மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூங்கில் மூச்சு! - 13

Moongil Moochu series by Suga
பிரீமியம் ஸ்டோரி
News
Moongil Moochu series by Suga ( மூங்கில் மூச்சு - சுகா )

சுகாபடங்கள் : எல்.ராஜேந்திரன்

##~##
கோ
மு அண்ணன் பார்ப்பதற்கு போன்சாய் செடி மாதிரி குட்டையாகத்தான் இருப்பான். மஞ்சள் தேய்த்துக் குளிக்கிறானோ என்று சந்தேகப்படவைக்கிற பொன் மஞ்சள் நிறம். அவன் சட்டையைக் கழற்றும்போது எல்லாம், வைத்த கண் வாங்காமல் அவனது உடம்பையே பார்த்துக்கொண்டு இருப்போம். நாள் தவறாமல் கடுமையான உடற்பயிற்சி செய்து, உடம்பைக் கட்டுக்கோப்பாகவைத்திருந்த அம்மன் சந்நிதி ஆணழகன் அவன். 'எண்ணே, ஒன் கையத் தொட்டுப் பாக்கட்டுமா?’ என்று ஆசையுடன் கேட்போம். 'தொட்டு என்னடே தொட்டு... தொங்கியே பாருங்க!’ அன்றைய தேதியில் அவனைவிடவும் நாங்கள் குட்டையாக இருந்ததால், எங்களால் அவனது கைகளில் ஊஞ்சல் ஆட முடிந்தது.
மூங்கில் மூச்சு! - 13

அவ்வளவு கட்டுமஸ்தான உடம்பு வைத்துஇருக்கும் கோமு அண்ணனின் கால்கள் இரண்டும் பலவீனமாகச் சூம்பிப் போய் இருக் கும். 'பார், வெளையாண்டா இப்படித்தான் கால் வீக்கா ஆயிருமாம்லெ!’- குஞ்சு சொல்வான். எங்களுக்கும் கோமு அண்ணன்போல பலசாலி ஆக வேண்டும் என்று ஆசை. திருநெல்வேலிப் பகுதிகளில் அப்போது உடற்பயிற்சி நிலையங்களை 'ஜிம்’ என்று சொல்வது இல்லை. மாறாக 'கிளப்’ என்றுதான் சொல்வார்கள். 'அட்லஸ் உடற்பயிற்சிக் கழகம்’ என்கிற 'அட்லஸ் கிளப்’-ல்நான், குஞ்சு, ராமசுப்ரமணியன் போன்ற நண்பர்கள் போய்ச் சேர்ந்தோம்.

மூங்கில் மூச்சு! - 13

'அட்லஸ் கிளப்’பின் பயிற்சியாளர் வைகுண்டம் அண்ணாச்சி ரொம்பப் பிரியமாக நடந்துகொண்டார். போன புதிதில் கண்ணில் பட்ட உடற்பயிற்சிக் கருவிகளை எல்லாம் தூக்க முடியாமல் தூக்கி, முக்கி முனகி ஏதேதோ செய்தோம். ஒவ்வொரு பயிற்சிக்கும் இடையே போதுமான இடைவெளி வேண்டும் என்பதை யும், உடற்பயிற்சி செய்யத் துவங்கும் முன் அதற்கு உடம்பைத் தயார் செய்யும் விதமாக  தளர்வாகச் சில நிமிடங்கள் இருக்க வேண்டும் என்றும் வைகுண்டம் அண்ணாச்சி சொல்லி இருந்தார். நானும் குஞ்சுவும் ஓரளவு வைகுண்டம் அண்ணாச்சி சொன்னதைக் கடைப்பிடித்தோம். ராமசுப்ரமணியன் மட்டும் முழு நேரமும் தளர்வாகவே இருந்து, எந்தவித உடற்பயிற்சியையும் மேற்கொள்ளவே இல்லை. ஆனால், சரியான நேரத்துக்கு 'கிளப்’புக்கு எங்களைக் கிளப்பிக்கொண்டு செல்வது என்னவோ அவன்தான்!

