ஊர் கிளம்பும் நாளின் காலையில் எனக்கு இருந்த ஒரே வருத்தம், இன்றும் அந்தப் பறவை மதியம் என் அறையைத் தேடி வந்து ஜன்னலைத் தட்டும். ஆனால், நான் அறையில் இருக்க மாட்டேன். ஒருவேளை அது அதே பாறையில் காத்திருக்கவும்கூடும். பிரிவை எப்படிப் பறவையிடம் சொல்வது? காட்டுக்குள்ளாகவே ஜீப் சென்றுகொண்டு இருந்தது. ஒரு சரிவில் இறங்கும்போது மின்னல்வெட்டுப்போல தாழப் பறந்து ஜீப்பைக் கடந்துபோனது அதே பறவை. என்னால் நம்பவே முடியவில்லை. ஒரு நிமிடம் அது என்னைப் பார்த்துக் கடந்திருக்கக்கூடும். தற்செயலானதுதானா? என்ன உறவு? என்ன பிரிவு?
இயற்கையை நாம் அவதானிப்பதே இல்லை. அதனிடம் இருந்து எதையும் கற்றுக்கொள்வதும் இல்லை. கடற்கரைக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்பவர்களில் ஒரு சிலர்கூட நகரை ஒட்டியுள்ள நீர்நிலைகள், வயல்வெளிகளுக்குச் சிறார்களை அழைத்துச் சென்று அங்கு வரும் பறவைகள், செடிகொடிகளின் வகைகள், பூக்களின் நிறங்கள், மண்ணின் வாசம் என இயற்கையை நெருக்கம்கொள்ளவிடுவது இல்லை.
அமெரிக்காவின் புகழ்பெற்ற இயற்கையியலாளர் தோரு இதற்காகவே ஒவ்வொரு மனிதனும் ஆண்டில் ஒரு மாதமாவது கட்டாயம் காட்டுக்குள் வசிக்க வேண்டும். அப்போதுதான் அவன் இயற்கையைப் புரிந்துகொள்ள முடியும் என்று சொன்னார். தோரு இதைத் தன் வாழ்நாளில் செய்துகாட்டியவர். வால்டன் என்ற காட்டுக்குள் தானே ஒரு குடில் அமைத்துக்கொண்டு இயற்கையோடு இணைந்து வாழ்ந்தார். அவரது 'வால்டன் குளம்' என்ற புத்தகம், ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டியதாகும். தோரு ஒருநாள் காட்டில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து ஏதோ பார்த்துக்கொண்டு இருப்பதைக் காட்டின் வழி கடந்து செல்லும் விவசாயிகள் பார்க்கிறார்கள். அன்று மாலை விவசாயிகள் வேலை முடித்துத் திரும்பும்போதும் அதே இடத்தில் உட்கார்ந்து தோரு ஆர்வமாக அப்போதும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
தோரு அப்படி என்ன பார்க்கிறார் என்று விவசாயிகள் கேட்கிறார்கள். தோரு ஒரு குழந்தையைப்போல உற்சாகத்துடன் சொன்னார், 'சிவப்பு எறும்புகளுக்குள் சண்டை நடக்கிறது. தற்செயலாகக் காலையில் கவனிக்கத் துவங்கினேன். முடிவு இல்லாத சண்டை. இவ்வளவு ஆக்ரோஷமாகச் சண்டையிட்டுக்கொள்வதைக் கண்டதே இல்லை. இந்தச் சண்டை இன்னும் இரண்டு நாட்கள் நீடிக்கக்கூடும் என்றே தோன்றுகிறது' என்றார். எறும்புகளை ஒருநாள் முழுவதும் உட்கார்ந்து அவதானித்திருக்கிறார். இந்தச் சண்டையைப்பற்றி 10 பக்கங்கள் தனது நாட்குறிப்பில் எழுதிஇருக்கிறார்.
