நில்லுன்னா நிக்கும், படுன்னா படுக்கும். வண்டியை நிமித்துனா, கழுத்தைத் தூக்கிக்கிட்டு வந்து நிக்கும். எங்க வீட்டுப் புள்ளைகல்லாம் மாட்டுக் கவுட்டுக் குள்ளதான் வெளாடும். மாடாப் பொறந்ததால பேச்சு வரலை... அம்புட்டுதான். அப்படியாப்பட்ட மாட்டை நல்ல விலைக்குக் கேட்டாங்கன்னு எங்க அண்ணன் அவசரப்பட்டுக் குடுத்துட்டாரு. கருவேல நாயக்கன்பட்டி செட்டியார் ஒருத்தர் மாட்டை வாங்கினார். ஆனா, மாடுக போனதுலேர்ந்து திங்காம, தண்ணிகூடக் குடிக்காம கிடந்திருக்கு. செட்டியார் சொல்லிவிட்டாரு. போய்ப் பார்த்தா மனசு தாங்காதுன்னு போகலை. ரெண்டு வாரம் கழிச்சு தேனிச் சந்தைக்குப் போனா, எங்கிட்டிருந்தோ 'அம்மா'ன்னு சத்தம் கேக்குது. 'நம்ம மாட்டுச் சத்தமாச்சே'ன்னு திரும்புனா, ராம லட்சுமணன் ரெண்டு பேரும் பார வண்டியை இழுத்துக்கிட்டு என்னைப் பார்த்து ஓடி வருதுக. எங்கேயோ இடிச்சு கொம்புலேர்ந்து ரத்தம் வேற ஒழுகுது. எனக்குன்னா அழுகை தாங்காம கட்டியிருந்த வேட்டிய உருவி, கொம்புல சுத்திவிட்டேன். மனசு சரிஇல்லாம வீட்டுக்கு வந்துட்டேன். நாளு நாள் கழிச்சு செட்டியார் லட்சுமணனை மட்டும் கையில பிடிச்சுக்கிட்டு வந்துட்டாரு. 'உன்னைப் பார்த்ததுலேருந்து தீவனமே திங்க மாட்டேங்குது. கண்ணுல தண்ணீரா ஊத்துது. இம்புட்டு பாசமா வளர்த்துட்டு ஏம்ப்பா வித்தீங்க?'னு மாட்டை விட்டுட்டுப் போயிட்டாரு. லட்சுமணனுக்கு வைத்தியம் பார்த்தோம். கொம்பு புழு தலைக்கு இறங்கி, மாடு கொணங்கி வாய்நீரா வடிஞ்சு கடைசில செத்தேபோச்சு. எங்க குடும்பமே சோறு திங்காமக்கெடந்துச்சு. நாலு நாள் செண்டு நடு ராத்திரில கதவுக்கு வெளில டம்டம்னு சத்தம் கேக்குது. வெளக்கைப் பொருத்தி எந்திரிச்சுப் பார்த்தா, கண்ணுலேர்ந்து தண்ணி ஒழுக ராமன் கீழ கெடந்து புரளுறான். எங்க ஆத்தா அப்பன் செத்ததுக்குக்கூட அழுகாத நான், அந்த மாட்டைக் கட்டிப்புடிச்சு அழுதேன். கொஞ்ச நேரத்தில் அது உசுரும் அடங்கிருச்சு'' என்கிற நாகப்பன் பரணில் இருந்த தும்பு, கம்பளிக்கயிறு, மூக்கணாங்கயிறு, வாய்க்கூடுகளை எடுத்துக் காட்டுகிறார். ''அதுக நினைவா என்கிட்ட இருக்குறது இதுதான்'' என்று சொல்லும்போது கசிகின்றன அவரது கண்கள்!
|