ஆணழகன் ஆகியே தீருவது என்று கர்லாக் கட்டைகளை நாங்கள் சுற்றிக்கொண்டு இருக்கும்போது, ராமசுப்ரமணியன் ஓரமாக உடம்பைத் தளர்வாக்குகிறேன் பேர்வழி என்று படுத்துக்கிடப்பான். கேட்டால், 'ஒடம்பு இன்னும் செட் ஆகல மக்கா’ என்பான். சில சமயங்களில் அவனிடம் இருந்து சன்னமாகக் குறட்டை ஒலி கேட்கும்.

கோமு அண்ணன் வந்துவிட்டால், நாங்களுமே உடம்பைத் தளர்வாக ஆக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக ஒதுங்கி நின்று, கோமு அண்ணன் செய்யும் உடற்பயிற்சி முறைகளை வேடிக்கை பார்ப்போம். சட்டையைக் கழற்றிவிட்டு 'திடும் திடும்’ என்று சில நொடிகள் குதித்துவிட்டு, வரிசையாக 25 முட்டைகளை உடைத்துக் குடிப்பான் கோமு அண்ணன். அதன் பிறகு, மிகக் கடுமையாகப் பயிற்சியில் ஈடுபடுவான் கோமு அண்ணன்.

மூங்கில் மூச்சு! - 13

ஒருநாள் குஞ்சு 10 முட்டைகளை வாங்கி வந்துவிட்டான். வாங்கி வந்த கையோடு, ஒரு முட்டையை உடைத்துக் குடித்தும்விட்டான். எனக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. துவக்கத்திலேயே தோற்றுப்போனேன். ராமசுப்ரமணியனின் லட்சணமும் இதுதான். வேறு வழி இல்லாமல், சிரமப்பட்டு குஞ்சு ஏழு முட்டை வரைக்கும் குடித்துவிட்டான். சிறிது நேரத்தில் முகம் அஷ்டகோணலாக, 'எல, இரிங்க. வீட்டுக்குப் போயிட்டு வந்திருதேன்’ என்று சொன்னவனை, அடுத்த இரண்டு நாட்களுக்கு எங்களால் பார்க்க முடியவில்லை. மூன்றாவது நாள், அவனைப் பார்க்க அவன் வீட்டுக்குப்போன போது, இடுப்பில் ஒரு பழைய அழுக்குத் துண்டைக் கட்டிக்கொண்டு குப்புறப் படுத்து இருந்தான். என்ன கேட்டாலும், ஈனஸ்வரத்தில் சிங்கள பாஷையில் ஏதோ செய்யுள் மாதிரி சொன்னான். 'என்னத்தலெ தின்னு தொலச்சான். கேட்டா சொல்ல மாட்டேங்கான். ராதாகிருஷ்ணன் டாக்டர் இன்னிக்குக் காலைல மூணாவது ஊசி போட்டிருக்காரு. இன்னும் நிப்பெனாங்கு!’- குஞ்சுவின் பெரியப்பா விவரம் சொன்னார்.

உடம்பு சரியாகி குஞ்சு மீண்டும் வரும் வரைக்கும் நானும் ராமசுப்ரமணியனும் 'கிளப்’புக்குப் போகாமல் உடம்பைத் தளர்வாகவே வைத்திருந்தோம். குஞ்சு வந்தவுடன் அவன் மண்டையில் தட்டினோம். 'கோட்டிக்காரப் பயலே, நாம்எல்லாம் சைவம்லாலே. அதான் ஒடம்புஒத்துக் கல... சைவத்துல ஏதாவது ட்ரை பண்ணுவோம்’. அந்தச் சமயத்தில் குஞ்சு அசைவம் பக்கம் போகவில்லை என்பதாலும், சுடச்சுடக் கிடைத்திருந்த முன்(பின்) அனுபவத்தாலும் நாங்கள் ஏசும்போது அமைதியாக இருந்தான். கோமு அண்ணனிடமே கேட்டோம். 'எண்ணே, சைவத்துல என்ன சாப்டுட்டு எக்ஸர்சைஸ் பண்ணுனா... உடம்புக்கு நல்லது?’

