் பிறகும் அமைதியாகக் கேட்டான் தினகரன். நான்தான் சலம்பித் தளும்பிக் கொண்டு இருந்தேன்.

''அப்பால இன்னா ஆச்சு? ஆங்ங்... காலையில கண்ணு முழிச்சா கால் முட்டிலாம் வலி. மசமசன்னு ஏதேதோ ஞாபகம். என்ன நடந்துச்சுன்னு புரிஞ்ச தும் எனக்கு 'ச்சீ'ன்னு ஆயிருச்சு. சியாமந்தாவைத் தேடினேன். காணலை. 'ஸாரி'ன்னு மட்டும் அவளுக்கு மெசேஜ் அனுப்பினேன். உடனேஅவளே லைனுக்கு வந்தா!''

நிமிர்ந்து உட்கார்ந்தான் தினகரன்.

''எதுவுமே நடக்காதது மாதிரியே பேசுறா. 'பால்... நார்மலாவே நீ அமைதியான ஆளுங்கிறதால, மாதவி இறந்த அதிர்ச்சியை உன்னால தாங்க முடியலை. கொஞ்சம் விட்டிருந்தா நிச்சயம் நீ உடைஞ்சிருப்ப. சூசைட், பைத்தியம்னு எது வேணும்னா நடந் திருக்கலாம். உனக்கு அந்தச் சமயம் சாஞ்சுக்கிட்டு அழ ஒரு மடி தேவைப்பட்டுச்சு. அதான் உன்கவனத் தைத் திசை திருப்ப நான் அப்படி நடந்துக்கிட் டேன். உனக்கு ஒரு ஆறுதல்... எனக்கு ஒரு தேடல் தட்ஸ் ஆல். ஒரு ஃப்ரெண்டா, ஒருபெண்ணா என்னால முடிஞ்ச ஒரு விஷயம். அதுக்கு மேல அதுல ஒண்ணும் இல்லை. அதுக்காக நீ என்னைத் தப்பா நினைச்சுராத. எனக்கும் அதுதான் ஃபர்ஸ்ட். ரெண்டு பேருக்கும் ஏதோ ஒரு தேவை சேட்டிஸ்ஃபைட். எப்பவும் போல இரு. மனசைப் போட்டுக் குழப்பிக்காத'ன்னு இன்னும் என்னென்னவோ இங்கிலீஷ்ல பீட்டர் அடிச்சா. எனக்குத்தான் சியாமந்தா முகம் பார்க்கச் சங்கடமா இருந்ததால, கிளம்பி உன் ரூமுக்கு வந்து இந்த மூணு நாள்ல குடிக்கக் கத்துக்கிட்டேன். நான் எதுவும் தப்புப் பண்ணிட்டேனாடா?''

எனக்குப் பதில் சொல்லாமல் ஏதோ தீர்க்கமான சிந்தனையில் இருந்தான் தினகரன். நான் உளறத் தொடங்கினேன்.

''ஆனா தினகரா... பொண்ணுங்களை நாமதான்டா தப்பாப் புரிஞ்சுவெச்சிருக்கோம். எல்லா பொண்ணுகளும் ஆம்பளைங்க மேல பாசமாத்தான் இருக்காங்க. புடிக்கவே புடிக்காத ஒருத்தனைக்கூட பத்து பெர்சன்ட்டாச்சும் காதலிப்பாங்க. எல்லா பொண்ணுங்களும் வெவ்வேற வடிவத்துல இருக்குற கண்ணாடி கிளாஸ்டா. ஆம்பளைங்கல்லாம்தண்ணி. நல்ல தண்ணி, உப்புத் தண்ணி, சுடு தண்ணி, சர்பத் தண்ணி, டாஸ்மாக் தண்ணி, கஞ்சித் தண்ணின்னு எந்தத் தண்ணியா இருந்தாலும் கண்ணாடி கிளாஸ் புடிச்சுக்கும்ல. அப்படித்தான்... நீ என்ன மாப்ள சொல்ற?'

''உன் பிளாஸ்டிக் கிளாஸ்ல நிறைய பீர் தண்ணி ஊத்திட்டேன்னு சொல்றேன்!''

காதலினால் பெண்கள் செய்வீர் -திடீர் ஜிலீர் தொடர்கதை

''மாமூ... ஐ யம் சீரியஸ். நீயே பாரேன். மாதவி, வரலட்சுமி, சியாமந்தா... இந்த மூணு பேருக்கும் என் மேல என்ன அக்கறை? நான் அவங்களை மயக்க ணும்னு ஒழுங்கா தலை சீவிட்டுக்கூடப் போனதில்லை. 'பாவம்! இந்தப் பய இப்படி அப்பாவியா இருக்கானே. இவனுக்கு நாம நல்ல புத்தி சொல்லுவோம்'னுதானே என்கூடப் பழகியிருக்காங்க. எனக்காக என்னன்னவோ செஞ்சிருக்காங்க. அப்படித்தான் இந்த உலகத்துல எல்லாப் பொண்ணுங்களும். நாமதான் அவங்களை ஒண்ணு அழகா இல்லைன்னு ஒதுக்குறோம். இல்லைன்னா, அல்டாப்பு, அலட்டல் கேசுன்னு விரோதியா பாக்குறோம். உன்னைக்கூட யாரோ ஒருத்தி மனசுக்குள்ள காதலிச்சுட்டுத்தான் இருப்பா. அவ யாருன்னு கண்டுபிடி. காதலி. அவளை மட்டும் இல்ல... எல்லாப் பொண்ணுங்களையுமே காதலி. பதிலுக்கு எதுவும் எதிர்பார்க்காம உன் காதலால் அவங்களைச் சந்தோஷப்படுத்து. ஏன்னா... எல்லோ ருமே தேவதைங்கதான். எந்தத் தேவதையும் சாபம் கொடுக்காது. நான்தான் என்னைக் காதலிச்ச மாதவியைக் காதலிக்காமலே போயிட்டேன். நான் பாவி... என் மாதவி செத்துக் கிடந்தப்ப... நான் சியாமந்தாகூட... ஐயோ! ச்சீ... நானும் சாகணும்!''

