'நாளை உன் கழுத்தை இறுக்கப்போகும் சுருக்குக் கயிற்றை வேடிக்கை பார்க்கவே நான் காத்திருக்கிறேன்' என்று விலக்கித் தள்ளிவிட்டாள் எசானின் தாய். மறு நாள் பெனாட் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டப்பட்டு ஒரு முக்காலி மீது நிறுத்தப்பட்டு இருந்தான். எசானின் தாய், அந்த முக்காலியைத் தன் காலால் உதைத்து பெனாட்டின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றிவைத்தாள். அவள் கண் முன்னே பெனாட்டின் சாவு நடந்தேறியது. புரிந்துகொள்ள முடியாத மனித உணர்வெழுச்சியின் நாடகம் அது.
வீட்டைவிட்டு ஓடி வந்த சிறுவர்களின் வாழ்க்கை குறித்து தமிழில் அதிகம் எழுதப்படவில்லை. திரைப்படங்களில் அது வெறும் உத்தி மட்டுமே. ஆனால், அஸ்ஸாமியின் புகழ்பெற்ற இயக்குநரான ஜானு பரூவா Konikar Ramdhenu என்ற படத்தை இயக்கிஇருக்கிறார். இதை டெல்லி திரைப்பட விழாவில் பார்த்திருக்கிறேன். மிகச் சிறப்பான படம். இந்தப் படம் வீட்டைவிட்டு ஓடி வரும் சிறுவனின் பார்வையிலே விவரிக்கப்படுகிறது.
குக்கூ... 11 வயது கிராமத்துச் சிறுவன். ஒருநாள் வீட்டைவிட்டு ஓடி கௌஹாத்தி நகருக்கு வந்துவிடுகிறான். நகரில் எங்கே போவது, என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரு கார் மெக்கானிக் பட்டறையில் வேலைக்குச் சேருகிறான். அங்கே அவனைப்போல ஓடி வந்த சில சிறுவர்கள் வேலை பார்க்கிறார்கள். பட்டறையிலே உறங்குகிறான். ஒருநாள் குக்கூவை மெக்கானிக் வன்புணர்ச்சிகொள்ள முயற்சிக்கிறான். பயந்துபோன குக்கூ அவனை இரும்பு ஸ்பானரால் ஓங்கி அடிக்க, அந்த மெக்கானிக் இறந்துபோய்விடுகிறான்.
குக்கூவை போலீஸ் கைதுசெய்து நீதிமன்றம் கொண்டுசெல்கிறார்கள். அங்கே குக்கூ உண்மையைச் சொல்ல மறுக்கிறான். ஆனால், குற்றத்தை ஒப்புக்கொள்கிறான்.
மிகப் பழமையான சிறுவர் சீர்திருத்தப் பள்ளி ஒன்றுக்கு குக்கூ அனுப்பப்படுகிறான். அந்தப் பள்ளியில் சிறுவர்களுக்கு வழங்கப்படும் உணவு மிக மோசமாக இருக்கிறது. அதில் இரண்டு ஒப்பந்தக்காரர்கள் காசு அடிக்கிறார்கள். அங்கும் சிறுவர்கள் கட்டாயப் பால் இச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். ஊழல் மோசடி தலைவிரித்து இருக்கிறது. அந்தச் சூழலை குக்கூவால் தாங்க முடியவில்லை. வன்புணர்ச்சியை எதிர்க்கும் அவனைச் சக சிறுவர்கள் மற்றும் சிறைக் காவலர் அடித்துத் துன்புறுத்துகிறார்கள். அவன் இந்த நரகத்தில் இருந்து எப்படித் தப்பிப்பது என்று தெரியாமல் போராடுகிறான்.
சீர்திருத்தப் பள்ளிக்கு வந்தபோதும் தான் ஏன் மெக்கானிக்கைக் கொன்றேன் என்ற உண்மையை குக்கூ சொல்லவே இல்லை. அதை விசாரித்து அறிக்கை அனுப்பும்படி சிறை வார்டனுக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. பிஸ்வபாரோ என்ற அந்த வார்டன் மிக நல்லவர். குக்கூவோடு அன்பாகப் பழகி, அவன் ஏன் வீட்டைவிட்டு ஓடிவந்தான் என்பதை அறிந்துகொள்ள முயற்சிக்கிறார். குக்கூ தன் ஊர் மிக அழகான கிராமம் என்றும் அங்கே தனது வீடு மிகப் பெரியது என்றும் கதைவிடுகிறான்.
அவனைப்பற்றிய விவரங்களை அறிந்துகொண்ட வார்டன், ஒரு நாள் கிளம்பி அந்தக் கிராமத்துக்குப் போகிறார். அது மிகவும் பின்தங்கிய கிராமம். எந்த அடிப்படை வசதியும் இல்லை. குக்கூவின் அம்மா இறந்துபோய்விட, மாற்றாந்தாய் அவனை மிகவும் துன்புறுத்தி இருக்கிறாள். குடும்பம் மிகுந்த வறுமையில் இருக்கிறது. அதனால்தான் வீட்டைவிட்டு ஓடி வந்திருக்கிறான்.
இந்த உண்மைகளை அறிந்த வார்டன், குக்கூவின் பிரச்னை எங்கிருந்து துவங்கியது என்பதை அறிந்துகொள்கிறார். அவரே மெக்கானிக் பட்டறைக்கும் சென்று விசாரிக்கிறார். உண்மை முழுமையாகப் புலப்படுகிறது.
முடிவில், அவர் நீதிமன்றத்தில் உண்மையை எடுத்துச்சொல்லி, குக்கூவை விடுவிக்கிறார். அவன் ஊருக்குக் கிளம்புகிறான். அவனோடு தானும் கிராமத்துக்கு வரப்போவதாக பிஸ்வா சொல்லவே, உண்மையைச் சொல்லிவிடுகிறான் குக்கூ. தனக்கு அந்த உண்மைகள் யாவும் முன்பே தெரியும் என்று அவனை அணைத்துக்கொள்ளும் பிஸ்வா, முடிவில் குக்கூவைத் தனது பையனாகத் தத்தெடுத்துக்கொள்கிறார். சீர்திருத்தப் பள்ளியில் சிறுவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள். ஏன் சிறுவர்கள் குற்றவாளி ஆக்கப்படுகிறார்கள் என்பதை இந்தப் படம் மிக நுட்பமாக வெளிப்படுத்துகிறது.
வீட்டை விலக்கி ஓடிய கால்கள் எவ்வளவு தூரம் கடந்து போனாலும், கண்ணில் விழுந்த மணல் துகள்போல வீட்டின் நினைவுகள் மனதில் உறுத்திக்கொண்டே இருக்கக்கூடும். அதுதான் என்றாவது அவர்களை ஊருக்கு அழைத்துவரும் ஒரே துணை!
|