
அத்தை
பண்டம் சுடுகிற வாசனையுள்ள வீடு எவ்வளவு அருமையானது! அதுவும் சொந்த வீட்டு அடுக்களையில், மண் அடுப்பில், விறகு எரித்துச் சுடுகிற நேரத்தின் நெருப்பும், அடுப்பின் உட்பக்கத்துத் தணலும், தணலின் சிவப்பில் ஜொலிக்கிற அம்மா அல்லது ஆச்சி அல்லது அத்தைகளின் முகமும் எவ்வளவு ஜீவன் நிரம்பியது!வண்ணதாசன் ('வண்ணதாசன் கடிதங்கள்’ தொகுப்பில் இருந்து)
தீபாவளி முடிந்து விரதம் இருந்து நோன்பு எடுத்து, ஆயா அதிரசம் சுடத் தொடங்கும். நான் அடுப்பின் பக்கத்திலேயே அமர்ந்துகொள்வேன். வெல்லத் துண்டுகள் பாகாக மாறுவதை; பாகில் பச்சரிசி மாவும் ஏலக்காயும் சேர்ந்து வட்ட வடிவம் பெறுவதை; வாழை இலையில் இருந்து விடுபட்டு, அந்தச் சிறு வட்டம் எண்ணெயில் மிதந்து சிவந்து அதிரசமாக வெளிவரும் அதிசயத்தை; ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டு இருப்பேன்.
படைப்பதற்கு முன்பு எடுத்துச் சாப்பிட்டால், சாமி கண்ணைக் குத்திவிடும் என்பது தெரிந்திருந்தும் நான் ஆயாவுக்குத் தெரியாமல் முதல் அதிரசத்தைத் தின்றிருப்பேன். காலம் காலமாக ஆயாக்கள் இப்படித்தான் வடை சுடுகிறபோது நரிகளிடமும்; தின்பண்டங்கள் சுடுகிறபோது பேரன்களிடமும் பறிகொடுத்துவிடுகிறார்கள். பின்பும் நாலைந்து அதிரசங்களைத் திருடி, இரவு உறங்குகையில் கனவில் கண்ணைக் குத்த வரும் சாமியிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, விளையாடக் காத்திருக்கும் கூட்டாளிகளைத் தேடி ஓடுவேன்.

திரும்பி வருகையில், ஆயா அத்தனையும் சுட்டு முடித்திருக்கும். பரணில் இருந்து சிறிய பித்தளை அண்டாக்கள் இறக்கிவைக்கப்பட்டு, அதில் அதிரசங்களை எண்ணிவைக்கும் பணி தொடங்கும். ஒவ்வொரு அண்டாவிலும் 101 அதிரசங்களை எண்ணிவைக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்படும். ஒவ்வொன்றாக எண்ணிக்கொண்டு இருக்கும்போதே விடுமுறை முடிந்து திறக்க இருக்கும் பள்ளிக்கூடமும் செய்யாத வீட்டுப் பாடமும் எதிரில் நின்று பயமுறுத்தும். அதிரசங்களை எண்ணுவதைப்போலவே அல்ஜீப்ரா கணக்கும் சுலபமாகவும், தித்திப்பாகவும் இருக்கக் கூடாதா என்று நினைத்துக்கொள்வேன்.
எல்லா அண்டாவிலும் மஞ்சள் துணி போட்டு மூடி, சாமிக்குப் படைத்து ஆயா, அப்பா முன்பு நிற்கும். அப்பா, அத்தைகளுக்கு தீபாவளி சீர் காசு தனித்தனியாக எண்ணி ஆயாவிடம் கொடுப்பார். அப்பாவுடன் பிறந்தவர்கள் இரண்டு அக்கா, இரண்டு தங்கை என நான்கு பேர். நான்கு அத்தைகளின் வீடுகளுக்கும் அண்டா நிறைய அதிரசத்துடன் சீர் காசும் எடுத்துக்கொண்டு ஆயாவுடன் நானும் கிளம்புவேன்.
