உலக சமாதானத்தை விரும்பிய நேருஜி, வல்லரசுகள் வெறுத்து ஒதுக்கிய சீனாவை நேசித்தார். சீனாவுடன் நட்புறவு கொண்டார். 'இந்தி-சீனி பாய் பாய்' என்ற முழக்கம் அப்போது நாடெங்கும் ஒலித்தது. ஆனால், சீனாவோ திடீரென்று நம்பிக்கைத் துரோகம் செய்தது. அண்டை நாடான திபெத்தைக் கபளீகரம் செய்து, இந்திய எல்லையில் நுழைந்து, பல ஆயிரம் மைல்களை ஆக்கிரமிப்பு செய்தது. சீனாவின் துரோகச் செயலுக்குப் பிறகுதான் நேருஜி நலிவுற்றார். நீண்ட நாள் உயிருடன் இருக்கவில்லை.
இருபது ஆண்டுகள் ஓடிவிட்டன. 'சீனா' என்றவுடன் இந்திய மக்களுக்கு இந்தக் கசப்பான நிகழ்ச்சிகள்தான் இன்னமும் நினைவுக்கு வருகின்றன. எல்லைப் பிரச்னை தீர்வு ஏற்படாத நிலையிலும், திபெத்திய தலைவர் தலாய்லாமா இந்தியாவில் தஞ்சம் இருப்பதாலும் சீனாவுடன் நெருங்கிய நட்பு கொள்வது சாத்தியமற்றதுதான். இந்தியா அல்லாத வேறு ஒரு நாடாக இருப்பின், சீனாவை விரோத நாடாகவே கருதி வந்திருக்கும்.
ஆனால், இந்தியா தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை மறந்து சீனா நீட்டிய நேசக் கரத்துக்கு மதிப்பளித்தது. எல்லைத் தாவாக்களைத் தீர்க்க முழு மனதுடன் முன்வந்தது இந்தியா.
இப்போது மீண்டும் ஓர் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது சீனா. எல்லைப் பிரச்னைகள் பற்றிப் பீக்கிங் நகரில் இரு நாடுகளுக்குமிடையே பேச்சுவார்த்தை நடக்கும் நேரத்தில், இந்திய எல்லையில் அருணாசலப் பிரதேசத்தில் சீனர்கள் நுழைந்தனர். இந்தியா ஆட்சேபனை தெரிவித்தும் வாபஸ் ஆகவில்லை. பேச்சுவார்த்தை சமயத்தில் இப்படி அடாவடி செய்தால், இந்தியா சற்று இறங்கி வரும் என்று சீனா தந்திரம் செய்கிறது.
பாரத நாட்டைப் போன்ற பழம்பெரும் கலாசாரப் பெருமை கொண்டது சீனா. மக்கள் தொகையில் இந்தியாவை மிஞ்சிய நாடு. அமெரிக்காகூட சீனாவை இன்று மதிக்கிறது. இந்தப் பெருமைகள் எல்லாம் இருந்தும், சில்லறைத்தனமாக நடந்து கொள்ளும் புத்தி சீனாவிடம் நீடிக்கிறது. சீனா என்றுதான் தன்னைத் திருத்திக் கொள்ளுமோ!
|