ஏழு வயதில் செஸ் ஆடத் தொடங்கினார் ஆனந்த். அம்மாவே இவருக்கு செஸ் குரு! இதற்கென்று விசேஷமாக வேறு எந்த நிபுணரையும் நாடாமல், பல செஸ் புத்தகங்களைப் படித்துப் படித்து, அதிலுள்ள சிக்கலான பல முறைகளையும் ஆனந்துக்குக் கற்றுக்கொடுத்து, அவருடன் விளையாடுவார் தாய். இப்படிப் படித்த செஸ் பற்றிய புத்தகங்களே ஒரு லைப்ரரி அளவுக்குச் சேர்ந்து போயிருக்கிறது.
'டால் செஸ் கிளப்'பில் ஆனந்த் அத்தனை சின்ன வயசிலேயே மெம்பராகிவிட்டார். அங்கே அவரிடம் தோற்றுப் போன பல பெரிய ஆட்டக்காரர்கள் கூட தங்கள் தோல்விக்காக வருந்தாமல் ஆனந்த் ஜெயித்ததற்காக சந்தோஷப்படுவார்களாம்!
பம்பாயில் இந்த வருடம் மார்ச் 10-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை, அகில இந்திய செஸ் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றன. ஒவ் வொரு சுற்றாக ஜெயித்து வந்த ஆனந்துக்கு மார்ச் 31-ம் தேதிதான் ஃபைனல்! இறுதி ஆட்டத்தில் ஆனந்துடன் மோதியவர் பிரபல செஸ் ஆட்டக்காரர் வைத்யா. இவருக்கு வயது முப்பதுக்கு மேலிருக்கும்.
'மூளையுள்ளவர்களின் கேம்' என்றும், 'ராயல் கேம்' என்றும் அழைக்கப்படும் அந்த தேசிய அளவிலான செஸ் ஆட்டத்தின் அன்றைய வெற்றியை மிகவும் மதி நுட்பமாக ஆடி அடைந்து விட்டார் ஆனந்த்.
டான்பாஸ்கோ பள்ளியில் 'ப்ளஸ் ஒன்' மாணவர் ஆனந்த். ஒவ்வொரு போட்டியிலும் ஆனந்த் வெற்றி பெற்றபோதெல் லாம் டான்பாஸ்கோ பள்ளியின் பிரின்ஸிபால் முதல் வாழ்த்தாக வாழ்த்துத் தந்தி கொடுப்பாராம்!
ஆனந்தின் ஒரே ஒரு சகோதரர் கிராம்ப்டன் கிரீவ்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக இருக்கிறார். ஒரு சகோதரி திருமணமாகிக் கணவ ருடன் அமெரிக்காவில். பெற் றோருக்கு ஆனந்த் மூன்றாவது பையன்!
ஒரு தமிழ்நாட்டு மாணவன் - 16 வயதேயான சிறுவன் ஆனந்த் இந்திய சாம்பியனாகியிருப்பது முதல் படிதான். உலக அளவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுகிற நாள் ஆனந்துக்கு அதிக தொலைவில் இல்லை!
|