இரண்டாம் உலகப் பெரும் போர் 1942-ல் துவங்கியது. அமெரிக்க அரசாங்கம் டிஸ்னியின் ஸ்டுடியோக்களை, உணவுப் பொருள்களை வைக்கும் கிடங்காகப் பயன்படுத்திக் கொண்டது. டிஸ்னி போர் முடியட்டும் என்று காத்திருந்தார்.
போர் 1945-ம் ஆண்டில் முடிந்தது. உடனே டிஸ்னி, 'என் கீதம்' என்ற படத்தைத் தயாரித்து 1946-ல் வெளியிட்டார். சிறு குழந்தைகளுக் காக 'தெற்கின் கீதம்', 'இன்ப நேரம்', 'சிண்ட்ரெல்லா' ஆகிய படங்களைத் தயாரித்து அவர்களை இன்பமூட்டினார்.
கார்ட்டூன் படங்களைத் தவிர, மனிதர்கள் நடித்த 'புதையல் தீவு', 'ராபின்ஹுட்' என்று இரு படங்களை 1952-ல் வெளியிட்டார் டிஸ்னி.
1948-ல் டிஸ்னியின் போக்கு மாறியது. வர்ணனைப் படங்கள் அல்லது இயற்கைப் படங்களை அவர் எடுக்க ஆரம்பித்தார். 'ஸூல்தீவு', 'பீவர் பள்ளத்தாக்கு', 'இயற்கையின் அரை ஏக்கர் நிலம்' என்ற மூன்று இயற்கைப் படங்களும் புகழ்பெற்ற ஆஸ்கர் பரிசுகளை அவருக்கு அளித்தன. 1951-ம் ஆண்டு அவை வெனிஸ் திரைப்படத் திருவிழாவிலும், ஆங்கிலத் திரைப்படக் கழகத்தாலும் தங்கப் பதக்கங்களைப் பெற்றன.
மிருகங்களின் இயற்கையான ஜீவ மரணப் போராட்டத்தை டிஸ்னியின் 'வாழும் பாலைவன'த்தில் காணும்போது, டிஸ்னி அவற்றை எப்படிப் படமாக்கினார் என்று நாம் வியப்படைகிறோம்.
|