மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனம் கொத்திப் பறவை - 24

மனம் கொத்திப் பறவை!
பிரீமியம் ஸ்டோரி
News
மனம் கொத்திப் பறவை!

மனம் கொத்திப் பறவை - 24

காந்தி எப்போது அழகு?

ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில், அரசு ஊழியர்களைக் கூண்டோடு வீட்டுக்கு அனுப்பியபோது, 'இது என்ன அராஜகம்?’ என்று கவலைப்பட்டவர்களில் நானும் ஒருவன். ஆனால், அந்த விஷயத்தைப்பற்றி பொதுமக்களில் பலர், 'இது தேவைதான் இவர்களுக்கு’ என்று திருப்தி அடைந்தார் களே... அதன் காரணம் என்ன? அரசு ஊழியர் என்பதன் அர்த்தத்தை அவர் களில் சிலர் சரியாகப் புரிந்துகொள்ளாததால் ஏற்பட்ட விளைவு அது.  

மனம் கொத்திப் பறவை - 24

அரசு ஊழியர் என்பவர், பொதுமக்களின் ஊழியர். ஆனால், பொதுவாக என்ன நடக்கிறது? அரசு ஊழியர்கள் சிலர் தங்களிடம் வரும் பொதுமக்களை எப்படி நடத்துகிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். நம் வீட்டுப் பணியா ளரைக்கூட அப்படி நடத்த மாட்டோம்; நடத்தினால் கோபித்துக்கொண்டு வேலையைவிட்டு நின்றுவிடுவார். ஆனால், நமக்கு எஜமானர்களாகிய,நமக்குப் படியளக்கிற பொதுஜனத்தை அரசு ஊழியர்கள் எப்படி நடத்துகிறார்கள்?

இது ஒரு பக்கம் என்றால், அரசு அலுவலகங்களின் உள்ளேயே அதிகாரி களுக்கும், இடை, கடைநிலை ஊழியர்களுக்கும் இடையே உள்ள உறவு படுபயங்கரமானது. ஆனால், வட இந்தியாவில் இப்படி இல்லை. 12 ஆண்டுகள் டெல்லி மாநில அரசில் ஸ்டெனோவாக வேலை பார்த்தேன். ஒரு வேலை செய்து கொடுத்தால், ஏதோ அந்த அதிகாரியின் சொந்த வேலையைச் செய்து கொடுத்ததுபோல் நன்றி சொல்லி, 'சாயங்காலம் ரெண்டு பேரும் பீர் சாப்பிடப் போகலாம்; வீட்டுக்கு ஓடிவிடாதே’ என்று சொன்னவர்களையும், தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, தடபுடலாக விருந்து கொடுத்த அதிகாரிகளையும் சந்தித்திருக்கிறேன். ஆனால், அங்கே இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து, மத்திய அரசின் ஓர் அலுவலகத்தில் சேர்ந்ததும் நிலைமை தலைகீழாக மாறியது. ஓர் அதிகாரி என் னைத் தினமும் 'இடியட்’ என்று திட்டுவார். இன் னொருவர், ஒரு ஸ்டெனோவைக் கழுத்தைப் பிடித் துத் தள்ளிய சம்பவத்தையும் பார்த்திருக்கிறேன். இதை எல்லாம் ஏன் நாங்கள் சகித்துக்கொண்டோம் என்றால், ஸ்டெனோக்களுக்கு அப்போது யூனியன் கிடையாது. எதிர்த்துப் பேசினால், நாகர்கோவிலுக்கு டிரான்ஸ்ஃபர் செய்துவிடுவார்கள். ஒரு வேலைக்காரனைப்போல் -இல்லை, தவறு-ஓர் அடிமையைப் போல் நடந்துகொள்ள வேண்டும்.

