தியானம் என் வாழ்க்கைக்குள் வந்தபோது, இது மாறியது. 'கோபம் விலக்கினால்தான் தீர்வு கிட்டும்!' (If you are out of rage only, there is solution) என்று தீர்மானமான தெளிவு வந்தது.
கோபமாக இருந்தபோது தீவிரமாக இருப்பதைக் கவனித்திருக்கிறேன். தீவிரமாக இருந்துகொண்டு கொதிக்காமலும் இருக்க முடியும் என்ற புதிய பரிமாணத்தைத் தியானம்தான் எனக்குள் கொண்டுவந்தது. அது புரிந்த பின் என் வாழ்க்கையின் நோக்கம் முற்றிலும் மாறியது.
பொதுவாக, இளைஞர்கள் பலரும் தீவிரமாக இருப்பதற்குக் கோபம்தான் ஒரே வழி என்று நம்புகிறார்கள். உண்மையில் கோபம் என்பது உங்களை நீங்களே அழித்துக்கொள்வதற்குத்தான் அடிகோலுகிறது. எந்தக் காரணத்துக்காகக் கோபம்கொள்கிறீர்களோ, அந்த அடிப்படையையே கோபம் சிதைத்து சின்னாபின்னமாக்கிவிடுகிறது!
குளிர்ந்த நெருப்பைப் போல, அமைதியாக இருந்துகொண்டே தீவிரமாக இருப்பது எப்படி என்பதைச் சொல்லித் தருவதே இப்போது என் நோக்கம். அதற்காகச் சவம் போல் அமைதியாக இருக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் விரும்பியதில்லை. என் கண்களைப் பாருங்கள்... உள்ளே ஓர் எரிமலை உயிரோடு இருப்பது புலப்படும். அதேசமயம், என் முகத்தில் எந்தக் கொதிப்பையும் நீங்கள் காண முடியாது. தீவிரமாகவும் இருந்துகொண்டு ஆனந்தமாகவும் இருக்க முடியும் என்பதே என் அனுபவம்.
கோபம் பற்றி நான் என்ன நினைத்தாலும், என்னிடம் கோபம் பாராட்டியவர்கள் அன்றும் இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள்.
என் அப்பா என்னிடம் காட்டாத கோபமா? ஆசிரியர்கள் என்னிடம் பாராட்டாத கோபமா? என்னை முன் பின் சந்தித்தேயிராத பலர்கூட என் மீது கோபமாக இருக்கிறார்கள்.
நான் கேட்கும் கேள்விகள் பலருடைய அஸ்திவாரத்தையே அசைத்துவிடுகின்றன. வசதியாக ஒரு கூட்டுக்குள் உட்கார்ந்திருப்பவர்களை என் கேள்விகள் குடை வதால், அவர்கள் என் மீது கோபம்கொள்கிறார்கள். நின்ற இடத்திலேயே நின்றுவிட்டவர்களை என் கேள்விகள் உலுக்குவதால், அந்தத் தொந்தரவைப் பொறுக்க முடியாமல் பலர் கோபமாகிறார்கள்.
ஒன்று, அவர்கள் வெளிச்சத்தைக் காண வேண்டும். அல்லது கோபம்கொள்ள வேண்டும். ஏதோ ஒருவிதத்தில் அவர்களை உறக்க நிலையிலிருந்து தட்டி எழுப்பிவிட்டேனே, அதுவே எனக்குத் திருப்தியாக இருக்கிறது.
ஓர் அரசியல்வாதியிடம் கேளுங்கள்; பிச்சைக்காரனிடம் கேளுங்கள்; கொள்ளையடிப்பவனிடம் கேளுங்கள்; சிறு திருட்டுகள் செய்பவனிடம் கேளுங்கள்; தத்துவவாதியிடம் கேளுங்கள்; யாராக இருந்தாலும் தங்கள் கோபத்தில் ஒரு நியாயம் இருப்பதாகவே சொல்வார்கள்.
ஒரு தாவரமோ, மிருகமோ, பூச்சியோ அடுத்தவர்களைத் தங்களைப் போல் மாற்றிவிடத் திட்டம் தீட்டுவதில்லை. மனிதன் மட்டும் தன் கொள்கைகளை மற்றவர் மீது திணிக்க முற்படுகிறான். சரிப்பட்டுவராதவர்களுடன் அவனுடைய போராட்டம் துவங்கிவிடுகிறது.
|