முதலில் பெரிய அத்தை வீடு. பெரிய அத்தை அப்போது திருத்தணியில் வசித்தது. குடும்பத்தின் முதல் பெண். ஆயாவுக்கும் அத்தைக்கும் 15 வயதுதான் வித்தியாசம். ஆகவே, இருவரும் பார்ப்பதற்கு அக்கா - தங்கைபோலவே இருப்பார்கள். அந்தக் காலத்தில் பி.யூ.சி. முடித்து சமூக நலத் துறையில் கிராம சேவகியாக வேலை செய்தது. கிராமம் கிராமமாகச் சுற்றி வரும் பணி.
குடும்பத்தின் முதல் புரட்சிப் பெண் என்கிற பட்டத்தை வாங்குவதற்காக, தபால் துறையில் வேலை செய்த மாமாவை அத்தை காதலித்துத் திருமணம் செய்தது. சாதிவிட்டு சாதி தாவி நடக்கும் காதல் திருமணங்கள் 1960-களில் கொலைக் குற்றத்தைவிடக் கடுமையானதாகக் கருதப்பட்டது. ஆதலால், அத்தை வாங்கிய புரட்சிப் பெண் பட்டம் எங்கள் பங்காளிகளுக்குப் பிடிக்காமல், அதற்கடுத்து ஒரு 20 ஆண்டுகள் எந்த விசேஷத்துக்கும் அழைக்காமல் எங்கள் குடும்பத்தையே தள்ளிவைத்து இருந்தார்கள். ஏதோ ஒரு பங்காளியின் மரண வீட்டில் மீண்டும் எல்லோரும் இணைந்தார்கள். எல்லோரையும் இணைக்கும் ஒரே புள்ளி... காதலுக்கு அடுத்து, மரணமாகத்தானே இருக்க முடியும்?
பெரிய அத்தை, பத்திரிகைகளில் வரும் தொடர்கதைகளைக் கத்தரித்து, பைண்டிங் செய்து, திரும்பத் திரும்ப எடுத்துப் படிக்கும். வளையம் வளையமாகவும், கலர் கலராகவும் விற்கும் வயர்களை வாங்கி வந்து, திண்ணையில் அமர்ந்து கைப்பிடி வைத்து கூடைப் பைகள் பின்னும். தான் வேலை பார்க்கும் அத்தனை கிராமங்களுக்கும் என்னை யும் உடன் அழைத்துச் சென்று, மதிய வேளைகளில்... கூரை வேய்ந்து, புகை அடர்ந்த உணவகங்களில் பிரியாணி வாங்கிக் கொடுக்கும். கமல், ரஜினி நடித்து வெளியாகும் திரைப்படங்களுக்கு முதல் நாளே கூட்டிச் சென்று பாடல் காட்சிகளில் கதாநாயகி எத்தனை உடை அணிந்திருந்தாள் என்று எண்ணி 'பதினேழு டிரெஸ் மாத்தியிருக்கா’ என்று அதிசயிக்கும்.
பெரிய அத்தைதான் தனக்குப் பின் இருந்த தங்கைகளையும் தம்பியையும் படிக்கவைத்துத் திருமணங்கள் செய்துவைத்தது. காதலைக் கொடுத்த திருமணம், அத்தைக்கு குழந்தையைக் கொடுக்கவில்லை. நான் பிறந்தபோது என்னைத் தத்து எடுத்துக்கொள்ளப்போவதாக அம்மாவிடம் அத்தை கேட்டதாம். 'தலைச்சம் பிள்ளையை யாராவது தத்துக் கொடுப்பாங்களா’ என அம்மா மறுத்துவிட்டதாம். அம்மா இறந்து 15 வருடங்கள் கழித்து, முக்கிய சேவகியாகப் பணியாற்றி, பணி ஓய்வின்போது அப்பாவின் அனுமதியுடன் அத்தை என்னை ஸ்வீகாரப் பிள்ளையாகத் தத்து எடுத்துக்கொண்டது. பக்கத்துத் தோட்டத்துக்கும் சேர்த்துப் பூக்கும் ரோஜாவாக நான் மாறினாலும், வேரையும் வேரடி மண்ணையும் யார் மாற்ற முடியும்?