இதற்கிடையில், சாதிப் பிரச்னைகளும் கிளம்பும். ஓர் அதிகாரி ஆவணி அவிட்டம் அன்று காலையில் தாமதமாக வர யாருக்கும் அனுமதி இல்லை என்று எழுத்துபூர்வமான உத்தரவே போட்டார். இன்னோர் அதிகாரி, மீசை வைத்திருந்தவர்களை மட்டமாக நடத்தினார். சில அதிகாரிகளுக்கு 'சரக்கு’ எல்லாம் வாங்கிக்கொண்டுபோய்க் கொடுக்க வேண்டும். அதிலும் நான்தான் இதில் விஷயம் தெரிந்தவன் என்று நினைத்து, இந்தப் பிரச்னை எழும்போது எல்லாம் என் ஆபீஸ் நண்பர்கள் என்னைக் கூப்பிடுவார்கள். இதற்குப் பேசாமல் எங்காவது பாரில் போய் வேலை செய்யலாமே என்றுகூட அடிக்கடி தோன்றும்.

மனம் கொத்திப் பறவை - 24

ஒருமுறை ஓர் இலக்கியச் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக எனக்கு பாரிஸில் இருந்து அழைப்பு வந்திருந்தது. ஆபீஸைப் பற்றித்தான் தெரியுமே? ஒரு வருடம் இழுத்தடித்தார்கள். அதற்குள் அடுத்த ஆண்டு இலக்கியச் சந்திப்பே வந்துவிட்டது. மறுபடியும் அனுமதி கேட்டேன். மீண்டும் ஒருவருடம் இழுத்தடிப்பார்கள்போல் தெரிந்தது. உடனே, என் நண்பரிடம் கெஞ்சிக் கூத்தாடி, அவருடைய நிறுவனத்தில் வேலை செய்வதாகப் பொய் சான்றிதழ் பெற்று விசா வாங்கிச் சென்றேன். திரும்பி வந்ததும் உடனடியாக விருப்ப ஓய்வு பெற்றேன். அதற்குப் பிறகும் அந்த ஆபீஸுக்கு வருடத்துக்கு ஒருமுறை பென்ஷன் பேப்பரில் கையெழுத்துப் போடுவதற் காகச் செல்ல வேண்டி உள்ளது.

சென்ற வாரம் சென்றபோது ஒரு சம்பவம், ஒருமுறை ராமச்சந்திரன் என்ற அதிகாரியிடம் வேலை செய்தேன். உங்களுக்கு மாட்டும் அதிகாரி நல்லவரா அல்லது சைக்கோவா என்பது உங்கள்அதிர்ஷ் டத்தைப் பொறுத்தது. ராமச்சந்திரன் நல்லவர். என் அனுபவத்தில் இன்னொரு நல்ல அதிகாரி தியோடர் பாஸ்கரன். சுற்றுச் சூழலியலில் பிரபல மானவர். எப்போதாவது நான் வேலை பார்த்த ஆபீஸுக்குச் செல்லும்போது, ராமச்சந்திரனைச் சந்திப்பது வழக்கம்; அதுவும் அவர் விரும்பி யதால்.

