ஆண் சிங்கம்
சிறுகதை - 'மணி'
கொஞ்ச நாட்களுக்கு முன்னால் எங்கள் ஊருக்கு ஒரு சர்க்கஸ் கம்பெனி வந்தது. பிரமாதமாக விளம்பரங்கள் ஒட்டப்பட்டன. என்னென்ன கிரியைகள் நடக்க வேண்டுமோ அவற்றை எல்லாம் ஒழுங்காக நடத்திய பின், சர்க்கஸ் ஆரம்பிக்கப்பட்டது.
நோட்டீஸில் 'பயங்கரம்! ஆச்சரியம்!! வீரம்!!! இம்மூன்றும் ஒன்று சேரும் கட்டத்தில், சிங்கமும் ஒரு பெண்ணும் இருப்பார்கள்' என்று வெளியிடப்பட்டிருந்தது. அதே போல் யாராவது செய்தால், 500 ரூபாய் பரிசு கொடுப்பதாயும் அதே நோட்டீஸில் பயமுறுத்தப்பட்டிருந்தது.
சர்க்கஸ் ஆரம்பித்த தினத்தன்று ஒரே கூட்டம். ஒவ்வொரு காட்சியாக முடிந்தது. கடைசியாக, அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சி தொடங்கியது. ஒரு பெரிய கூண்டில் சிங்கத்தைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அதே சமயம் ஒரு மாது அந்தக் கூண்டில் தோன்றினாள்.
சர்க்கஸ் மானேஜர் ஒரு மேடையில் ஏறி நின்று, ''மகா ஜனங்களே! இப்போது நடக்கப்போகும் அதி ஆச்சரியமான, பயங்கரமான பாகத்தை இம்மாது செய்யப் போகிறாள். இவள் என் மனைவி. இதைப் போல இங்கு யாராவது செய்யமுடியுமென்று தைரியமாக மாரைத் தட்டி, மீசையை முறுக்கிக்கொண்டு முன்வாருங்கள். உடனே 500 ரூபாய்!'' என்று கத்திவிட்டு, ''வெல்லத் துண்டு எங்கே?'' என்று இரைந்தார்.
ஓர் அச்சு வெல்லத்தை எடுத்து, அதை அந்த மாதின் நாக்கில் வைக்கச் சொன்னார். அவ்வாறே உடனே செய்யப்பட்டது. தூரத்தில் சிங்கம் உறுமிக்கொண்டு நின்றது. ''ரைட்டோ!'' என்றார் மானேஜர். சிங்கம் அந்தப் பெண்ணின் பக்கம் நெருங்கியது. வேடிக்கை பார்க்க வந்தவர்கள் கண்ணை மூடாது பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிங்கம் அந்தப் பெண்ணின் பக்கத்தில் நின்றது. மறு நிமிஷம், என்ன நடந்தது என்று நினைக்கிறீர்கள்? சிங்கம், தன் நாக்கை நீட்டி பெண்ணின் நாக்கிலிருந்த வெல்லத்தை நக்கியது!
எல்லோருக்கும் இக்காட்சி தூக்கிவாரிப்போட்டது. ஒருவன் மட்டும் சாவதானமாகத் தன்னுடைய இடத்தை விட்டு எழுந்தான். தன் மார்பைத் தட்டிக்கொண்டு, மீசையையும் முறுக்கிக்கொண்டு மானேஜர் நிற்குமிடத்தை நோக்கி நடந்தான். அவன் வரவைக் கண்டு மானேஜர், ''என்ன விஷயம்?'' என்று கேட்டார்.
''நான் அப்படிச் செய்கிறேன்!'' என்றான்.
உடனே அவர் ஜனங்களை நோக்கி, ''சகோதர சகோதரிகளே! என் மனைவி நீங்கலாக, இதோ இந்தச் சூரப்புலியும்... இல்லை, இல்லை... இந்த ஆண் சிங்கம் இதைச் செய்துவிடுவதாக முன் வந்திருக்கிறார். இவர் இதைச் செய்துவிட்டால் 500 ரூபாய் கொடுப்போம்! இல்லாவிடில் அவர் 500 ரூபாய் கொடுக்க வேண்டும்!'' என்றார்.
''சரி! என்னால் செய்ய முடியாவிட்டால் 500 ரூபாய் கொடுத்துவிடுகிறேன்'' என்றான் அவன்.
ஒரு வெல்லத் துண்டு கொண்டு வரப்பட்டது. அதை மானேஜர் அவன் கையில் கொடுத்து, ''உன் நாக்கில் வைத்துக் கொள்'' என்றார்.
''ஏன்?'' என்று அதியாச்சரியமாய்க் கேட்டான் அவன்.
''அந்தப் பெண் செய்தது போல் செய்ய!''
''கேவலம்! ஒரு பெண் செய்ததை நான் செய்யவா? நான் அந்தச் சிங்கம் போலவே செய்கிறேன். அதுதானே என்னைப் போன்ற ஆண் சிங்கத்திற்கு அழகு!'' என்று ஒரு போடு போட்டான் அவன்.
மானேஜர் மிரள மிரள விழித்தார். ஜனங்கள் சிரித்த சிரிப்பைப் பார்க்க வேண்டுமே!
சினிமா மூளை