கோமு அண்ணனின் அறிவுரைப்படி கொண்டைக் கடலையை முதல் நாள் இரவு ஊறப்போட்டு, மறுநாள் சாப்பிட முடிவு செய்தோம். இதிலும் அளவு குறித்த குழப்பம் ஏற்பட்டது. ஒரு சட்டி நிறைய கொண்டைக் கடலையை ஊறப்போட்டு, மறுநாள் திணறத் திணறத் தின்றோம். இந்த முறை ராதாகிருஷ்ணன் டாக்டர் எங்கள் மூவருக்குமே உட்காரும் இடத்தில் ஊசி போட்டார்!

அப்போதுதான் அதிகம் பாதகம் இல்லாத ஒரு யோசனையை குஞ்சு சொன்னான். ஆனால், எனக்கும் ராமசுப்ரமணியனுக்கும் பயமாக இருந்தது. 'யாராவது பாத்துட்டாங்கன்னா?’ வழக்கம்போல தைரியமாக குஞ்சுவே களத்தில் இறங்கினான். 'ராத்திரி ஒம்போது மணிக்கு மேல நீங்க ரெண்டு பேரும் முருகன் தேர்ப் பக்கம் நில்லுங்க. நான் போயி வாங்கிட்டு வந்திருதேன்’. குஞ்சு திரும்பி வரும் வரை எங்கள் இருவருக்கும் உயிரே இல்லை. நடுக்கத்துடன் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு நின்றோம். வாங்கி வந்ததை சாரத்துக்குள் மறைத்தபடி குஞ்சு அவசர அவசரமாக வந்தான். 'எல, கௌம்புங்க. இங்கெ நிக்க வேண்டாம்’. குறுக்குத் துறை ரோட்டின் ஓரமாக இருட்டுக்குள் நின்றுகொண்டு 'மணி புரோட்டா ஸ்டாலில்’ குஞ்சு வாங்கி வந்த புரோட்டா சால்னா பொட்டலத்தைப் பிரித்து, அவசரஅவசர மாகத் தின்று முடித்தோம். 'நாளைக்குப் பாரேன். நம்ம ஒடம்புல நமக்கே சேஞ்ச் தெரியும்’-உறுதியான குரலில் சொன்னான் குஞ்சு.

புரோட்டாவுடன் ஊற்றிக் கொடுக்கப்படும் சால்னா அசைவம் என்று நாங்கள் உறுதியாக நம்பிய பருவம் அது. சால்னா வெறும் பொரிகடலை மாவு என்பது அப்போது புரியாமல், வீட்டுக்குத் தெரியா மல் அசைவம் சாப்பிட்ட குற்ற உணர்ச்சி யுடன், இனம்புரியாத கம்பீரமும் சேர்ந்து கொள்ள, கொஞ்ச நாட்களுக்கு நெஞ்சை நிமிர்த்தி வானம் பார்த்து நடந்து திரிந் தோம். 'எல, எங்க அக்கா என் ஒடம்புல ஏதோ மாத்தம் தெரியுதுங்கா. நாம மறச் சாலும் நம்ம ஒடம்பு காட்டிக் குடுத்துருது, பாத்தியா’-ராமசுப்ரமணியன் பெருமையாகச் சொன்னான். கடைசி வரைக்கும் எந்த விதமான உடற்பயிற்சியும் செய்யாமலேயே மனதுக்குள் 'ஆணழகன்’ ஆனவன் அவன்!

கால மாற்றத்தில் எல்லாமே கரைந்து போக, சென்னைக்கு வந்த பிறகு, விட்ட குறை தொட்ட குறையாகச் செய்துகொண்டு இருந்த யோகாசனத்தையும் தொடர முடியவில்லை. உடற்பயிற்சியில் அதிக ஈடுபாடு உள்ள நண்பர் சீமான் அடிக்கடி சொல்வார், 'ஐயா மகனே, பேசாம என் கூட மைதானத்துக்கு வாங்க. ஓடுவோம். நீங்க சாப்பிடுற இலை, தழைக்கு ஒரு வாரம் ஓடுனாப் போதும். ஒடம்பு இறகா ஆயிரும். காலைல எத்தன மணிக்கு வரணும். சொல்லுங்க. வந்து அழைச்சுட்டுப் போறேன்’. ஒய்.எம்.சி.ஏ மைதானத்துக்கு ஒரு முறைகூட அவருடன் சென்றதே இல்லை.

