''கடைக்குப் போயிட்டு வரேன், தாத்தா!''
''என்னடா வாங்கப் போறே?''
''அரிசி, சர்க்கரை, எண்ணெய், காய்கறி...''
''பணம் எடுத்துக்கிட்டியா?''
''ஓ! எடுத்துக்கிட்டேனே...''
''எங்கேடா..?''
''அதோ, வேலைக்கார முனியன் சாக்குமூட்டை நிறையத் தூக்கிட்டுப் வர்றான் பாரு, தாத்தா! மொத்தம் பத்து லட்ச ரூபாய்..!''
''உம்... விலைவாசியை நினைச்சா பயம்மா இருக்கு. அரிசி கிலோ என்ன விலைடா?''
''கிலோ ஆயிரம் ரூபாய் தாத்தா..!''
''உம்... நான் வேலைக்குப் போறப்ப கிலோ பத்து ரூபாவா இருந்துது!''
''நிஜம்மாவா தாத்தா? ஆச்சர்யமா இருக்கே!''
''உம்! அந்தக் காலத்துல பை நிறைய பணம் எடுத் துக்கிட்டுப் போய், அதே பை நிறைய காய்கறி வாங்கிட்டு வருவோம். அப்போ தங்கம் கூட மலிவுதான். 1990-ல உங்க பாட்டியோட பிறந்தநாளுக்கு அஞ்சு பவுன்ல நெக்லஸ் வாங்கிப் போட்டேன்.விலை வெறும் இருபதாயிரம்தான்!''
''இருபதாயிரம்தானா! அப்பாவுக்கு இன்னிக்கு வர்ற இருபது லட்ச ரூபாய் சம்பளத்துல மாசம் பூரா நெக்லஸா வாங்கலாமே..!''
''ஆமாண்டா! ஆனா அன்னிக்கு, என் சம்பளம் அஞ்சாயிரம் ரூபாய்ல அரிசி, பருப்பு எல்லாம் வாங்கி, உங்கப்பனை கான்வென்ட்ல படிக்க வெச்சு, மாசம் ஐந்நூறு ரூபா சேர்த்தும் வெச்சேண்டா..!''
''நீங்க ரொம்பக் கொடுத்து வெச்சவர் தாத்தா! உங்க காலத்துல அரிசி விலையெல்லாம் கம்மியா இருந்துது. நான் பெரியவனாகி வேலைக்குச் சேர்றப்ப, அரிசி கிலோ எத்தனை லட்சம் ரூபா விக்கப் போகுதோ... உம்!''
|