யார் அந்த மாணவன்?
அந்த மாணவன் நல்ல திறமைசாலி. அவன் ஒரு நாடகம் எழுதித் தயாரித்தான். அது ஓர் உணர்ச்சிகரமான கதை. சோக முடிவு கொண்ட கதைகளை ரசிக்க மறுத்த அந்தக் காலத்தில், இந்த நாடகம் ஒரு புது முயற்சி! அம் மாணவன் அந்த நாடகத்தின் கதை, வசனகர்த்தா, டைரக்டர் மட்டுமல்ல; கதாநாயகனும்கூட!
கதைப்படி கதாநாயகன் இறக்கிறான். நாடகம் முடிகிறது. மேடையில் கதாநாயகன் இறந்து பல நிமி ஷங்கள் வரை திரை மூடப்படவில்லை. உடன் நடித்த மாணவர்கள் மேக்கப் கலைக்கும் மும்முரத்தில் இருந்தார்கள்.
'இறந்தவன்' இரண்டு மூன்று நிமிஷம் பொறுத்தான். அப்போதும் திரை விழவில்லை. அவனுக்கு ஆத்திரம் வந்தது. சட்டென்று எழுந்து, கீழே திரையை விடும்படி கடிந்து கொண்டான். திரை விழுந்தது. தாமதத்திற்குக் காரணம், திரைக்கயிற்றில் விழுந்த முடிச்சுகள்தான்!
இறந்த கதாநாயகன் உயிர் பெற்ற அதிசயம் ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்டது!
நாடகம் நடந்த வருஷம் 1948. நாடகத்தின் பெயர்: 'உலகம் சிரிக்கிறது'. நடந்த இடம்: செங்கற்பட்டு.
அந்த மூன்றெழுத்து டைரக்டர் யார் என்று இத்தனை நேரம் நீங்கள் கண்டுபிடித்திருக்க வேண்டுமே!
- 'நந்தி'
விடை தெரியாதவர்கள் பார்க்க... |