
நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 08
பகைவனுக் கருள்வாய்!
##~## |
1972.
ஆகஸ்ட்டு 15.
கண்ணதாசனிடமிருந்து ஒரு கால்!
'வாலி! கவிதா ஹோட்டலுக்கு நைட் எட்டு மணிக்கு வாங்க; சுதந்திரத்தின் வெள்ளி விழாவை - நள்ளிரவில் ஜெய்ஹிந்த் சொல்லிக் கொண்டாடுறோம்!’
கண்ணதாசன்!
பேரறிவும், பிள்ளை மனமும் ஒரு சேரப் பிசைந்துவைத்த ஒரு கலவை!
மாலை நேர
மேடைகளில் -

எளியேனும் கண்ணதாசனும்
எலியும் பூனையுமாய்; கோப்பையை -
ஏந்தும் இரவுப் பொழுதுகளில்
எதுகையும் மோனையுமாய்!
காங்கிரஸ் மேடைகளில் கண்ணதாசன் என்னைக் காய்ச்சுவார்.
'எவண்டா எழுதியது - காது கொடுத்துக் கேட்டால் குவா குவா சத்தம் என்று? பிள்ளைத்தாய்ச்சி வயத்துல காதெ வெச்சுப் பாருங்க - 'அப்படிக் கேக்குதான்னு!’
எம்.ஜி.ஆர். மேடைகளில் கண்ணதாசனை எளியேன் ஒரு பிடி பிடிப்பேன்.
'காதலிக்கவே நேரமில்லாதவனுக்குத் தன்னைக் காதலிப்பார் யாருமில்லைன்னு - எப்படிய்யா தெரியும்?’
இப்படி இருவரும் பொருதுவோம்; இரவில் - சித்ராலயா அலுவலகத்திலோ, எம்.எஸ்.வி. வீட்டிலோ - ஒன்றாக OLD SMUGGLER பருகுவோம்!
காரை நானே ஓட்டிக்கொண்டு கவிதா ஹோட்டலுக்குப் போய்ச் சேர்ந்தேன் இரவு எட்டு மணிக்கு.
அன்பில் தர்மலிங்கம்; சித்ரா கிருஷ்ணசாமி; சிவாஜி ஃபிலிம்ஸ் ஸ்ரீனிவாசன்; எம்.எஸ்.விசுவநாத அண்ணன்; வானதி திருநாவுக்கரசு என -
கலக்கலாக ஒரு சபை ஏற்கெனவே களை கட்டியிருந்தது. அருமை நண்பர் வானதி திருநாவுக்கரசு மட்டும் - TEETOTALLER!
கையில் கிண்ணத்தை வைத்துக்கொண்டு கண்ணதாசன் இந்திய ஒருமைப்பாட்டைப் பற்றிக் கவிதைகள் பாடினார். சபை, சிரக்கம்பம் செய்தது.
என் பங்குக்கு நானும் ஓரிரு பாடல்களை இசைத்தேன்.

