500 ரூபாய்க்கு ஒரு காசோலையும் அத்துடன் ஒரு கடிதமும் இணைந்த தபால் ஒன்று என் முகவரிக்கு வந்திருந்தது. அனுப்பியவர் பெயர் பரிச்சயமானதாக இல்லை.
'அன்புடைய ராமகிருஷ்ணன், என் மகளின் இதயச் சிகிச்சைக்குப் பண உதவி தேவை என்றுநாளி தழில் வெளியான விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, நீங்கள் அனுப்பிய உதவிக்கு நன்றி. கடந்தவெள்ளிக் கிழமை என் மகள் அறுவை சிகிச்சைக்கு முன்பா கவே இறந்துவிட்டாள். ஆகவே, அவளுக்காக உங்களைப்போல பலரும் அனுப்பிய பணம் அவசியம் அற்றுப் போய்விட்டது. இனி, அப்பணம் எங்களுக்குத் தேவை இல்லை.
என் மகள் சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட பணம் முழுவதையும் அதை அனுப்பியவர்களுக்கே திருப்பி அனுப்பி வருகிறேன். என்னைப்போல உதவி வேண்டும் இன்னொரு நபருக்கு அந்தப் பணம் பயன்படக்கூடும் என்ற நல்லெண்ணம்தான் இதற் கான காரணம். இதை நீங்கள் தவறாக எண்ணவேண் டாம். முகம் தெரியாத மனிதருக்குச் செய்யும் உதவி, கடவுளுக்குச் செய்யும் அரும்பணி. அதற்காக என் குடும்பம் உங்களுக்கு என்றும் நன்றியுடையது. இப்படிக்கு செல்வ விநாயகம்' என்றிருந்தது.
அந்தச் செய்தி ஒரு பக்கம் என்னைத் துக்கம் அடையச் செய்தது. இன்னொரு பக்கம் இவ்வளவு உயர்வான மனிதர்கள் இன்னமும் இருக்கிறார்களா என்று வியப்படையவும் வைத்தது. எவ்வளவு உன்னதமான நேர்மை.
தன் பெண் இறந்துவிட்டாள். அதற்குப் பிறகு இந்தப் பணம் தங்களுக்கு எதற்கு? அதை உரியவர்களுக்குத் திருப்பி அனுப்புவதன் வழியே அது யாரோ ஒருவருக்குப்பயன்படும் என்று எண்ணுவது எத்தனை உயரிய சிந்தனை.
உதவி என்று பணம் அனுப்பியவர்களில் எவரும் கணக்கு கேட்கப்போவது இல்லை. எப்படிப் பணம் செலவழிக்கப்பட்டது என்று கண்காணிக்கப்போவதும் இல்லை. ஆனால், வறுமையான சூழலுக்குள்ளும் அந்தப் பணம் தங்களுக்குத் தேவையற்றது என்று திருப்பித்தரும் மனதுகொண்ட அந்த மனிதர் மிக உயர்வானவராகத் தோன்றினார்.
அன்று இரவு எல்லாம் அதைப்பற்றியே யோசித்துக்கொண்டு இருந்தேன். எங்களிடம் மீதமாக உள்ள பணத்தை நாங்கள் திருப்பிக் கொடுக்க முன்வருகிறோம் என்று யாராவது எங்காவது சொல்லியோ, நடந்தோ கேள்விப்பட்டு இருக்கிறேனா? நினைவில் இல்லை. பொதுமக்களுக்கு உரிய பணம் கோடிக்கணக்கில் பயன்பாடு இன்றி முடங்கிக்கிடக்கின்றன. உதவியின் பெயரால் திரட்டப்படும் பெருவாரியான பணம் முறைகேடான வழிகளில் செலவழிக்கப்படும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
மருத்துவச் சேவை செய்வதைப் பணம் சம்பாதிக்கும் வழியாக மாற்றிக்கொண்ட நிறுவனங்கள், தனிநபர்கள் பெருகிவிட்டதைக் காலம் பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறது. இவ்வளவு கெட்டு அழிந்த சூழலுக்குள் அடுத்தவர் பணம் நமக்கு வேண்டாம் என்று திருப்பித் தரும் மனது ஒரு மனிதருக்கு வருகிறது என்பது நம்பிக்கை தரும் செயல். இன்றைய மருத்துவச் செலவுகள், நோயை விடக் கொடிய வலியாக உருவெடுக்கின்றன. நோய்மை உருவாக்கிய பயத்தை விட, மருத்துவமனைகள் உருவாக்கிய பயம் அதிகமாகிறது.
நோயின்போதுதான் ஒவ்வொரு மனிதனும் தன் வயதை மறந்துபோகிறான். குழந்தையைப்போல யாரோ தன்னை அரவணைத்துப் பாதுகாக்க வேண்டும் என்று விரும்புகிறான். அன்புக்காக ஏங்கத் துவங்குகிறான். வேறு எந்தச் சூழலை விடவும் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட பிறகு, கையில் காசு இல்லாமல் போவதுதான் மிக மோசமான துரதிர்ஷ்டம். மருந்துகள் நோயில் இருந்து மனிதனை விடுவிக்கக் கூடும். ஆனால், தொடர்ந்த அக்கறையும் அன்புமே நோயாளியைப் பூரண சொஸ்தமாக்குகிறது. இயல்புக்குத் திரும்பச் செய்கிறது.
வில்மா ருடால்ஃப் என்ற ஓட்டப் பந்தய வீராங்கனையைப்பற்றிய புத்தகம் ஒன்றினை வாசித்தேன். 1960-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்ஸில் மூன்று தங்கப் பதக்கங்கள் பெற்ற அமெரிக்க வீராங்கனை. உலகின் மிக வேகமாக ஓடும் பெண் என்று புகழாரம் சூட்டப்பட்டவள்.
இந்த வெற்றியின் பின்னே ஒரு பெண்ணின் மன உறுதி மறைந்து இருக்கிறது. வில்மா சிறுவயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு, கால்கள் சூம்பிப் போய் படுக்கையிலே கிடக்கிறாள். அவள் வயதுப் பிள்ளைகள் வீதியில் விளையாடும்போது அவளால் வீட்டுக்குள்கூட நடக்க முடியவில்லை. உதவிக்கு அம்மாவோ, சகோதரிகளோ இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. வலது கால் வளைந்து இருந்தது.
|