இலங்கைத் தமிழர் பிரச்னை முடிவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள், இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தங்களது செல்வாக்குக்குப் பயன்படுத்த முன்வந்த அளவுக்கு, சுயலாபமும் சுயவிளம்பரமும் தேடிக்கொண்ட அளவுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் உண்மையான அக்கறை காட்டவில்லை என்பதே உண்மை.
தமிழினத் தலைவர் என்று அடைமொழியைச் சேர்த்துக்கொள்ளும் நம் முதல்வர் - 'தேசிய முன்னணி அரசு எங்கள் அரசு. அது தமிழ் மாநிலத்துக்காகச் செயல்படும் அரசு' என்று பேசி வந்த முதல்வர் - எந்தவிதத்தில் தேசிய முன்னணி அரசை இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்க்கப் பயன்படுத்தினார் என்று பார்த்தால், மிகப் பெரிய பூஜ்யம்தான் மிஞ்சுகிறது!
அதாவது, இவர்கள் - தமிழ் இன மானக் காவலர்கள் - தங்கள் தோலைக் காப்பாற்றிக்கொள்வதில்தான் அக்கறை காட்டினார்கள். தெளிவாக முன்வந்து தமிழ் மக்களுக்கும் தேசிய முன்னணி அரசுக்கும் ஓர் உண்மையான துணிவான முடிவை எடுத்துக்கூறத் தவறிவிட் டார்கள்.
இவர்கள்தான் எதிர்க்கட்சியாக இருந்தபோது தங்கள் சட்டசபை உறுப் பினர் பதவியையெல்லாம் துச்சமாகக் கருதி, அதை ராஜினாமா செய்தவர்கள். இன்று இதை நம்புவதற்குக் கஷ்டமாக இருக்கிறது. இவர்களா அவர்கள்? இவர் களுக்கு வேண்டிய தேசிய முன்னணி அரசு போனபின் இலங்கைத் தமிழர்களுக்காக இவர்கள் என்ன நன்மை செய்துவிட முடியும்? வாய்ப்பு இருந்தபோது அதைப் பயன்படுத்தாதவர்களை என்னவென்று சொல்வது?
ஆக மொத்தம், மிஞ்சி நிற்பது இலங்கைத் தமிழர்கள் படும் கொடுமை; அழிக்கப்படுகிறது தமிழினம் என்ற உண்மை!
|