பிள்ளை இப்போதும் வாயைத் திறக்கவில்லை. தம்மைப் பார்த்து ஒருவன் பேசிக்கொண்டிருப்ப தாகவே அவர் நினைக்கவில்லை. வழக்கப்படி இளைஞர் ஜன்னல் பக்கம் போய்விட்டார். அதற்குப் பிறகு அரை மணி நேரம், எங்கள் பெட்டியில் பேச்சு மூச்சே இல்லை.
வெகு நேரம் கழித்துச் சிதம் பரம் பிள்ளை, தமது மூக்குக் கண்ணாடியைக் கழற்றிக் கீழே வைத்தார். பத்திரிகையை நாலு மடிப்பாக மடித்துத் தமது கைப் பெட்டிக்குள் வைத்துவிட்டு, கையைத் தட்டி அந்த இளைஞரை அருகில் அழைத்தார்.
இளைஞர் அருகில் வந்ததும், ''நீங்கள் என்னை மூன்று தரம் மணி என்னவென்று கேட்டதற்கு நான் பதில் பேசாமல் இருந்து விட்டேன். அதனால் நீங்கள் என்னை ஊமை அல்லது செவிடு என்று நினைத்திருக்கலாம்; அல்லது தாக்ஷண்யமற்றவன் என்றும் எண்ணியிருக்கலாம். அப்படி யெல்லாம் இல்லை. நான் உமக்குப் பதில் சொல்லியிருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை நினைத்தே, பேசாமல் இருந்துவிட்டேன். நீங்கள் கேட்ட தும் உடனே நான் பதில் சொல்லி யிருந்தால், மேற்கொண்டு பேச்சுக் கொடுக்க ஆரம்பித்திருப்பீர்கள், இல்லையா?'' என்றார்.
''ஆமாம்'' என்றார் இளை ஞர்.
''நான் மூன்று வருஷ காலமாக என்னுடைய பெண் மரகதத்துக்குப் பிள்ளை தேடிக்கொண்டிருக்கி றேன். இப்போது கூடச் சென் னைக்கு அது விஷயமாகத்தான் போய் வருகிறேன். ஒரு வாரமாகச் சுற்றிச் சுற்றி அலைந்தேன். ஒன்றும் பிரயோஜனப்படவில்லை. இருக்கட்டும், எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ பாய்ந்து விட்டேன்.
நீங்கள் மேற்கொண்டு பேசி னால், நானும் பேச வேண்டியிருக் கும். அப்புறம் நான் உம்முடைய பூர்வோத்திரங்களையும், நீர் என்னுடைய குடும்ப சமாசாரங் களையும் தெரிந்துகொள்ள நேரிடும். பிறகு, 'நீர் எங்கே போகிறீர்?' என்று நான் கேட்பேன். நீர் 'பங்களூர் போகிறேன்' என்று பதில் சொல்லுவீர். உடனே நான், 'என் வீடு ஸ்டேஷன் ரோட்டிலேயேதான் இருக்கிறது. நீங்கள் ரயிலை விட்டு இறங்கியதும், ஒரு வேளை என் வீட்டில் தங்கிப் போகவேண்டும்' என்று சொல் வேன். அதற்குள் நமக்குள் அவ்வளவு சிநேகம் ஏற்பட்டுவிடும், இல்லையா?
நீர் என்ன பதில் சொல்லுவீர்? 'ஆஹா, பேஷாய் வருகிறேன்' என்றுதானே சொல்லுவீர்! பிறகு உம்மை என் வீட்டுக்கு அழைத்துப் போவேன். சாப்பாடு எல்லாம் ஆனதும், நான் என் வீட்டு ரேடியோ பெட்டியைத் திருப்பி வைப்பேன். உடனே என்னிடம் நீங்கள், 'சங்கீதத்தில் உங்களுக்கு ஆசை போலிருக்கிறது' என்று சொல்லுவீர். நான், 'ஆமாம், என் பெண் மரகதத்துக்குக் கூடப் பாட்டுச் சொல்லி வைத்திருக்கிறேன்' என்று சொல்லிவிட்டு, 'மரகதம், மரகதம்... இங்கே வந்து ஒரு பாட்டுப் பாடு' என்று என் பெண்ணைக் கூப்பிட்டுப் பாடச் சொல்லுவேன். அவள் வந்து பாடுவாள். நீர் 'பேஷ்' போடுவீர். உடனே நான், என் பெண் மரகதத்தின் கல்யாண விஷயமாய்ப் பேச ஆரம்பிப்பேன்.
அதெல்லாம் ஒரு விதமாய் முடிந்ததும், மரகதத்தை மணக்கும் படி உம்மையே கேட்கலாமா என்று எனக்குத் தோன்றிவிடும். மரகதம் செல்லமாய் வளர்ந்தவள். அவளுக்குக் கஷ்டமென்பதே தெரியாது. 'பணத்திலேயே பிறந்து, பணத்திலேயே வளர்ந்தவள்' என்று நான் சொன்னால், நீர் கோபித்துக் கொள்ளக்கூடாது. என் மரகதத்தைக் கைக் கடியாரம் கூட இல்லாத உமக்குக் கொடுக்க எனக்கு இஷ்டம் இல்லை. ஆகை யால்தான் நான் முதலிலேயே முன் ஜாக்கிரதையாகப் பேச்சுக் கொடுக்காமல் இருந்துவிட்டேன். என்ன, நான் சொன்னதெல்லாம் புரிந்ததா?'' என்று முடித்தார்.
அந்த இளைஞரும் புன்சிரிப்பு டன், ''புரிந்தது, புரிந்தது'' என்றார்.
அதற்குள் ரயில் பௌரிங் பேட்டை தாண்டி, பங்களூர் கன்ட்டோன்மென்ட்டை அடைந் தது. சிதம்பரம் பிள்ளை ரயிலை விட்டு இறங்கி, வெளியே போனார். அந்த இளைஞரும் நானும் மட்டும் வண்டியில் இருந்தோம்.
இளைஞர் என்னைப் பார்த்து, ''ஸார், இவ்வளவு நேரம் மூட்டை அளந்துவிட்டுப் போனாரே, அவருக்கு வாஸ்தவத்திலேயே பெண் இருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்களா?'' என்று கேட்டார்.
நான் ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தேன். ஆனால், அதற் குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. சிதம்பரம் பிள்ளையே திரும்பி வந்து வண்டிக்குள் தலையை நீட்டினார்.
இளைஞர் கேள்வி அவர் காதில் விழுந்திருக்க வேண்டும்.
''எனக்குப் பெண் இருக்கிறாள், ஐயா! நிஜமாக இருக்கிறாள். ஆனால், கடியாரந்தான் கிடை யாது!'' என்று சொல்லிவிட்டுப் போனார்.
|