மனசைத் தொட்டுட்டீங்க சார்! அமரராகிவிட்ட நம்பியார் சாமியைப் பற்றிய அருமையான கட்டுரையை வெளியிட்டு, மனசை நெகிழ வெச்சுட்டீங்க. அட்டையில், குருசுவாமி கோலத்தில் நம்பியாரின் கனிவான தோற்றத்தைப் பார்த்தபோது, இவரா 60 ஆண்டுகளுக்கும் மேலாக கொடூர வில்லனாக சக்கைப் போடு போட்டவர் என்று வியக்கத் தோன்றியது!
- எம்.ராஜலக்ஷ்மி, பொன்னேரி.
ஜெயகாந்தன் கதையின் தலைப்புதான் 'தரக் குறைவு'; கதையின் தரமோ வெகு நிறைவு! இந்தக் கதை அந்தக் காலத்தில் விகடனின் முத்திரை பெற்ற கதையாக வந்ததாக ஞாபகம். அப்படியிருப்பின், அதைக் குறிப்பிட்டிருக்கலாமே?
- ஆர்.பன்னீர்செல்வம், திருவாரூர்.
உங்கள் ஞாபக சக்திக்கு ஒரு ஷொட்டு! அது முத்திரைக் கதைகள் வரிசையில் இடம்பெற்ற கதையேதான்! 'ஜெயகாந்தன்' என்கிற முத்திரையே போதுமே, இன்னொரு முத்திரை வேண்டுமா என்றுதான் குறிப்பிடாமல் விட்டுவிட்டோம்!
எழுத்தாளர் கீதா பென்னெட்டின் 'சாய்ஸ்' மூலம், ஒரு சரித்திர நாயகனைப் பற்றிய அருமையான கட்டுரையைப் படித்து மகிழ்ந்தோம்.
- சோம.தியாகராஜன், பெரம்பலூர்.
பப்பிம்மாவின் கட்டுரை, அவரது நாட்டியத்தைப் போலவே பரவசமூட்டுவதாக இருந்தது. 'இனி இந்த ராமச்சந்திரன் உனக்கு வேண்டாம்; அந்த ராமச்சந்திரன் போதுமல்லவா?' என்று தங்கை ராகினி வேடிக் கையாக ஆரம்பித்துக் கண் கலங்கியதை அவர் வர்ணித்திருந்த விதம் நெகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது.
- வி.கலைச்செல்வி, சிதம்பரம்.
'ஒரு தலை ராகம்' விமர்சனம் படித்து மகிழ்ந்தேன். நீங்கள் 'தில்லானா மோகனாம்பாள்' விமர்சனம் வெளியிட்டபோதே, ''ஆண் குரல் பின்னணிப் பாடல்களே இடம்பெறாத படம் இது. அதே போல், பெண் குரல் பின்னணிப் பாடல்களே இடம்பெறாத படம் 'ஒரு தலை ராகம்'. அந்தப் பட விமர்சனத்தையும் வெளியிடுவீர்களா?'' என்று என் விருப்பத்தைப் பதிவு செய்திருந்தேன். வாசகர் சாய்ஸாக என் பெயரைக் குறிப்பிடாமல் ஏமாற்றிவிட்டீர்களே!
- கே.பத்மாவதி, புதுச்சேரி-2.
ஸாரி, ஸாரி... ரொம்ப ஸாரி! இதோ, உங்கள் பெயரைப் பதிவு செய்துவிட்டோம். இப்ப திருப்திதானே?
|