நள்ளிரவு வந்தது. கடிகார முட்கள் இரண்டு ஒன்றானது. அனைவரும் - நிதானத்தில் இல்லாமலேயே 'ஜெய்ஹிந்த்’ என்று கூவி -
சுதந்திர வெள்ளி விழாவிற்கு ஸ்வாகதம் சொன்னோம்!
பாம்பு ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு - வட இந்திய நடனம் ஒன்றை ஆடலானாள் ஓர் இளம் பெண்!
இதற்கு முந்தைய வாரம்தான் - அந்த ஹோட்டலில் ஒரு ரெய்டு நடந்தது.
கன்னடத்தில் பெரிதாகவும், தமிழில் சற்றுக் குறைவாகவும் பிராபல்யம் பெற்றிருந்த ஓர் இசையமைப்பாளர், காவல் துறையின் வசமாகி - அது பேப்பரில் வந்திருந்தது! அதுஎன் கவனத்திற்கு அப்போது வரவில்லை; எல்லோரும் ஆட்டம் பாட்டம் முடிந்து, அவரவர் காரில் புறப்பட்ட பின்பு -
நான் ஒரு பெண்ணுடன் ஓர் அறைக்குள் ஒதுங்கினேன்!
கதவைச் சாத்தி நான் உள்ளே தாளிடத் தொடங்குகையில், ஹோட்டல் சிப்பந்தி ஒருவர் கண்ணதாசனிடம் பேசினார் கீழ்க்கண்டவாறு; அது என் காதில் விழுந்தது!
'அண்ணே! வாலி நல்ல ஆளா இருந்தாக்கூட - தொழில்ல உங்களுக்கு எதிர்க்கடை விரிச்சவரு! இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி - இத்தனாம் நெம்பர் ரூமை ரெய்டு பண்ணுங்கன்னு - வெளியில இருந்து போலீசுக்கு ஒரு இன்ஃபார்மர் மாதிரி போன் போடுறேண்ணே! வாலி மாட்டுவாரு; பேப்பர்ல வரும்; அது எம்.ஜி.ஆரையும் தர்மசங்கடத்துல வைக்கும்!’
சிப்பந்தி இப்படிச் சொன்னவுடன், அந்த ஆளின் கன்னத்தில் பளீரென்று ஓர் அறை விட்டார் கண்ணதாசன்!
'நான் கூப்டு வந்திருக்கிறான் அவன்; என்னை நம்பி வந்தவனை, போலீசுல புடிச்சுக் கொடுக்கச் சொல்றியா? என்னை அவ்வளவு கேவலமானவன்னா நெனச்சே? அந்த ஆளு எப்ப ரூமெ விட்டு வெளிய வர்றான்னோ - அப்ப ஒழுங்கா கார்ல ஏத்தி அனுப்பு!’
கண்ணதாசன் கிடுகிடுவென்று மாடியிறங்கிப் போன பின் -
சில நொடிகளிலேயே நான் அறைக் கதவைத் திறந்து வெளியே வந்தேன்.
தலைக்கேறிய போதை தரையிறங்கவும் - நான் காரேறி வீடு வந்து சேர்ந்தேன், என் கண்கள் பனிக்க!
கண்ணதாசன் விரும்பியிருந்தால், என்னை அசிங்கப்படுத்தி ஆனந்தப்பட்டிருக்கலாம்; அன்னணம் செய்யவில்லை! ஏன்?
அரி, ஒரு நாளும் நரியாகாது; நெறி ஒரு நாளும் வெறியாகாது!

இதுபோல் இன்னொரு சந்தர்ப்பம். என் வீட்டுக்குப் பக்கம் ஒரு படக் கம்பெனி. அங்கு பாட்டெழுதிவிட்டு, என் வீட்டுக்குக் கண்ணதாசன் வர,
என் மனைவி காஃபி போட்டுக் கொடுத்தாள். நானும் கவிஞரும் பேசிக்கொண்டிருக்கையில் -
திருச்சி பொன்மலையைச் சேர்ந்த என் பழைய நண்பன் ஒருவன், அவன் வீட்டுத் திருமணப் பத்திரிகை கொடுக்க வந்தான்.
கண்ணதாசனைப் பார்த்ததும் அவன் சற்று அதிர்ச்சியுற்றான்; அந்த நேரத்தில் அவனைப் பார்த்து நானும் சற்று அதிர்ச்சியுற்றேன்.
கண்ணதாசனோ, 'என்ன தம்பீ! எப்படிஇருக்கே? வீட்டுல கல்யாணமா? எனக்கொரு பத்திரிகை கொடு; வாழ்த்து அனுப்புறேன்!’ என்று அவனைப் பார்த்துப் புன்னகைத்தவாறு கூறினார்!
'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்’ என்பது குறள்; கண்ணதாசன் அதன் பொருள்!
கல்யாணப் பத்திரிகையோடு என் வீட்டுக்கு வந்தவர் பெயர் இருதயராஜ்.
அண்ணாவைப் பிரிந்து திரு.ஈ.வி.கே. சம்பத்தோடு கண்ணதாசன் வந்த பிறகு -
திருச்சி டவுன் ஹாலில் பெரும் கூட்டம் ஒன்று நடந்தது.
அதில்தான் அறிஞர் அண்ணா அவர்களைத் 'திரு.அண்ணாதுரை அவர்களே’ என்று கண்ணதாசன் விளித்துப் பேச -
முன் வரிசையில் இருந்த ஒருவன், மேடைக்குத் தாவி, கண்ணதாசனின் சில்க்குச் சட்டையைப் பற்றி இழுத்து, மூர்க்கத்தனமாகத் தாக்க முயல -
கண்ணதாசன் அவனைத் தன் கையால் தடுத்துப் புறந்தள்ளினார்.
கூட்டத்தில் பயங்கரக் கலவரம் வெடித்தது!
அந்தக் கூட்டத்தில் தன்னைத் தாக்க வந்த அந்த ஆளைத்தான் என் வீட்டில் சந்தித்த கண்ணதாசன் நலம் விசாரித்தார்!
கண்ணதாசன் கண்ணதாசன்தான்!
- சுழலும்...
ஒவியம் : மணி, படம்: கே.ராஜசேகரன்