சில நாட்களுக்கு முன் ஒரு ஞாயிற்றுக் கிழமை, 'வாத்தியார்’ பாலுமகேந்திராவைப் பார்க்கச் சென்றபோது, 'டேய், என்னடா... குண்டடிச்சுட்டே? ஒழுங்கா வாக்கிங் போ’ என்று சத்தம் போட்டார். நாள் தவறாமல் அதிகாலையில், கொட்டும் மழையாக இருந்தாலும் வாக்கிங் செல்பவர் வாத்தியார். வாத்தியாரே சொல்லிவிட்டாரே என்று  மறு நாளில் இருந்தே வாக்கிங் செல்ல ஆரம்பித்தேன்.

ன்றொரு நாள் காலையில் வாக்கிங் கிளம்பும்போதே ஏழரை மணி ஆகிவிட்டது. அன்றைக்கு எனக்கு ஏழரை என்பது அப்போது தெரியவில்லை. சாலிகிராமத்தின் அருணாசலம் சாலையில் நடக்கத் தொடங்கினேன். சூர்யா ஆஸ்பத்திரியை நெருங்கும்போது திருநெல்வேலி ஹோட்டல் திறந்திருந்தது. அந்த நேரத்திலேயே 'ஜே ஜே’ என்று கூட்டம். தற்செயலாக வெளியே வந்த கடையின் உரிமையாளர் என்னைப் பார்த்துவிட்டார். 'எண்ணே வாங்க... என்ன ஒங்களை ஆளையே காணோம்?’ என்று உரிமையுடன் கேட்டார். வாக்கிங்கைத் தொடரலாமா, வேண்டாமா என்று தயங்கி நின்றேன். 'என்ன நின்னுக்கிட்டிருக்கிய? அட, உள்ள வாங்க’ என்று கல்யாண வீட்டுக்கு அழைப்பதுபோல அழைத்தார். கையில் பன்னீர் செம்பு மட்டும் தான் இல்லை. கிட்டத்தட்ட இழுத்துச் சென்று உட்காரவைத்து இலையைப் போட்டார். தண்ணீர் டம்ளரை வைத்துவிட்டு, 'எண்ணெய் தோச போட்டு இருக்கேன். அதுக்கு முன்னாடி இதச் சாப்பிடுங்க. சூடா மொறுமொறுன்னு இருக்கு’. இலையில் வைக்கப் பட்ட பருப்பு வடைகள் இரண்டுமே என்னைப் பிரிய முடன் பார்த்துச் சிரித்தன. எண்ணெய் தோசையைத் தின்று

மூங்கில் மூச்சு! - 13

முடிப்பதற்குள், 'அடுத்தால இன்னொரு எண்ணெய் சொல்லியிருக்கேன். நிதானமாச் சாப்பிடுங்க’ என்று சொல்லிவிட்டு, என் பதிலுக்குக் காத்திராமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார். அடுத்த எண்ணெய் தோசை வருவதற்கு முன், இரண்டு கல் தோசைகளை வைத்தார். 'ஐயையோ... வேண்டாம் தம்பி!’- பதறித் தடுக்க முயன்றேன். 'இப்பிடிக் கொஞ்சமா சாப்பிட்டீங்கன்னா ஒடம்பு என்னத்துக்கு ஆகும்?’-கட்டிய மனைவியைவிடப் பரிவுடன் சொன்னார்.  தட்ட முடியவில்லை. அடுத்தஎண்ணெய் தோசையையும் முடித்துவிட்டு, எச்சில் கையென்று கூடப் பார்க்காமல் இரண்டு கைகளையும் மேஜையில் ஊன்றி எழுந்து கை கழுவினேன்.

சென்னையில் நேர்மையான ஆட்டோக்காரர்கள் இல்லை என்று யார் சொன்னது? சூர்யா ஆஸ்பத்திரியில் இருந்து காந்தி நகரில் இருக்கும் என் வீட்டுக்கு வர 30 ரூபாய்தான் வாங்கினார் அந்த ஆட்டோக்காரர்!

- சுவாசிப்போம்...