'இது ஒரு வித்தியாசமான கதை' என்று சினிமாஇயக்கு நர்கள் சொல்வதைப் போல, இவை நிஜமாகவே வித்தியாசப் பிராணிகள்...
யர்போவா (jerboa)
இதன் ஸ்பெஷலே நீளமான காதுகள்தான். மங்கோலிய, சீன, ஆப்பிரிக்க வறண்ட பகுதிகளில் அவ்வப்போது தென்படுகின்றன. (ஜெர்போவா என வாசிக்கத் தூண்டும் இது ஓர் அரேபிய வார்த்தை.)
ஹே... ஹே (aye-aye):
கூப்பிடுவதற்கு வசதியான பெயர்! 'ஹே... ஹே, ஐ... ஐ..., ஆய்... ஆய்' என்று வசதிப்படி அழைக்கிறார்கள். சாத்தானின் மினியேச்சர் போல இருந்தாலும் இது பரம சாது. மரங்கொத்திப் பறவை போல பற்களால் மரத்தைக் கொத்தித் துளை உண்டாக்கி புழு பிடிக்கும்!
புரோபோசிஸ் குரங்கு (proboscis monkey):
மூக்கு அசிங்கமா இருக்கா? ஆனால், எவ்வள பெரிய மூக்கு இருக்கோ, அந்த அளவு ஐயாவுக்கு 'லேடீஸ்' மத்தியில் செல்வாக்கு அதிகமாம். தெற்காசியத் தீவான பொரீனோ, இந்தோனேஷியா நாடுகளில் காணப்படுகின்றன!
கிவா கிர்சுடா (Kiwa hirsuta):
லாப்ஸ்டர் போல இருக்கும் இது கண்டுபிடிக்கப்பட்டதே 2005-ம் ஆண்டில்தான். பசிபிக் கடலில் 2,200 மீட்டர் ஆழத்தில் இப்படி ஓர் உயிரி இருப்பதே அதுவரை யாருக்கும் தெரியாது!
ஆக்ஸோலோட் (Axolotl):
மெக்ஸிகோ பகுதியில் உள்ள இந்த விலங்கின் உடல் பாகத்தைத் துண்டாக வெட்டினாலும் சொய்ங் என்று அந்தப் பாகம் மீண்டும் முளைத்துவிடும். வளர்ந்தும் வளராத மீன் போல இருக்கும் இதன் செல்லப் பெயர் 'ஊப்பர் லூப்பர்'!
சாய்கா (saiga)
இது ஒரு குண்டுக் கத்தரிக்கா விலங்கு. வெயில் காலத்தில் மண்ணுக்குள் மூக்கை அடிக்கடி புதைத்துவைத்துக் குளிர் காயும். இதன் கொம்பில் மருத்துவ மகிமை இருப்பதாகக் கதைவிட்டு சகட்டுமேனிக்கு தேடித் தேடிக் கொல்கிறார்களாம். மங்கோலியா, ரஷ்யா, கஜகஸ்தான் போன்ற நாடுகளில் வாழ்கிறது சாய்கா!
வெள்ளை ஆமை:
வெள்ளை, கிரீம், பிங்க் என இளம் பெண்களுக்குப் பிடித்த எல்லா கலரும் சேர்ந்த நிறம் இந்த வெள்ளை ஆமைக்கு. மிக அரிய வகை ஆமை இனமான இதன் கேர் ஆஃப் அட்ரஸ் சீனா!
ஃபிரில் கழுத்து ஓணான் (frill-necked Lizar):
ஆஸ்திரேலியாவில் இதற்கு 'பைசைக்கிள் லிசார்ட்' என்று பெயர். யாருக்காவது பயம்காட்ட வேண்டும் என்றால் சட்டென கழுத்தைச் சிலிர்த்துக்கொள்ளும். படார் என சிறகுகள் விரியும்போது எதிரிகள் எஸ்கேப்!
இலை கடல் டிராகன் (Leafy sea dragons):
'ஆஹா, இந்தச் செடி எவ்ளோ அழகு' என நினைத்தால் நீங்கள் ஏமாந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். இது ஒரு வகைக் கடல் குதிரை. பெண் டிராகன் முட்டையிடுவதோடு சரி... அதைப் பொரிக்கவைத்து கடலை கற்றுக்கொடுப்பது எல்லாம் ஆணின் வேலை. தெற்கு மற்றும் மேற்கு ஆஸ்திரேலியக் கடல்தான் இதன் வாழிடம்!