உலக யுத்தங்கள், உள்நாட்டுக் கலவரங்கள் என எதையும் கண்டுகொள்ளாத நம் பொது ஜனங்கள், உண்மையில் பயப்படுவது ஒரே ஒரு சண்டையை நினைத்துத்தான். அது வீட்டுச் சண்டை.
யோசித்துப்பார்த்தால் வீட்டுச் சண்டை என்ற சொல் பார்க்க எளிமையாகத் தோன்றுகிறதே அன்றி, உலக யுத்தங்கள்கூட இவ்வளவு தீவிரமாக நடந்திருக்குமா என்று பிரமிக்கவைக்கும் அளவு விஸ்வரூபம்கொள்கின்றன. நடைபாதைவாசியில் இருந்து நாடாளும் மனிதர் வரைக்குமான பொதுப் பிரச்னை... வீட்டுச் சண்டை. இந்தச் சண்டையில் யார் எதிரி, யார் நண்பர், என்ன காரணத்தால் சண்டை நடக்கிறது என்பது அறிந்துகொள்ளவே முடியாது. கோயில், பூங்கா, கடற்கரை, ரயில், பேருந்துப் பயணங்களில் மனிதர்கள் அதிகம் பேசிக்கொள்வது வீட்டுச் சண்டையைப்பற்றித்தான். அதன் திரைவடிவம்தான் இன்றைய தொலைக்காட்சி நெடுந்தொடர்கள்.
மின்சார ரயிலில் ஒருநாள் காலை, வேலைக்குச் செல்லும் பெண் ஒருத்தி மயங்கி விழுந்துவிட்டாள். உடனே, சகபயணிகள் அவளுக்குத் தண்ணீர் தந்து உட்காரவைத்தார்கள். ஒரு பெரியம்மா, ''என்ன வீட்ல சண்டையா?'' என்று கேட்டார். ''ஆமாம்'' என்று மயங்கிய பெண் தலையசைத்தவுடன், ''அதுக்காகச் சாப்பிடாம வந்துட்டயாக்கும்'' என்று கேட்டார். அந்தப் பெண் தலைஆட்டினாள்.
என்ன சண்டை என்று யாரும் கேட்கவில்லை. காரணம், எல்லோருக்கும் அந்த அனுபவம் இருக்கிறது. சண்டை இல்லாத வீடுகளோ, கோபித்துக்கொள்ளாத கணவன் - மனைவியோ உலகில் இல்லை. வீட்டுச் சண்டையில் உருவான கோபம், இயலாமை, வலி, ஏக்கம் யாவும் பொது வெளிகளில் மிதந்துகொண்டு இருக்கிறது. அதுதான் சக மனிதன் மீது கோபமாக எதிரொலிக்கிறது. 'நானே வீட்ல சண்டை போட்டுட்டு வந்திருக்கேன். நீ வேற ஏன் உயிரை வாங்குற?' என்று வாய்விட்டுச் சொல்லும் பலரைக் கண்டிருக்கிறேன்.
நதிமூலம், ரிஷிமூலம் தேடிக் காணவே முடியாது என்பார்கள். அத்துடன் வீட்டுச் சண்டைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். அதன் வேர் எங்கே இருக்கிறது... விதை என்று முளைத்தது என்று கண்டுபிடிக்கவே முடியாது. ஒருவகையில் இந்த வீட்டுச் சண்டைகள்தான் வாழ்வின் ருசி. ஒவ்வொரு குடும்பமும், அதற்கான காயங்களையும் சண்டைகளையும்கொண்டு இருக்கிறது.
குடும்பச் சண்டைகளில் வார்த்தைகள்தான் பிரதான ஆயுதம். அந்த நிமிஷங்களில்தான் இத்தனை வார்த்தைகள் அறிந்துவைத்திருக்கிறோமா என்று ஆச்சர்யம் உருவாகிறது. வார்த்தைகளைப் பிரயோகிக்கத் தெரியாத ஆண், எளிதில் அடிஉதைக்கு இறங்கிவிடுகிறான். வன்முறை, குடும்பத்தின் பிரிக்க முடியாத பகுதி போலும்.
கோபித்துக்கொண்டு சாப்பிடாமல் கிடப்பவர்கள், பேசாமல் இருப்பவர்கள், தன்னைத்தானே தண்டித்துக்கொள்பவர்கள், வீட்டைவிட்டுப் போகிறவர்கள், அழுது அழுது ஓய்கிறவர்கள், கடவுளின் முன்பு பிரார்த்தனையாகக் கொட்டுபவர்கள், தனக்குத்தானே பேசிக்கொள்பவர்கள் என்று சண்டையின் பிரதி பலிப்புகள் ஆண் - பெண் பேதமின்றி ஆயிரம் வழிகளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. சண்டை ஓய்வதே இல்லை. மரங்களை உலுக்கும் காற்று ஓய்ந்து போவதுபோல, அது அடங்குகிறதே தவிர, விலகிப் போவதே இல்லை!
பிரபல ஹிந்தி எழுத்தாளர் பிரேம்சந்த், உறவு என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். ஆற்றின் கரையோரம் உள்ள சிறிய கிராமம். அங்கே தனது வயதான அப்பா - அம்மாவைக் காண்பதற்காக நகரத்தில் இருந்து மகன் கிளம்பிச் செல்கிறான். சொந்த ஊருக்குப் போய் ஐந்து வருடங்களாகிவிட்டன. வேலை, பிள்ளைகளின் படிப்பு என்று நகரத்தில் தங்கிவிட்டவன் அவன்.
|