காமராஜின் கண்கண்ட தெய்வம் காந்தி மகாத்மா; காமராஜ் படித்த பகவத் கீதை, காந்தியம்: அவர் சரண் புகுந்த சத்குரு, ஜவஹர்லால் நேரு; அவர் பெற்ற நல்லுபதேசம், ஜனநாயக சோஷலிசம். பாரதத் திருநாடே அவர் அறிந்த அன்னை; பாரதப் பெருங்குடும் பமே அவரது சொந்தம், பந்தம் எல்லாம்!
தமது 16-வது வயதிலேயே வீட்டை மறந்து, நாட்டைப் பற்றி நினைக்கத் தொடங்கி னார் காமராஜர். 28 ஆண்டுகள் நாட்டின் சுதந்திரத்திற்கா கத் தியாக வாழ்வு மேற்கொண் டார்; பின்னர் 28 ஆண்டுகள் அந்த சுதந்திரத்தின் பலனை மக்கள் பெற வேண்டும் என்ப தற்காக உழைத்தார். இள வயது முதல் இறுதி மூச்சு பிரியும்வரை பாரத சமுதாயத்தைத் தவிர, அவருக்கு வேறு சிந்தனையே இருந்ததில்லை. வேட்பு மனுவில் 'ஒரு சமூக ஊழியன்' என்றுதானே அவர் தம்மை அறிவித்துக்கொண்டார்!
நாட்டின் விடுதலை இயக்கத் தொண்டராகவும், தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவராகவும், நல்லாட்சி நடத்திய அமைச்சராகவும், ஜனநாயக காவலராகவும், சமதர்ம சிற்பியாகவும், தானைத் தளபதியாகவும் இவர் பின்பற்றிய செயல் முறைகளும், அளித்த அற்புதத் திட்டங்களும் செய்து காட்டிய சாதனைக் குவியல்களும் பிற்கால சந்ததி கள் படித்துப் படித்துப் புளகி தம் அடையப்போகும் பொற் காவியமாகும்.
''நேருவுக்குப் பிறகு யார்?'' என்று அகில உலகமும் கேட்ட கேள்விக்கு வியத்தகு விடை கண்டு, நம் ஜனநாயக மானம் காத்த மாவீரர் காமராஜ்!
காமராஜ் என்பது ஒரு தனி மனிதரின் பெயர் மட்டுமல்ல; அது சில கோட்பாடுகளின் கருவூலம்; தத்துவங்களின் பெட்டகம். அரசியல் அகராதியில் இடம் பெற்றுவிட்ட 'காமராஜ்' என்ற சொல் கடமை யுணர்வு, கட்டுப்பாடு, ஒழுக்கம், உழைப்பு, தியாகம், தன்மான உணர்ச்சி, வாய்மை, எளிமை, விசுவாசம், நேர்மை, நாணயம் போன்ற அவரது லட்சிய வாழ்வின் நெறிகளையே குறிக்கும்.
காந்திஜியையும், காந்தியத்தையும் நாட்டு மக்களுக்கு நாளும் நினைவுபடுத்திக் கொண்டிருந்தவர் காமராஜ்.
புனித காந்தி பிறந்த தினமே காமராஜின் தூய நினைவு நாளாகவும் அமைந்து விட்டது இயற்கையின் அற்புதப் புதிர்களில் ஒன்றாகும்.
|