"அது பொதுப் புத்தி. 20 வருடங்களுக்கு முன்பு வரை எந்த வெளிநாட்டுப் பயணியைப் பார்த்தாலும் நீங்கள் லண்டனில் இருந்து வருகிறீர்களா என்று கேட்பார்கள். இப்போது அது மாறியிருக்கிறது" என்று சொன்னேன். கவுன்சிலரின் இரண்டு செல்போன்கள் ஒரே நேரத்தில் ஒலிக்கத் துவங்கின.அவர் இரண்டு செல்போன்களையும் எடுத்து ரயில் பெட்டியே கேட்கும்படியான உச்சக் குரலில் பேசிக்கொண்டு இருந்தார். அவர்கள் கண்களாலேசிரித்துக் கொண்டார்கள்.
"முதன்முறையாக கொடைக்கானலுக்குப் போகிறீர்களா?" என்று கேட்டேன். ஆமாம் என்று தலையாட்டினார்கள். "எப்படி இருக்கிறது உங்களது இந்தியப் பயணம்?" என்றதும், "இந்தியர்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஒன்று, எங்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்அல்லது வியந்து வியந்து பார்க்கிறார்கள். படித்தவர்களுக்கே கூட வெளிநாட்டுப் பயணிகளைப்பற்றிய தவறான நம்பிக்கைகள் நிறைய இருக்கின்றன" என்றார்.
அதை ஆமோதிப்பதுபோல ஆடா, "வெளிநாட்டுப் பெண்கள் என்றால் வேசைகள் என்றுதான் இந்தியாவில் படித்தவர்கள்கூட நினைக்கிறார்கள். பொதுஇடங்களில் நாங்கள் பாலுறவுகொள்வோம் என்று நம்பி, பின்னாடியே துரத்துகிறார்கள். எவ்வளவு அபத்தமான கற்பனை இது."
ரஃபேல் தொடர்ந்து பேசினார், "நான் அசைவம் சாப்பிடுவது இல்லை. முழுமையான வெஜிடேரியன். அதை ஒருவர்கூட நம்ப மறுக்கிறார்கள். வெளிநாட்டுக்காரர் எப்படி வெஜிடேரியனாக இருக்க முடியும் என்கிறார்கள். இதுவாவது பரவாயில்லை. வெள்ளைக்காரர் என்றால் கட்டாயம் கிரிக்கெட் பிடிக்கும், மைக்கேல் ஜாக்சன் பாடல்கள் கேட்பார்கள், போதை மருந்து சாப்பிடுவார்கள், எல்லோரும் பையில் துப்பாக்கி வைத்திருப்பார்கள் என்று நம்பு கிறார்கள்.
ஆந்திராவில் ஒரு ஆட்டோ டிரைவர் எங்களிடம், தான் அனகோண்டா பார்த்திருப்பதாகச் சொல்லி, அது சூப்பராக இருப்பதாகப் பாராட்டினார். அனகோண்டா என்றால் என்னவென்றே புரியவில்லை. பிறகு, விசாரித்தபோது அது ஹாலிவுட் படம் என்று தெரிந்துகொண்டோம்" என்று சிரித்தார்.
கவுன்சிலர் தனது துணிப் பையைத் திறந்து அதிலிருந்து ஒரு பிளாஸ்டிக் டம்ளர், குளிர்பானம் இரண்டையும் வெளியே எடுத்துவைத்தார். பிறகு, இடுப்பில் இருந்து ஒரு குவாட்டர் பாட்டிலை எடுத்து டம்ளரில் ஊற்றிக் கலந்தார். பிறகு, அவர்களிடம் தன்னிடம் இன்னொரு குவாட்டர் இருப்பதாகவும் அவர்கள் விரும்பினால் சேர்ந்து சாப்பிடலாம் என்றும் சொன்னார். அதற்கு ரஃபேல் தாங்கள் பயணத்தின்போது குடிப்பது இல்லை. அதிலும் பிளாஸ்டிக் டம்ளரில் ஊற்றிக் குடிப்பது பார்க்கவே ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது என்றார்.
கவுன்சிலர், "அதெல்லாம் பழக்கமாகிருச்சி சார்" என்றபடியே உணவுப் பொட் டலங்களைப் பிரித்து சாப்பிடத் துவங்கியிருந்தார். சிக்கன் நூடுல்ஸ் மற்றும் பரோட்டா - மட்டன் சுக்கா வாசனை ரயில் பெட்டி எங்கும் நிரம்பியது.
ரஃபேல் ரகசியமான குரலில், "ஏன் இந்தியாவில் சைனீஸ் ஹோட்டல்கள் மீது இவ்வளவு மோகம். நெடுஞ்சாலையில்கூட சைனீஸ் நூடுல்ஸ் கடைகள் இருக் கின்றனவே, அது எப்படி வந்தது?" என்று கேட்டார். "10 வருடங்களுக்குள் இந்திய உணவு முறை பெரிதும் மாறிவிட்டது. இப்போது எல்லா இடங்களிலும் ஃபாஸ்ட் ஃபுட்தான்" என்றேன். ரஃபேல் கண்சிமிட்டி, "அது உண்மை யில் ஃபாஸ்ட் ஃபுட் இல்லை, ஸ்லோ பாய்சன்" என்று சொன்னார்.
கவுன்சிலர் தன்னிடம் இருந்த பரோட்டாவில் ஒன்றை அவர் கள் சாப்பிட்டுப் பார்க்கும்படி வற்புறுத்தினார். தாங்கள் இரவு உணவை ஏழு மணிக்குச் சாப்பிட்டுவிட்டதாகச் சொன்னார்கள். அதை கவுன்சிலர் நம்பத் தயாராக இல்லை.
ஆடா என்னிடம், "தமிழ்நாட்டில் வெள்ளை உடை அணிந்தவர்கள் அத்தனை பேரும் அரசியல்வாதிகளா?" என்று கேட்டார். இல்லை என்றேன். "பிறகு, ஏன் இவர்கள் பேன்ட்-ஷர்ட்அணிவது இல்லை. பெண் அரசியல்வாதிகளுக்கும் இப்படி ஏதாவது டிரெஸ் கோட் இருக்கிறதா என்ன? சுடிதார் அல்லது ஜீன்ஸ் அணிந்த ஒரு பெண் அரசியல்வாதியைக்கூடப் பார்க்க முடியவில்லை. ஏன் அப்படி? ஏதாவது கலாசாரத் தடையா?"
"ஒரு வரியில் இதற்கு விளக்கம் சொல்ல முடியாது. விளக்கிச் சொல்ல முடியாத நம்பிக்கைகள், மரபு மற்றும் கலாசார அடை யாளங்கள் இருக்கின்றன" என்றேன்.
|