ஆக மொத்தம், பெரிய அத்தை அன்பின் மறு உருவம். நெல் வயலில் ரோஜாகூட களைதான் என்று எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் ஒரு சிறுகதையில் எழுதியதுபோல அதிகப்படியான அன்பும் சுமைதான் என்பதை அடிக்கடி நான் உணர்ந்தும் குடை பிடித்தபடி அதன் அன்பு மழையில் நனைந்துகொண்டு இருப்பேன்.
அடுத்து, இரண்டாவது அத்தையின் வீடு. காஞ்சிபுரத்தில் கலெக்டர் ஆபீஸ் பக்கத்தில் வீடு ஆகையால், எங்களுக்கு கலெக்டர் ஆபீஸ் அத்தை. இந்த அத்தை எப்போதும் எங்களைவிட்டுக் கொஞ்சம் தள்ளியே இருக்கும். உயர்நிலைப் பள்ளி ஒன்றில் டீச்சர் வேலை செய்து வந்தது. அப்பா எஸ்.எஸ்.எல்.சி. ஃபெயிலாகி, விட்டேத்தியாக சுற்றிக்கொண்டு இருந்தபோது அவரை அழைத்து, தான் வேலை பார்த்த பள்ளியில் சேர்த்து, தன் நேரடிக் கண்காணிப்பில்வைத்துத் தேர்ச்சியடையச் செய்து, ஆசிரியர் பயிற்சி வகுப்புக்கு அனுப்பித் திசை மாற்றிவிட்டது இந்த அத்தைதான்.
இப்போதும் என்னைப் பார்க்கும்போது எல்லாம், 'விட்டிருந்தா, உங்க அப்பன் கள்ளச் சாராயம் காய்ச்சுறவங்ககூட சுத்திட்டு இருந்திருப்பான். நான்தான் படிக்கவெச்சு, வேலை வாங்கிக் கொடுத்தேன்’ என்று பெருமையாகச் சொல்லும். 'சின்னக்கா... சின்னக்கா’ என்று அப்பா இந்த அத்தை மேல் உயிரை வைத்திருந்தார். எப்போது தீபாவளி சீர் எடுத்துச் சென்றாலும், 'இதை யாரு இங்க சாப்பிடுவா? இருக்கறதையே சாப்பிட முடியல’ என்று அங்கலாய்க்கும். ஆனால், எங்கள் முன்பாகவே அவற்றைப் பாகம் பிரித்து... பக்கத்து, எதிர் வீடுகளுக்கு 'அம்மா வீட்ல இருந்து வந்துச்சி’ என்று கொடுத்துவிட்டு வரும். பெருமைக்குப் பின்பு இருந்தும் அன்பு பீறிடத்தானே செய்கிறது.
சமீபத்தில் இந்த அத்தையின் பேரக் குழந்தையின் காது குத்து நிகழ்ச்சிக்குச் சென்று இருந்தேன். அப்பா இறந்த பிறகு, நான் கலந்துகொண்ட முதல் குடும்ப நிகழ்ச்சி. 'என் தம்பிக்குப் பதிலா, தம்பி பையன்தான் தாய் மாமனா இதைக் குடுப்பான்’ என்று சீர் வரிசைத் தட்டை என் கையில் கொடுத்து, சம்பந்தியிடம் கொடுக்கச் சொன்னது. ஒரு கணம் நான் அப்பாவாக மாறி, மீண்டும் நானானேன்.