காரில் உள்ளே நுழைந்தேன். கேட்டில் நின்று இருந்த ஊழியர், 'யாரைப் பார்க்கச் செல்கிறாய்?’ என்று கேட்டார். எனது சாரதி என் அதிகாரியின் பெயரைச் சொல்லாமல், அவர் வகிக்கும் பதவியைச் சொன்னார். அண்ணா சாலை எப்போதும் போக்குவரத்து நெருக்கடி உள்ள இடம்.  அதனால், யாராவது கேட்டால் சொல் லும்படி என் சாரதியிடம் ஏற்கெனவே சொல்லிவைத்திருந்தேன். (அதோடு, எங்கள் ஆபீஸில் யாரும் யாரையும் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள்.  ஏ 2 என்ற பிரிவைக் கவனித்துக்கொள்ளும் குமாஸ்தாவின் பெயர் ஏ 2.  அதேபோல் பி 2, சி 2 எல்லாம் உண்டு. தபால்களைப் பட்டுவாடா செய்பவரின் பெயர் டெஸ்பேட்ச்.  அதேபோல், அதிகாரிகளையும் ஏடி சார், டிடி சார் என்றே அழைக்க வேண்டும். ஏடி: அசிஸ்டென்ட் டைரக்டர்; டிடி: டெபுடி டைரக்டர். அதிகாரிகளாக இருந்தால், என்னை ஸ்டெனோ என்றும், எனக்குச் சமமாகவோ கீழ்நிலையிலோ இருந்தால் ஸ்டெனோ சார் என்றும் அழைப்பார்கள். மேலே சொன்ன இரண்டு அதிகாரிகள் மட்டுமே என் எட்டு ஆண்டு சர்வீஸில் என்னைப் பெயர் சொல்லி அழைத்தவர்கள்).    

என் சாரதி, அதிகாரியின் பதவியைச் சொன்னவுடன், அந்த அரசு ஊழியர், ஏதோ நாங்கள் ஒரு கிரிமினல் நடவடிக் கையில் ஈடுபட்டுவிட்டதைப்போல், 'அதெல்லாம் யாரைப் பார்க்கவும் காரை உள்ளே விட முடியாது’ என்று கத்தினார். 'காருக்கு உள்ளே அனுமதி இல்லை என்று சாதாரணமாகச் சொல்லி இருக்கலாமே?’ என்று நினைத்துக்கொண்டேன். சாரதி கொஞ்சம் பயந்த சுபாவம் என்பதால், காரைப் பின்னால் எடுத்துவிட்டார். இதெல்லாம் நம் ஆபீஸில் சகஜம்தானே என்று நினைத்துக்கொண்டு, காரைவிட்டு இறங்கினேன். ராமச்சந்திரனைப் பார்ப்பதற்கு முன்னால், பென்ஷன் பேப்பரில் கையெழுத்தைப் போட்டுவிட்டுப் போகலாம் என்று இடது பக்கம் சென்றேன். (வலது பக்கம் ராமச்சந்திரன்) உடனே, வாயிற்காப்போனாக நின்றுகொண்டு இருந்த அரசு ஊழியர், என்னை நோக்கி வந்து ஆள்காட்டி விரலை என் கண் களைக் குத்திவிடுவதைப்போல் நீட்டி, 'நீ ராமச்சந்திரனோடு சுத்திக்கிட்டு இருந்த வன்தானே? ஏன் இப்போ .......யைப்  (அதிகாரியின் பதவி) பார்க்கப்  போறேன்னு பொய் சொன்னே?’ என்று கேட்டார்.

இந்த இடத்தில் இன்னொரு ராமச்சந்தி ரனைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். என் ஆபீஸில் டெஸ்பேட்ச்சாக வேலை பார்த்தவர். அவர் பெய ரும் ராமச்சந்திரன்தான்.  இன்னமும் டெஸ்பேட்ச்சாகவே இருக்கிறார். அவரோடு எனக்குத் தொடர்புவிட்டுப்போய் பல ஆண்டுகள் ஆகின்றன. இப் போது என் முகத்துக்கு எதிரே விரலை நீட்டி, என்னை ஒருமையில் திட்டிக்கொண்டு இருப்பவரின் பிரச்னை கார் அல்ல என்று தெரிந்துபோனது. 'ராமச்சந்திரன் என்ற டெஸ்பேட்ச் கிளார்க்கோடு சுற்றிக்கொண்டு இருந்த ஒரு சராசரியாகிய நீ எப்படி அதிகாரியைப் பார்க்கப் போவதாகச் சொல்லலாம்?’ ஏதோ