பிரெஞ்சில் Minuscule என்ற அனிமேஷன் குறும்படங்கள் வெளியாகி உள்ளன. இவை ஆறு குறுந்தகடுகள் ஒன்றுசேர்ந்த ஒரே பேக்காகக் கிடைக்கின்றன. நம் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள், உயிரினங்கள், சிறு புல், செடிகொடி போன்றவற்றின் இயக்கங்களையும் அதில் வெளிப்படும் அற்புதங்களையும் விளக்குவதே இந்த டி.வி.டி. வரிசையின் நோக்கம். உலகம் முழுவதும் பெருவாரியான இயற்கை ஆர்வலர்கள் பாராட்டும் குறும்படங்கள் இவை. ஒரு ஆப்பிளை ஒரு புழு சாப்பிடுகிறது என்ற ஒரு வரியை ஒரு படமாகத் தயாரிக்கிறார்கள். ஆப்பிளை ஒரு புழு சாப்பிடுவதற்கு மேற்கொள்ளும் எத்தனம். அதைச் சாப்பிடும் அழகு என்று மிக உயர்வான தொழில்நுட்பத்துடன் செய்யப்பட்ட அற்புதமான படங்கள். இயற்கை எத்தனை நுட்பமானது என்பதை இந்தப் படங்கள் சிறார் களுக்கு அழகாகக் கற்றுத்தருகின்றன.
The Story of the Weeping Camel ஒரு டாக்கு மென்டரி படத்தைப் பார்த்தேன். கடுமையான வெக்கையும் குளிரும்கொண்ட கோபி பாலை வனத்தில் மங்கோலிய நாடோடி இன மக்கள் வசிக்கிறார்கள். அவர்களது பிரதான தொழில் ரோமத்துக்கான ஆடு வளர்ப்பது மற்றும் ரோமங்களைப் பின்னி குளிராடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் தயாரிப்பது. படம் துவங்கும்போது ஒட்டகங்கள் பிரசவிக்கும் காலம் துவங்குகிறது. இதற்காக ஒட்டகங்களை மேய்ச்சலில் இருந்து இருப்பிடத்துக்குக் கொண்டு வருகிறார்கள். பிரசவத்தின்போது ஒட்டகம் எழுப்பும் வலி நிறைந்த சத்தம் பாலைவனம் எங்கும் எதிரொலிக்கிறது.
அப்படிப் பிரசவ நேரம் வந்த ஒட்டகம் ஒன்று குட்டி போடாமல் தவிக்கிறது. ஏன் என்று அந்தக் குடும்பத்துக்குத் தெரியவில்லை. பிரார்த்தனை செய்கிறார்கள். மருத்துவம் பார்க்கிறார்கள். ஒட்டகம் பிரசவிக்கப் போராடுகிறது. குட்டியின் தலை வெளியே வருவதற்குப் பதிலாகக் கால் வெளியே வந்துவிடுகிறது. குடும்பமே ஒன்று சேர்ந்து பண்டுவம் பார்க்கிறார்கள். முடிவில் ஒட்டகம் பிரசவிக்கிறது.
வெள்ளை ரோமங்களுடன் குட்டி ஒட்டகம் உயரமாக இருக்கிறது. தாய் ஒட்டகம் அதை உற்றுப் பார்க்கிறது. குட்டி தன்னைப்போல இல்லாமல் வெள்ளைவெளேரென வேறு நிறத்தில் இருப்பதைக்கண்டு அருகில் சேர்க்காமல் ஒதுக்குகிறது. குட்டி ஆற்றாமையுடன் பால் குடிக்கத் தாவுகிறது. தாய் விடுவதே இல்லை. அது குட்டியைக் காலால் உதைக்கிறது. தள்ளிப்போய் நின்றுகொள்கிறது. ஒட்டகத்தைக் கட்டிப்போட்டு குட்டிக்குப் பால் கொடுக்கவைக்கப் பார்க்கிறார்கள். தாய் ஒட்டகம் பால் தர மறுக்கிறது. குட்டியை வெறுக்கிறது. தாய்ப் பாலுக்காகக் குட்டி சுற்றிச் சுற்றி வருகிறது.
|