ஒவ்வொரு மனிதனும் ஒரு பாடப் புத்தகம். அவனிடம் இருந்து என்ன கற்றுக்கொள்வது, எப்படிக் கற்றுக்கொள்வது என்பது ஆராய்ந்து அறிய வேண்டிய சுயமுயற்சி. மிட்ச் ஆல்பம் என்ற பிரபல விளையாட்டு வர்ண னையாளர் எழுதிய மோரியுடனான செவ்வாய்க்கிழமைகள் (Tuesday's with morrie) என்ற புத்தகத்தைச் சமீபத்தில் வாசித்தேன். வழக்கமான சுயநம்பிக்கைப் புத்தகங்களில் ஒன்றாக இருக்கும் என்று பல முறை புத்தகக் கடைகளில் இதைக் கடந்து போயிருக்கிறேன்.
ஆனால், இந்த முறை மைசூரில் உள்ள புத்தகக் கடை ஒன்றில் இதே புத்தகத்தைப் பார்த்தேன். விற்பனைப் பெண் கண்ணில் வியப்பு வழிய... இதைப் படித்தால் நிச்சயம் அழுதுவிடுவீர்கள். பயணத்தில் படிக்க உகந்த புத்தகம் இல்லை. இது ஒரு வாழ்க்கைப் பாடம் என்று புகழாரம் சூட்டியபடியே சிபாரிசு செய்தாள். அப்படிச் சிபாரிசு செய்யப்பட்ட பல புத்தகங்கள் ஏமாற்றத்தைத் தந்திருக்கின்றன. ஆனால், மோரியுடனான செவ்வாய்க்கிழமைகள், அந்தப் பெண் சொன்னதை நிஜமாக்கியது.
மைசூரில் இருந்து ரயிலில் சென்னை வருவ தற்குள் அதைப் படித்து முடித்தபோது நிம்மதி யாக உறங்க முடியவில்லை. மனதில் ஆழ்ந்த வலியும் தவிப்பும் உருவானது. இரண்டு நாட்களில் மூன்று முறை அந்தப் புத்தகத்தைப் படித்தேன். ஒரு புத்தகம் வாசகனின் இருப்பை நிலைகுலையவைப்பது அரிதாகவே நடக்கிறது.இந்தப் புத்தகம் அந்த வகையைச் சேர்ந்தது.
மோரி ஷ்வார்ட்ஸ் எனப்படும் முதிய பேராசிரியரின் இறுதி நாட்களை விவரிக்கும் இந்தப் புத்தகம், அவரது மாணவர்களில் ஒருவரான மிட்சால் எழுதப்பட்டு இருக் கிறது. அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் சமூக உளவியல் பேராசிரியராக இருந்தவர் மோரி. 1970-களில் மிட்ச் கல்லூரியில் படித்தபோது, மோரிதான் மிட்சின் ஆதர்சப் பேராசிரியர். படித்து முடித்த பிறகு, பேராசிரியரை மிட்ச் பல வருடங்கள் சந்திக்கவே இல்லை. ஒருநாள் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேராசிரியர் பற்றிய செய்தியை அறிகிறார்.
வயதான மோரி, மிகக் கொடிய நரம்பு நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நோய் உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாகச் செயல் இழக்கச் செய்து மரணம் அடையச் செய்துவிடும். இந்தச் செய்தியைக் கேட்டதும் அவர் உடைந்துபோகிறார். தனது நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதை உணர்கிறார். மிச்சம் இருக்கும் நாட்களைப் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று திட்டமிடுகிறார்.
இதற்காகத் தன்னிடம் படித்த மாணவர்கள், நண்பர்கள் பலரையும் அழைத்து, தான் இதுவரை வகுப்பில் கற்றுத்தராத எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. நாம் வாரத்தில் ஒருநாள் சந்தித்து வாழ்க்கைபற்றி கற்றுக் கொள்ளலாம். இதில் நான் பேராசிரியர், நீங்கள் மாணவர்கள் என்று இல்லை. பரஸ்பரம் அவரவருக்குத் தெரிந்த அனுபவங்களை, உண்மைகளைப் பகிர்ந்துகொள்ளலாம் என்கிறார். அப்படித்தான் அவரது செவ்வாய்க்கிழமைச் சந்திப்புகள் துவங்கின.
இந்தச் சந்திப்புக்கான பல வருஷங்களுக்குப் பிறகு தன் பேராசிரியரைத் தேடி வருகிறார் மிட்ச். 'பள்ளிகள், கல்லூரிகள் பாடங்களை மட்டுமே கற்றுத்தருகின்றன. வாழ்க்கையை அல்ல!' என்று உறுதியாகச் சொல்லும் பேராசிரியர், தன் வகுப்பின் முக்கிய நோக்கம் அவரவர் மனதில் உள்ள கேள்விகளைப் பகிர்ந்துகொள்வதே. நாம் அனைவரும் சேர்ந்து அதற்கான விடையைத் தேடிப் பார்க்கலாம். முடிந்தால் கண்டுபிடிக்கலாம் என்கிறார்.
இந்த வகுப்புகள் மோரியின் வீட்டில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை காலை உணவுக்குப் பிறகு ஆரம்பமாகின. இங்கே வாழ்க்கைதான் ஒரே பாடம்.அதைப்பற்றி அவரவர் சந்தேகங்கள், பயங்கள், தோல்விகள், ஏமாற்றங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். இதற்கு மதிப்பெண்கள் எதுவும் இல்லை... புத்தகங்கள் இல்லை. உரையாடல்தான் வகுப்பின் முக்கிய அம்சம்.
|