மனம் கொத்திப் பறவை - 24

அவரைத் தனிப்பட்ட முறையில் நான் ஏமாற்றிவிட்டதுபோல் கூச்சல் போட்டார். பிறகு, நான் அவரிடம், 'மேலே இருந்து அதிகாரி ராமச்சந்திரனை இங்கே வரவழைக்கட்டுமா?’ என்று கோபத்துடன் கேட் டேன். 'கூப்பிடு; உடனே கூப்பிடு’ என்று இன்னும் பெரிதாகக் கத்த ஆரம்பித்தார். அவர் குரலில் ஏகப் பட்ட சந்தோஷம் தெரிந்தது. குத்துச் சண்டையின் போது எதிராளியைப் பார்த்து கன்னாபின்னாவென்று கத்தி 'வா, வா’ என்று கூப்பிடுவார்களே... அந்தக் குதூகலத்தையும் களிப்பையும் அவரிடம் கண்டேன். உடனே, அந்த இடத்தைவிட்டு அகன்றேன். பென் ஷன் பேப்பரில் கையெழுத்துப் போட்டுவிட்டு, வலது பக்கம் செல்லாமல் வந்துவிட்டேன்.  

அந்த ஊழியர் தன் சகாவிடம் என்னை நோக் கிக் கை காண்பித்து ஏதோ சொல்லிக்கொண்டு இருந் தார். அது என்னவாக இருக்கும் என்று எனக்குப் புரிந்தது. (பென்ஷன் பேப்பர்ல கையெழுத்துப் போட வந்தவன் மூடிக்கிட்டுப் போய்ப் போட வேண்டியதுதானே? ஆபீஸரைப் பார்க்கப் போறேங் கிறான். திமிருதானே? இப்போ பாரு, பதுங்கிக்கினு போறான்).

எனக்கு நகுலனின் கவிதை ஞாபகம் வந்தது.

'ராமச்சந்திரனா என்று கேட்டேன்
ராமச்சந்திரன்தான் என்றார்
எந்த ராமச்சந்திரன் என்று நானும் கேட்கவில்லை
அவரும் சொல்லவில்லை!’

மனம் கொத்திப் பறவை - 24

நான் சில பெண்களை அழகி என்று சொல்லும்போது எல்லாம் ஏதோ ஜொள்ளுவிடுகிறேன் என்கிறார்கள் நண்பர்கள். அப்படி இல்லை. புற அழகு என்பது வெறும் மேற்பூச்சினாலோ பிறப்பினாலோ வருவது அல்ல; அது நம் உள்ளே இருந்து வருவது. சந்தேகம் இருந்தால், காந்தியின் இள வயதுத் தோற் றத்தையும் முதிய தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். வயது ஆக ஆக, அவருக்கு அழகுகூடியது. மனம்தான் முக்கியம்.  

ன்று காலையில் கடற்கரையில் நடந்துகொண்டு இருந்தபோது ஒரு காட்சியைக் கண் டேன். அங்கே ஒரு சுவர் உள்ளது. சுவரின் அகலம் முக்கால் அடி. உயரம், ஒரு பக்கம் ஒரு அடி. இன்னொரு பக்கம், மணல். அதனால் அந்த சுவரில் இருந்து விழுந்தால் சுளுக்குக்கூடப் பிடிக்காது.  அந்த சுவரின் மேல் ஓர் இளைஞன் ஒற்றைக் காலை மடக்கியபடி இன்னொரு காலால் ஸ்கிப்பிங் ஆடிக்கொண்டு இருந்தான். நீண்ட நேரம் ஆடினான். பிசகவே இல்லை.  அந்தப் பக்கமோ இந்தப் பக்கமோ சாய்ந்து விழவில்லை.  இப்போது இதே சுவரை வேறுவிதமாகக் கற்பனை செய்து பாருங்கள். சுவரின் இரண்டு பக்கமும் அதல பாதாளம்.  இப்போது அந்த சுவரில் நின்று இளைஞன் ஸ்கிப்பிங்கூட ஆட வேண்டாம்; நடக்கவாவது முடியுமா? ஒரே நீள அகலம்கொண்ட அதே சுவர்தான். ஒரே வித்தியாசம், கடற்கரைச் சுவரில் பயம் இல்லை; இன்னோர் இடத்தில் பயம்.  