திடீர் உத்வேகத்தில் எழுந்து கால்கள் பின்னப் பின்ன... மணலில் புதையப் புதைய கடல் நோக்கி நடந்தேன். ஹோவென்று பேரிரைச்சலுடன் பாய்ந்த அலை தாண்டி மாதவியின் முகம் தெரிந்தது. ஆனால், கடல் தொடுமுன்னரே தலை தொங்கி தள்ளாடிக் கீழே விழுந்தேன். அரபிக் கடலின் உப்புச் சுழி ஒன்று என் முகத்தில் பொளிச்சென அடித்து விலகியது!

விக்ரமன் சினிமா போல பாட்டெல்லாம் வராது. ஆனாலும், நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். இந்த வரிக்குப் பிறகு நான்கு வருடங்கள் கடந்திருக்கின்றன!

வடபழனி முருகன் கோயில். நான் உற்சவர் அருகில் தேங்காய் மூடியை உருட்டிக்கொண்டு இருக்க, ''நீ... நீங்க பாலாவா?'' என்ற பரிச்சயமான குரல் என் காதுகளைத் தீண்டியது. 'தினகரனோ' என்று நிமிர்ந்தால் அவனேதான்! தினகரனுக்குத் திடீர் மும்பை டிரான்ஸ்ஃபர். இருவருக்கும் இடையே தொடர்பு அறுந்த வழவழா சங்கதிகளைத் தவிர்த்துக் கடந்து வந்தால்...

''என்ன பாலா பட்டு சட்டை, வேட்டின்னு? இன்னிக்கு எதுவும் விசேஷமா?''

''ஆமாடா! எனக்கு இன்னிக்கு ரெண்டாவது கல்யாண நாள்!'' இரண்டு வருடங்கள் கழித்தும் மிச்சம் இருந்த வெட்கத்தைப்பட்டுக்கொண்டேன்.

''டேய்! சொல்லவே இல்லை. யாருடா... சியாமந்தாவா?''

''இல்லை... அதோ கைக்குழந்தையோடு சிவப்பு பட்டுச் சேலையில வர்றாளே.. வரலட்சுமி!''

அவன் என்னை ஆச்சர்யமாகப் பார்த்தான்.

''ஆமடா... அதுக்குப் பிறகு அந்த வேலையை விட்டுட்டேன். சியாமந்தா வீட்ல இருந்தும் காலி பண்ணிட்டேன். பிரிஞ்சு வந்தப்புறம்தான் தெரிஞ்சது வரலட்சுமியைப் பிரிஞ்சிருக்கிறது சிரமம்னு. அவளுக்கும் அதேதான். அப்பவும் அவதான் முதல்ல அதைச் சொன்னா. கொஞ்சம் பொறுமையா இருந்தோம். நேரம் கூடி வந்துச்சு. கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இப்ப நான் ஸ்போக்கன் இங்கிலீஷ் கோச்சிங் சென்டர் வெச்சிருக்கேன். கால் சென்டர், கவர்மென்ட் எக்ஸாம் பசங்க நிறைய வர்றாங்க. நல்ல பிக்கப். ரெண்டு பிராஞ்ச் தாண்டி மூணாவதுக்கு இடம் பார்த்துட்டு இருக்கேன்!''

''அப்ப சியாமந்தா?''

''வரூ இன்வைட் பண்ணியிருந்தான்னு எங்க கல்யாணத்துக்கு வந்திருந்தா. ரெண்டு பேருக்கும் நாலு நாலு கிராம்ல மோதிரம் பிரசன்ட் பண்ணா. அவளுக்கும் கல்யாணம் ஆயிருச்சு. கோயமுத்தூர்லயே ஏதோ ஒரு இண்டஸ்ட்ரியலிஸ்ட். அவ கல்யாணத்துக்கு வரூ மட்டும்தான் போயிருந்தா!''

வரலட்சுமி அருகில் வர, தினகரனை அவளுக்கு அறிமுகப்படுத்தினேன்.

''பெண் குழந்தையா... அதிர்ஷ்டக்காரன்டா. பாப்பா பேர் என்ன?'' என்று தினகரன் கேட்க, வரூதான் பதிலளித்தாள்...

''மாதவி!''

'டிங்'கென அடித்த கோயில் மணிக்கு வடபழனி முருகன் புன்னகைத்தது போல இருந்தது!

 
காதலினால் பெண்கள் செய்வீர் -திடீர் ஜிலீர் தொடர்கதை
-இந்தக் காதல் நிறைந்தது
காதலினால் பெண்கள் செய்வீர் -திடீர் ஜிலீர் தொடர்கதை