சீனாவில் பெரிய பாதங்களைக்கொண்ட பெண் துரதிர்ஷ்டம் கொண்டவள். அவளால் குடும்பம் சீரழிந்துவிடும் என்ற மூடநம்பிக்கை ஒன்று இருக்கிறது. இந்த நம்பிக்கையால் பெரிய பாதங்களைக்கொண்ட விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் வெறுத்து ஒதுக்கப்பட்டார்கள். தண்டிக்கப்பட்டு இருக்-கிறார்கள் என்கிறது சீன வரலாறு.
சீனாவின் இளம் தலைமுறை இயக்குநர்களில் ஒருவரான யாங்யாசூ இயக்கிய Pretty Big feet என்ற படத்தைப் பார்த்திருக்கிறேன். இது பல முக்கிய உலக திரைப்பட விழாக்களில் விருதுகளைப்பெற்று இருக்கிறது. அகலமான பாதம்கொண்ட ஒரு பெண்ணின் போராட்டம் மிக்க வாழ்க்கையை இந்தப் படம் விவரிக்கிறது.
ஷாங்மெய்லி பெரிய பாதங்களைக்கொண்டவள். சீனாவின் வறட்சியான பாலைக் கிராமம் ஒன்றில் வசிக்கிறாள். இவளது கணவன் அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்டு இறந்து போகிறான். மெய்லியின் பாதங்கள் உருவாக்கிய துரதிர்ஷ்டம் அது என்று ஊரார் சொல்கிறார்கள். மெய்லி தன் கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் சிறுவர்-களுக்காக ஒரு பள்ளிக்கூடத்தை நடத்துகிறாள். அவள் பள்ளிப்படிப்பு மட்டுமே முடித்தவள். அதனால் அவளுக்குத் தெரிந்ததை மட்டுமே கற்றுத் தருகிறாள்.
தன்னுடைய பள்ளிக்குச் சரியான ஒரு ஆசிரியர் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று அவள் முறையிட்டபடியே இருக்கிறாள். படித்த, நகரைச் சேர்ந்த எவரும் இது போன்ற கிராமப் பள்ளிக்குச் சேவை செய்ய முன்வருவதே இல்லை. ஒரு நாள் ஜியா என்ற ஆசிரியை அவர்கள் பள்ளிக்குப் புதிதாக வந்து சேர்கிறாள். அவளை மெய்லிக்கு ரொம்பவும் பிடித்துப் போகிறது.
முறையான வகுப்பறைகள், பெஞ்சுகள் எதுவும் இல்லாமல் நடக்கும் அந்தப் பள்ளிக்கூடத்தை ஜியாவுக்குப் பிடிக்கவே இல்லை. நகரத்தில் பிறந்து, படித்து, வாழ்ந்த அவளைக் கணவன் விவாகரத்து செய்துவிடுகிறான். அந்த மன வெறுமையில் இருந்து விடுபடவே அவள் தொலைதூரத்தில் உள்ள இந்த கிராமப் பள்ளிக்கு வந்து சேர்ந்திருந்தாள்.
எங்கே ஜியா கோபித்துக்கொண்டு போய்விடு-வாளோ என்று பயந்து, மெய்லி அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துக் கவனிக்-கிறாள். அந்தக் கிராமத்துக் குடிநீர் நன்றாக இல்லை என்று ஜியா குறைபடுகிறாள். உடனே, மெய்லி பள்ளி மாணவர்களை அழைத்துக்கொண்டு நடந்தே அருகில் உள்ள ஒரு ரயில் நிலையத்துக்குச் சென்று அங்கே பயணிகள் சாப்பிட்டு தூக்கிப் போடும் ஆரஞ்சுப் பழத்தின் தோலைச் சேகரித்து வருகிறாள். அதை உலரவைத்துப் பொடியாக்கி, அந்த ஆரஞ்சுப் பொடியைத் தண்ணீரோடு சேர்த்துக் கொதிக்க வைத்து ஆரஞ்சு மணம் உள்ள சுவைநீரைக் குடிக்கத் தருகிறாள். ஜியாவுக்கு மெய்லியின் மனதும் அக்கறையும் மெள்ள புரியத் துவங்குகிறது.
ஜியா பள்ளியை மேம்படுத்துவதில் துணை நிற்கிறாள். இந்த நிலையில் ஒருநாள் ஜியா கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது. பிரசவத்-துக்காக நிச்சயம் ஜியா நகரத்துக்குப் போய்விடுவாள். பிறகு, தன் கிராமத்துக்குத் திரும்பி வர மாட்டாள் என்ற வேதனை மெய்லிக்குள் வருகிறது. தன் மனைவி கர்ப்பமாக இருந்ததை அறிந்த ஜியாவின் கணவன் அவளை மறுபடி ஏற்றுக்கொள்கிறான். அவள் நகரம் சென்றுவிடுகிறாள். கிராமப் பள்ளிக்கு கம்ப்யூட்டர் வாங்க நிதி திரட்ட மெய்லி மாணவர் களை அழைத்துக்கொண்டு தலைநகரம் செல்கிறாள். ஜியாவின் உதவியால் கம்ப்யூட்டர் வாங்க நிதியுதவி அளிக்கப்படுகிறது.
கிராமப் பள்ளிக்கு நவீன கணிப்பொறிகள் வந்து சேர்கின்றன. வகுப்பறை உருமாறுகிறது. புதிய பள்ளி வளாகத் துவக்க விழா நடைபெற உள்ளது. விடிந்தால் பள்ளித் திறப்பு விழா. இரவில் அவள் டிராக்டர் ஓட்டிக்கொண்டு போகும்போது அயர்ந்து உறங்கிவிடுகிறாள். கேட் இல்லாத ரயில்வே தண்ட-வாளத்தில் சிக்கி ரயிலில் அடிபட்டு இறந்துவிடுகிறாள். அந்தத் துக்கம் ஊரைப் பற்றிக்கொள்கிறது. ஜியா தன் குழந்தையுடன் அந்த பள்ளிக்குப் புதிய ஆசிரியையாக வந்து சேர்கிறாள். பாதங்கள் மட்டுமில்லை... மெய்லியின் மனதும் மிகப் பெரியது என்ற உணர்வோடு படம் நிறைவுறுகிறது.
மலைகள், மரங்கள், கட்டடம் என்று உயரத்தை எப்போதும் ஒரு பிரமிப்புடன் பார்த்து வியக்கும் நாம், பெண்களிடம் மட்டுமே பேதம் காட்டுகிறோம் என்பது வெட்கப்பட வேண்டிய குற்ற உணர்ச்சியே ஆகும்!
|