ஒரு ஜென் குரு இருந்தார். அவரிடம் வந்த ஒரு வில் வீரன், 'என்னைப்போல் நீங்கள் குறி பார்க்க முடியுமா?’ என்று கேட்டு எவ்வளவோ உயரத்தில் இருந்த மர இலைகளையும் பழங்களையும் குறி பார்த்து அடித்தான். அவ்வளவு திறமை சாதாரணமானது அல்ல. ஜென் குரு பதில் ஒன்றும் சொல்லாமல், அவனைத் தன் பின்னால் வருமாறு சைகை செய்தார். நீண்ட தூரம் நடந்து ஒரு மலை உச்சியை அடைந்தார்கள். அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் நிற்கச் சொல்லிவிட்டு, அந்த முகட்டின் மேல் ஏறி நின்றார்.  நாலா பக்கமும் அதலபாதாளம். ஒரே ஓர் ஆள் நிற்பதற்குத்தான் அங்கே இடம் இருந்தது. தோளில் மாட்டிஇருந்த வில்லை எடுத்து, தூரத்தில் தெரிந்த ஒரு மரத்தின் பழத்தைக் குறி பார்த்து அம்பைவிட்டார். குறி தவறவில்லை. இறங்கி வந்த குருவின் காலில் விழுந்தான் வில் வீரன்.

இந்த ஒருமுகப்பட்ட கவனக் குவிப்புக்குத் தியானம் உதவி செய்கிறது. நம் அன்றாட வாழ்வின் எல்லா காரியங்களையும் நாம் தியானமாக மாற்ற முடியும், வெங்காயம் நறுக்குவதைக்கூட. 'கராத்தே கிட்’ என்ற படத்தில் வரும் ஒரு காட்சி. சிறுவன் பள்ளிக்கூடம் சென்று வந்து தன் சட்டையை ஹேங்கரில் மாட்டாமல் கண்ட இடத்திலும் தூக்கிப் போடுகிறான். அவன் ஜாக்கிசானிடம் கராத்தே பயிற்சிக்கு வரும்போது, ஒரு மரக் கட்டையில் ஏழெட்டு குச்சிகளைச் செருகி, அதில் அவன் தன் சட்டையை மாட்டி மாட்டி எடுக்கச் சொல்லுவார். மணிக் கணக்கில் அவன் இதைச் செய்ய வேண்டும். கவனம் குவிந்தால், ஹேங்கரில் சட்டை மாட்டுவதுகூட கராத்தேயின் முதல் பயிற்சிதான்.

The Pleasure Seekers என்பது டிஷானி தோஷியின் நாவல். சல்மான் ருஷ்டியே பாராட்டி இருக்கிறார். டிஷானி ஒரு டான்ஸ ரும்கூட. உலகப் புகழ் பெற்ற சந்திரலேகாவிடம் பயின்றவர். 'சந்திரலேகாவின் பாதிப்பு உங்களிடம் உண்டா?’ என்று டிஷானியிடம் கேட்டேன் (ஹே திருவிழா!). 'சந்திரலேகா தேகத்தையும் காமத்தையும் கொண்டாடியவர். அதேதான் என் எழுத்தும்’ என்றார் டிஷானி. அவருடைய பெற்றோர் தங்களுக்குள் எழுதிக்கொண்ட காதல் கடிதங்களை ஒருமுறை படிக்க நேர்ந்ததாகவும், அதைவைத்தே தன் நாவலை எழுதி இருப்பதாகவும் சொன்ன டிஷானி, சென்னையில் வசிக்கும் ஒரு பேரழகி!

- பறக்கும்...