மரியா கோல்மென் என்ற எழுத்தாளரின் உளவியல் முடிவுகள் என்ற ஒரு சிறுகதை நினைவுக்கு வருகிறது. மனிதர்களின் இயல்பு மிகவும் சீரழிந்து போயிருக்கிறது என்று நம்பும் ஓர் உளவியல் மருத்துவர், அதைச் சோதித்துப்பார்க்க மேற்கொண்ட சில நேரடியான நிகழ்வுகளை இந்தக் கதையில் விவரிக்கிறார்.
ஒருநாள் உளவியல் மருத்துவர் ஒரு பல்பொருள் அங்காடிக்குப் போகிறார். பொருட்களை வாங்கிக்கொண்டு பணம் தருகிறார். மிச்சம் தர வேண்டிய பணத்தை வேண்டும் என்றே மறந்து போனவரைப்போல கேட்காமல் வெளியேறுகிறார். கடையில் இருந்த விற்பனையாளன் தானாக அவரை அழைத்து மீதப் பணத்தைத் தருகிறானா என்று சோதிப்பதுதான் அவரது விருப்பம்.
விற்பனையாளன் அவர் கேட்கவில்லை என்றதும் மிச்சப் பணத்தை உடனே எடுத்து ஒளித்துக்கொள்கிறான். அடுத்த ஐந்தாவது நிமிடம் அவர் கடைக்குள் நுழைந்து தனது மிச்சப் பணத்தைக் கேட்கிறார். விற்பனையாளன் அவரிடம் தந்துவிட்டதாகக் குரலை உயர்த்திப் பதில் சொல்கிறான். இருவரும் சண்டை போடுகிறார்கள். விற்பனையாளன் மசியவே இல்லை.
உடனே, அவர் ஒரு போலீஸ்காரரை வரவழைக்கிறார். விசாரணை நடக்கிறது. இப்போது அந்த விற்பனையாளன் மிச்சப் பணத்தைத் தான் மறந்துவிட்டதாக ஒப்புக்கொண்டு திருப்பித் தருவதோடு, 'நெருக்கடியான வேலைதான் அதற்குக் காரணம்' என்று ஒரு பொய்யையும் சொல்கிறான். இந்தச் சோதனையில் ஏமாற்றும் குணம் இயல்பாகி இருப்பதை உளவியல் மருத்துவர் உறுதி செய்கிறார்.
அதேபோல ஒரு நண்பனை வீட்டுக்கு விருந்து சாப்பிட வரவழைக்கிறார். ருசியான உணவு வகைகளை இருவரும் சாப்பிடுகிறார்கள். உணவின் நடுவில் அவர் தன் நண்பனிடம், அவன் தன்னைப்பற்றி வெளியே எப்படி எல்லாம் அவதூறுகள் சொல்கிறான். எவ்வளவு வதந்திகளைப் பரப்புகிறான். தன்னிடம் இருந்து எதையாவது ஏமாற்றி வாங்க எவ்வளவு முயற்சிக்கிறான் என்பதை முகத்துக்கு நேராக விளக்கிச் சொல்கிறார். உடனே நண்பன் சாப்பாடு போட்டு என்னை அவமானப்படுத்துகிறாயா என்று கத்துகிறான். மருத்துவர் 'பிரச்னை சாப்பாடு இல்லை. நீ ஏன் இரட்டை வேஷம் போடுகிறாய்' என்று கேட்கிறார். அவன் உடனே கோபத்தில் 'உன் நட்பே எனக்குத் தேவை இல்லை' என்று வெளியேறிப் போகிறான். தனது இரட்டை வேஷத்தை எந்த மனிதனும் ஒப்புக்கொள்வதே இல்லை என்ற அடுத்த முடிவையும் மருத்துவர் உறுதியாக்கிக்கொள்கிறார்.
அதுபோலவே தான் காதலிக்கும் பெண்ணின் பிறந்த நாளுக்கு அழகான பரிசு ஒன்றைக் கொண்டுபோகிறார். அந்தப் பரிசு மிகப் பெரியதாக இருக்கிறது. நிச்சயம் விலைமதிப்புமிக்க ஏதோ ஒன்றைக் கொண்டுவந்திருப்பதாகக் காதலி மகிழ்ச்சிகொள்கிறாள். பிறந்த நாள் கொண்டாட்டம் துவங்குகிறது. பலரது முன்பாக அந்தப் பரிசைப் பிரித்துப் பார்க்கச் சொல்கிறார். உள்ளே திறந்து பார்த்தால், 10, 15 வண்ணத்துப்பூச்சிகள் பறக்கின்றன. அதுதான் பிறந்த நாள் பரிசு.
காதலி மிகவும் கோபப்பட்டு தன்னை அவர் அவமானப்படுத்திவிட்டதாகக் கத்துகிறாள். அவர் அந்த வகை வண்ணத்துப்பூச்சிகள் மிக அரிதானவை என்று விளக்கிச் சொல்கிறார். அவளோ கோபத்துடன், அவர் பணம் செலவழிக்கத் தயங்கும் கஞ்சன், காதலைப் புரிந்துகொள்ளாத ரசனையற்ற முட்டாள் என்று கத்தி விரட்டுகிறாள். காதலின் பின்னாலும் பணமே ஒளிந்திருக்கிறது. பணம் செலவழிக்காத ஒருவனைக் காதலிக்க எவரும் தயாராக இல்லை என்ற உண்மையை அறிந்துகொள்கிறார். இப்படியாக அவரது எளிய சோதனைகள் மனிதனின் பாசாங்குகளை, போலித்தனத்தை உறுதிசெய்கின்றன என்று முடிகிறது கதை.
எந்தப் பரிசோதனையாலும் மனித சுபாவத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்பதே உண்மை. பச்சோந்திகள் நிறத்தை மட்டுமே மாற்றிக்கொள்கின்றன. மனிதர்கள் நிறத்தை மாற்றிக்கொள்வது இல்லை. மாறாக, பச்சை நிறத்தையே சிவப்பு நிறம் என்று நம்பவைக்கும் திறன் பெற்றிருக்கிறார்கள். நம்பவும் செய்கிறார்கள்.
ஒருபக்கம் நம்பிக்கைகள் பொய்த்துப்போகும் வேளையில், இன்னொரு பக்கம் விளக்கிச் சொல்ல முடியாத அர்ப்பணிப்புகள், அக்கறைகள், தியாகங்கள் உலகில் நடந்தபடியேதான் இருக்கின்றன. ஒரு முறை டெல்லி ரயிலில் சதுரங்கம் விளையாடியபடியே வந்த 12 வயதுச் சிறுவன் ஒருவனைச் சந்தித்தேன். அவனும் அவனது அப்பாவும், பகலும் இரவுமாக விளையாடியபடியே வந்தனர்.
|