உலகம் முழுவதிலும் வாழும் முஸ்லிம்கள் அனைவருக்கும் அவர்களுடைய சமயக் கட்டளையின் அடிப்படையில் அமைந்திருக்கும் திருநாட்கள் இரண்டு. இந்தத் திருநாட்களைக் குறிக்கும் அரபிச்சொல் 'ஈத்' என்பதாகும். 'ஈத்' என்ற அரபிச் சொல்லுக்கு திரும்பத் திரும்ப வரும் நாள் என்று பொருள். அது ஆண்டுதோறும் வந்துகொண்டிருக்கிற திருநாளைக் குறிப்பதாக ஆயிற்று. முதலாவது திருநாள் இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாவது மாதமாகிய 'ரமலான்' முடிந்து பத்தாம் மாதமாகிய 'ஷவ்வால்' மாதத்தின் முதல் நாளில் அமைவது.
நோன்பைத் தொடர்ந்து வருகின்ற திருநாள் ஆகையால், அதனை 'நோன்புப் பெருநாள்' என்று தமிழ் முஸ்லிம்கள் அழைக்கிறார்கள். எக்காரணம் பற்றியோ இந்தப் பெருநாளுக்கு 'ரம்ஜான்' என்ற பெயர் தவறாக வந்துவிட்டது. 'ரம்ஜான்' என்ற சொல்லே 'ரமலான்' என்ற அரபிச் சொல்லிலிருந்து திரிந்தோ மருவியோ வந்ததுதான். எப்படியிருப்பினும் ரமலான் மாதம் முடிந்த பிறகு அடுத்து வருகிற ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் அமைகிற இந்தப் பெருநாளை 'ரம்ஜான்' என்று அழைப்பது பொருத்தமற்றதே ஆகும். அரபு மொழியில் இத்திருநாள் 'ஈதுல் பித்ர்' என்று சொல்லப்படும். 'பித்ர்' என்பது ஓர் ஈகை. 'ஈதுல் பித்ர்' என்ற அரபுச் சொற்றொடருக்கு நேரான தமிழ் சொற்றொடர் 'ஈகைத் திருநாள்' என்பதே ஆகும். அது ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் அமைகிற திருநாளையே குறிக்கும்.
முஸ்லிம்களுடைய இரண்டாவது திருநாள், இஸ்லாமிய ஆண்டின் கடைசி மாதமாகிய 'துல்-ஹஜ்'ஜின் பத்தாம் நாளில் அமைவது. இதனைத் தமிழ் முஸ்லிம்கள் 'ஹஜ்ஜுப் பெருநாள்' என்று அழைக் கிறார்கள். 'ஹஜ்' என்ற சொல்லுக்கு ஓர் இடத்திற்குச் செல்வது என்று பொருள். இஸ்லாமிய சமயக்கொள்கைகளின்படியும் கோட்பாடுகளின்படியும் அரபு நாட்டில் உள்ள மக்கா என்ற நகரில் அமைந்திருக்கிற 'கஅபா' எனப்படும் இறையில்லத்தை நோக்கிச் செல்லும் பிரயாணத்தை இந்த ஹஜ் என்ற சொல் குறிப்பதாக ஆயிற்று. முஸ்லிம்களின் ஜம்பெருங் கடமைகளுள் ஐந்தாவதாகச் சொல்லப்படுவது இந்த ஹஜ் என்ற புனிதப் பிரயாணமாகும். 'கஅபா', 'மஸ்ஜிதுல் ஹராம்' - அதாவது, மாட்சிமைமிக்க, புனிதமிக்க ஆலயம் - என்றும் வழங்கப்படுகிறது. இஃது இன்ன காலத்தில் தோன்றியது என்று கணித்திட இயலாது. இதனை இபுராஹீம் நபியவர் களும் அவர்களின் மைந்தரான இஸ்மாயீல் நபியவர்களும் புதுக்கியமைத்தார்கள் என்று வரலாறு கூறுகிறது.
இபுராஹீம் நபியவர்கள் இறைவனுடைய துணையன்றை மட்டுமே நம்பி, ஊர் ஊராக ஓய்வு ஒழிச்சலின்றி அலைந்து திரிந்து கொள்கைப் பிரசாரம் செய்தார்கள். அவர்கள் இறுதியாக வந்தெய்திய திருத் தலமே 'மக்கா' நகரமாகும்.
இறைவனுடைய திருப் பொருத்தத்தையன்றி வேறெதையுமே நாடாத மனமுடைய அப்பெருமகனாருக்கு ஒரு சோதனை! தம் நாயகனின் திருப்பொருத்தத்தைப் பெற இவர் எத்துணைத் தியாகத்தினைச் செய்யவல்லார் என்பதை உலகோருக்குக் காட்டும் சோதனை அது! தங்களுடைய வயோதிகப் பருவத்தில் பிறந்து பல்லாற்றானும் தங்களுக்கு உறுதுணையாக விளங் கும் ஒரே மகனான இஸ்மாயீலை அறுத்துப் பலியிட வேண்டும் என்ற சமிக்ஞை இறைவனிட மிருந்து தங்களுக்கு வந்ததாக இபுராஹீம் நபியவர்கள் உணர் கிறார்கள். பதைபதைத்த நெஞ்சத்தினராகி, இதனைத் தம் மைந்தரிடம் வெளியிடுகிறார்கள். மலை குலையினும் தம் நிலை குலையாத மனத்திண்மை மிக்க தந்தையின் மைந்தர் இஸ்மாயீல்! தந்தையின் குறிப்பறிந்து ஒழுகும் குணக்குன்றான அவர், 'எந்தையே! இறைவனின் கட்டளை இது என்றால், தயக்கமின்றி நிறை வேற்றுக' என்று சொல்கிறார்.
|