கொண்டாட்டங்களில் மட்டும்தான் இன்றைய இளைஞர்களுக்கு ஆர்வம் இருக்கிறது. யாருக்கும் சமூக அக்கறைகள் கிடையாது. குடி, ஆட்டம் பாட்டம், விரைவாகப் பணம் சம்பாதிக்கும் பேராசை இவைதான் இளைஞர்களுக்குப் பொது குணம் என்று பரவலாக ஒரு எண்ணம். நான் இந்த எண்ணங்களுக்கு நேர் எதிரானவன். முன் எப்போதையும்விட இன்றுதான் இளைஞர்கள் சமூக அக்கறைகளில் நேரடியாகவும் சுய அர்ப்பணிப்போடும் செயல்படுகிறார்கள். அவர்கள் இந்த சமூகத்துக்கு ஒரு பாடத்தைக் கற்றுத் தருகிறார்கள். அது பலரின் கண்ணில் படுவது இல்லை, அல்லது அதன் முக்கியத்துவம் பெரிதாக அடையாளம் தெரியாமலே போய்விடுகிறது.
ஜெர்மனியில் உள்ள கனரகத் தொழிற்சாலை ஒன்றில் உயர் பதவியில் வேலை செய்த 28 வயது இளைஞன், அதை உதறிவிட்டு, சென்னையில் உள்ள மனநலம் குன்றியவர்களுக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றுவதை நான் அறிவேன். இது போலவே, அமெரிக்காவில் பார்த்து வந்த வேலையைத் துறந்துவிட்டு, வனவாசிகளுக்கு என்று சிறப்புப் பள்ளி அமைத்து, கல்வி அறிவு தந்து வரும் இளைஞர்களை அறிவேன்.
மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம் என்று துறை சார்ந்த தங்கள் திறமைகளை மக்கள் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்ற பொது அக்கறை, முன் எந்தக் காலத்தையும்விட இன்று அதிகம் காணப்படுகிறது. ஆனால், இவர்கள் சந்திக்கும் தடைகளும் முட்டுக்கட்டைகளும் அதற்கான உரிய அங்கீகாரம் இன்மையுமே இவர்களின் தொடர்ந்த செயல்பாட்டினைத் தடுத்துவிடுகிறது.
உயர் வேளாண்மையில் முனைவர் பட்டம் பெற்று அமெரிக்காவில் பணியாற்றிய ஓர் இளைஞன், விவசாயத்தின் மீது ஆர்வம்கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகம் திரும்பியிருந்தான். ஒருநாள் என்னை வந்து சந்தித்து, தான் கிராமத்தில் விவசாயம் செய்யப் போவதாகத் தெரிவித்தான். முதன் முறையாக விவசாயம் செய்ய விருப்பப்படும் ஒரு படித்த விஞ்ஞானியை நேரில் காண்பது சந்தோஷமாக இருந்தது. விவசாயத்தில் என்ன செய்ய விரும்புகிறான் என்பதைப்பற்றி விசாரித்தேன். தன்னுடைய சொந்தக் கிராமத்தில் கொஞ்சம் இடம் வாங்கி, புதிய விவசாய முறைகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்ய விரும்புவதாகச் சொன்னான். அந்த இளைஞனின் கண்களில் விவரிக்க முடியாத கனவுகள் மிதந்துகொண்டு இருந்தன.
தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான பொறியியல் கல்லூரிகள் உருவாகி இருக்கின்றன. ஆனால், எத்தனை விவசாயக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன? விவசாயம் சார்ந்த எத்தனை புதிய தொழில்நுட்பங்கள், இயற்கை விவசாயம் சார்ந்த அக்கறைகள் உருவாகியுள்ள சூழலில்கூட, அதை முறையாகக் கற்றுக்கொள்ளவும் நடைமுறைப்படுத்தவும் ஏன் கல்வி அமைப்புகள் முன்வரவே இல்லை? இயற்கை விவசாயம்பற்றி கற்றுக்கொள்வதற்கு என ஏன் தனியே ஒரு கல்லூரி அமைக்கக் கூடாது? அதோடு, விவசாயத்தின் ஆதாரப் பிரச்னையான நீர்ப்பங்கீடு, நீராதார மேம்பாடு போன்றவற்றைப்பற்றிய அக்கறைகள் ஏன் கல்வி நிறுவனங்களில் சிறப்புக் கவனம் பெறவே இல்லை என்று அன்று நெடுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.
தன்னிடம் பெரிய கனவுகள் இல்லை. ஆனால், நடைமுறைப்படுத்தக்கூடிய சில சாத்தியங்களைத் தான் வைத்திருப்பதாகவும், அதை ஏதோ ஒரு வணிக நிறுவனத்திடம் விற்பதைக் காட்டிலும், சுயமாகச் செய்து பார்த்து மக்களுக்குப் பயன் உள்ளதாக மாற்ற முன்வந்திருப்பதாகவும் தெரிவித்தான், அந்த இளைஞன்.
|