மூன்றாவது அத்தை, அப்போது தாம்பரத்தில் வசித்தது. இந்த அத்தை மாமா அப்போது தாம்பரத்துக்குப் பக்கத்தில் கார் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்தார். பல வருட வேலை நிறுத்தத்துக்குப் பின் தொழிற்சாலை மூடப்பட்டு, பின்பு எங்களுடன் வந்து அத்தையின் குடும்பம் வசிக்க ஆரம்பித்தது. வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் வைராக்கியத்தை இப்போதும் இந்த அத்தை முகத்தில் பார்க்கலாம். ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும்போதும், 'சம்பாதிக்கும்போதே ஏதாவது இடம் வாங்கிப் போடு. என்னை மாதிரி விட்டுடாதே...’ என்று அறிவுரை சொல்லும். இப்போதும் நான் வாடகை வீட்டில் வசிப்பது குறித்து, எல்லா சொந்தங்களைப்போலவே இந்த அத்தைக்கும் பெரும் வருத்தம். பூமியே ஒரு வாடகை வீடு தான் என்பது கவிஞனின் பெருமிதம்.
நான்காவது அத்தையின் வீடு, வந்தவாசியில் இருக்கிறது. நான் பிறந்தபோது, இந்த அத்தைக்குத் திருமணம் ஆகவில்லை. ஆகையால், என் பால்ய காலம் இந்த அத்தை யின் விரல் பிடித்து வளர்ந்தது. அத்தைகளால் வளர்க்கப்படும் குழந்தைகள், தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
இப்போது நினைத்தாலும், தாவணி அணிந்த ஒல்லியான அந்தப் பழைய அத்தையின் முகம்தான் எனக்கு ஞாபகம் வரும். தன் தோழிகளுடன் கோயிலுக்குப் போகையில், டென்ட்டுக்குப் படம் பார்க்கப் போகையில், துணைக்கு என்னையும் கூட்டிச் செல்லும். ஜாண் பிள்ளை என்றாலும், ஆண் பிள்ளை அல்லவா. பிள்ளைப் பருவத்தில் நான் செய்த குறும்புகளை இந்த அத்தை ஒவ்வொன்றாக சொல்லச் சொல்ல... நாளெல்லாம் கேட்டுக்கொண்டே இருப்பேன்.
ஒரு முறை இந்த அத்தைக்குக் கல்யாணமான புதிதில், மாமாவுடன் சினிமாவுக்குப் போகையில் என்னையும் கூட்டிச் சென்றதாம். படம் முடிந்து முனியாண்டி விலாஸில் எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கையில், அந்த மாமா 'இன்னும் ஒரு பிளேட் குஸ்கா குடுங்க’ என்று சர்வரிடம் சொன்னாராம். நானும் சர்வரை அழைத்து, 'எனக்கும் ஒரு பிளேட் குடுங்க’ என்று கேட்க, அவர் 'என்ன வேணும்?’ என்று கேட்டாராம். 'அதுதான் இந்த மாமா சொன்னாரே ஏதோ கா... அந்த கா குடுங்க’ என்றேனாம். ஹோட்டலே சிரித்ததாம். இன்றும் எந்த ஹோட்டலில் குஸ்கா ஆர்டர்

செய்யும்போதும், இந்தச் சம்பவம் எனக்கு ஞாபகம் வரும். கூடவே, அன்று செல்லமாக என் தலையில் மாமா குட்டிய மோதிரக் குட்டும்.
எல்லா அத்தை வீடுகளுக்கும் சென்றுவிட்டு, ஆயாவும் நானும் அகாலத்தில் வீடு திரும்புவோம். பண்டிகை முடிந்து வீடு மீண்டும் தனிமையைச் சூடிக்கொள்ளும்.
இங்கே இப்போது நான் வசிக்கும் சாலிகிராமம் பெட்டிக் கடையில், பாக்கெட்டுகளில் அடைத்து அதிரசம் விற்கிறார்கள். எப்போதாவது வாங்கி அதைப் பிரிக்கையில், அதன் ஒவ்வொரு துண்டில் இருந்தும் வெளியே குதிக்கிறார்கள், ஒரு குட்டிப் பையனும் அவனது ஆயாவும், நான்கு அத்தைகளும்!
- அணிலாடும்...
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!
Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan