மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 24

நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட் ( கவிஞர் வாலி )

வாலிஓவியம் : மணி

பாட்டும் பாராட்டும்!

'பாட்டு எழுதுகிறோம்;
பணம் வருகிறது;
வேறென்ன வேண்டும்?
குறையன்றுமில்லை, கோவிந்தா!’

 ##~##

- இப்படி எண்ணிக்கொண்டு, வாழ்க்கையை ஓட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை; பணத்தையும் தாண்டி, என் பாட்டுகள் பாராட்டை யும் வாங்கி வந்தால்தான் - பேனா பிடிப்பதில் அர்த்தம் இருக்கிறது என்று நினைப்பவன் நான்.

'பத்தோடு பதினொன்று; அத்தோடு, இது ஒன்று’- என்று, எண்ணிக்கையளவில் என் பாட்டுகள் பேசப்படுவதால், என் தமிழுக்கு என்ன தகவு இருக்க முடியும்?

உடுமலை; மருதகாசி; கண்ணதாசன்; பட்டுக்கோட்டை - இந்த வரிசையிலே, காலம் என் பேரையும் வரவு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் - நான், சென்னை வந்தேனே தவிர; பங்களாவும், படகனைய காரும், வாங்க வேண்டும் என்ற அரிப்போடு வந்தவனல்ல.

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 24

நான், பிறிதொரு உத்தியோகத்தில் அமர்ந்தே காரையும் கட்டடத்தையும் வாங்கியிருக்க முடியும்.

இவ்வுலகின் மாட்டு - பணம் பண்ண பத்து வழிகள் இருக்கின்றன; புகழ் பண்ண ஒரே வழிதான் இருக்கிறது. அதுதான் திறமை!

என் படவுலக வெற்றிக்கு, அதிர்ஷ்டம்தான் அடிப்படை என்று பேசப்படுமாயின், அது என் பெற்றோருக்கு நான் தேடிவைக்கும் பெருத்த அவமானமாகும்.

சாதியால்; சந்தர்ப்பத்தால்; சிபாரிசால்; சிலாகித்து சிலரைப் பேசுவதால் -

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 24

எனக்குப் பட வாய்ப்பு வருமாயின், அது நான் நரகல் தின்பதற்கு ஒப்பாகும். நான் மிகப் பெரிய அங்கீகாரமாக, என் எழுத்துக்கு எதை எண்ணுகிறேன் என்றால் -

ஒரு பட இயக்குநரோ; ஓர் இசையமைப்பாளரோ; ஒரு படாதிபதியோ; ஒரு படக் கதாநாயகனோ -

என்னைப்பற்றிக் கீழ்க்கண்டவாறு பேச வேண்டும்.

'வாலிக்கும் நமக்கும் ஒத்துக்காது; சுருக்கமாகச் சொன்னா - எனக்கு அவ்வளவா அவரைப் பிடிக்காது! இருந்தாலும், இந்த பாட்டு - அவர் எழுதினாத்தான் நல்லா இருக்கும்!’

- என்னைப் பற்றிய இத்தகு comments-தான், என் தொழிலை கௌரவப்படுத்துகின்றன.

ஒருவருக்கு - என்னை, எதற்காகப் பிடிக்க வேண்டும்? அப்படிப் பிடித்துத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் - அந்த ஒருவருக்கும் இல்லை; அடியேனுக்குமில்லை!

ஆனால் - என் பாட்டு, இன்னொருவருக்குப் பிடித்திருக்க வேண்டும்; அப்படிப் பிடித்திருக்குமாயின் - அதுதான் நான் பெறற்கரிய பெரிய பேறு!

படத் துறையைச் சார்ந்தோருக்கு - நான், தவிர்க்கப்பட வேண்டியவனாயிருக்கலாம்; என் பாட்டு, தவிர்க்கப்பட முடியாததாக இருக்க வேண்டும். இதைத்தான், நான் என் தொழில் தர்மமாகத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!

கேட்டு வாங்க வேண்டியது கைத்துட்டு; கேட்காமல் வாங்க வேண்டியது கைத்தட்டு!

சில பேச்சாளர்கள் மைக்கைப் பிடித்தஉடனேயே, அவையோர் முன் கீழ்க்கண்டவாறு ஒரு வேண்டுகோளை வைப்பார்கள்.

'எனக்குத் தெரியும்... நான் பேசும்போது, ஆங்காங்கு உங்கள் பலத்த கைத்தட்டல்கள் மூலம் - என்னை உற்சாகப்படுத்துவீர்கள் என்று; ஏன் என்னை ஆரம்பத்திலேயே உற்சாகப்படுத்தக் கூடாதா?’

- இப்படிக் கைத்தட்டைக் கேட்டு வாங்குவார்கள். அவையோரிடமிருந்து கைத்தட்டுகள் தானாய் வர வேண்டும் - அதாவது, அவர்களுக்கு ஏப்பம் வருவதுபோல; தும்மல் வருவதுபோல!

கேட்டுப் பெறுவது யாசகம்; கரகோஷங்களைக் கேட்காமல் பெறுவதுதான், மாணிக்க வாசகம்!

இறையருளால் - விருதுகள் எனக்கு வாய்த்திருக்கின்றன. அன்னணம் நான் வாங்கிய விருதுகளெல்லாம் - என் பாட்டு வாங்கிய விருதுகளே தவிர, கேட்டு வாங்கிய விருதுகளல்ல!

டவுலகில், நான் புனைந்த எல்லாப் பாடல்களும், பாராட்டுகளைப் பெற்றவை அல்ல; ஆனால், பாராட்டுகளை இயல்பாகப் பெற்று, என்னை எனக்கே இனங்காட்டிய பாடல்கள் உண்டு!

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 24

திருவல்லிக்கேணி N.T.K. கலா மண்டபத்தில், ஒரு பிரமாண்டமான பாராட்டு விழா - 1963-ல் - திரு.விசுவநாத அண்ணன்; திரு.ராமமூர்த்தி அண்ணன் இருவருக்கும் நடந்தது.

சிவாஜி, கண்ணதாசன் முதலிய திரையுலகப் பிரமுகர்கள் திரண்டு வந்து, விசுவநாதன் ராமமூர்த்தியை -

வாய்கள் மணக்க, வாழ்த்தியருளிய விழா அது!

அந்த விழாவில் - விசுவநாதன் ராமமூர்த்திக் குழுவினரின் இசைக் கச்சேரியும் நடந்து -

கற்கண்டுத் தமிழைக் காற்று வாகனத்தில் ஏற்றி, அண்டை அயல் நாடுகளுக்கு அனுப்பிக்கொண்டுஇருந்த அற்புதம் -

அந்த அந்தி நேரத்தில் அங்கு நிகழ்ந்தது!

கண்ணதாசன் பாடல்களுக்கிடையே - அதுகாறும் படத்தில் வெளிவராத என்னுடைய ஒரு பாட்டை -

அண்ணன் விசுவநாதன் அவர்கள் திருமதி பி.சுசீலாவைக்கொண்டு பாடவைத்தார்கள்.

அந்தப் பாடல் -

அந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருக்கும், இயக்குநர் திலகம் திரு.கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் - 'கற்பகம்’ படத்துப் பாடல்; பாடலின் பல்லவி -

'பக்கத்து வீட்டுப்
பருவ மச்சான்;
பார்வையிலே
படம் பிடிச்சான்;
பார்வையிலே
படம் பிடிச்சு -
பாவை நெஞ்சில்
இடம் பிடிச்சான்!’

- இந்தப் பாடலின் சரணத்தில், ஒரு வரி வந்தது.

'மனசுக்குள்ளே தேரோட்ட -
மை விழியில் வடம் பிடிச்சான்!’

- என்பதுதான் அந்த வரி; இந்த வரியைக் கண்ணதாசன் 'ஓஹோ’வென்று சிலாகித்து மேடையிலே பாராட்டி -

'வாலியை என் வாரிசு என்பேன்!’ என்றார் -

அவை நடுவில் அமர்ந்திருந்த நான் எழுந்து நின்று - கவியரசு கண்ணதாசனை நோக்கிக் கை கூப்பினேன்.

எவருக்கு எதிராக நான் கடைவிரித்தேனோ - அவர் பாராட்டுகிறார். இதுதான் நூறு விழுக்காடு, கிடைத்தற்கரிய நிஜமான பாராட்டு. இந்தப் பாராட்டின் எடையை நிறுத்துச் சொல்ல, ஏது ஒரு தராசு?

இந்த விழாவில்தான் -

என் அருமை அண்ணன்; என் வாழ்வில் விளக்கேற்றி வைத்த புண்ணியப் பெருந்தகை -

திரு.விசுவநாதன் அவர்களுக்கும் அண்ணன் திரு. ராமமூர்த்தி அவர்களுக்கும் 'மெல்லிசை மன்னர்கள்’ எனும் பட்டம், பலத்த கரகோஷத்திற்கிடையே -

சிவாஜி, கண்ணதாசன் இருவராலும் வழங்கப் பெற்றது!

த்துணையோ இயக்குநர்கள் இருக்கிறார்கள், இருப்பினும் -

ரசிகமணி டி.கே.சி போல் - உடனே நல்ல வரியைக் கேட்ட மாத்திரம் பாட்டைப் பாராட்டுவதில் -

இராமநாராயணனுக்கு நிகர் இராம நாராயணனே!

பல பாடல்களைச் சொல்லலாம். உணர்ச்சிவசப்பட்டு 'ப்ரமாதம் சார்; ப்ரமாதம் சார்’ என்று சின்னத் தொந்தி குலுங்கச் சிரிப்பார்.

இதோ - அவர் ரசித்த ஒரு பாடல், ஒரு பானைச் சோறுக்கு, ஓர் அரிசி பதம்போலே!

'மஞ்சள் பூசி
மைல்கல் இருந்தால்-
கடவுள் என்பாரு; இந்த -
மக்களைப் பத்தி
நானா சொன்னேன்?
  பெரியார் சொன்னாரு!’

ன்னோர் இயக்குநரை, இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அவர் படத்தின் எல்லாப் பாடல்களையும் நான் எழுதி, அவை பதிவாகி - அதற்கான பணம் மொத்தத்தையும், அந்த இயக்குநர் எப்பொழுதோ கொடுத்துவிட்டார்.

அவர் - திடீரென்று ஒருநாள் என் வீட்டுக்கு வந்தார்.

'உங்களுக்கு நான் முழுப் பணமும் செட்டில் பண்ணிட்டேன். இருந்தாலும், கடைசியா ஒரு சிச்சுவேஷனுக்கு நீங்க எழுதிக் கொடுத்த பாட்டு இருக்குதே -

அது அற்புதம்! அற்புதம்! ஒரு ரசிகன் என்கிற முறையிலே, என்னுடைய அன்பளிப்பாக இந்தப் பணத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகணும்!’

- என்று சொல்லி என் கையில், ஒரு லட்சம் ரூபாயைத் திணித்து விட்டு -

என் பதிலுக்குக்கூடக் காத்திராமல், அவர் காரேறிப் போய்விட்டார்.

அவர்தான், புகழ் வாய்ந்த இயக்குநர்; நடிகர்; உயர்ந்த கலா ரசிகர் - திரு S.J.சூர்யா அவர்கள்!

- சுழலும்...