ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

ஹாய் மதன்

ஹாய் மதன்


தொடர்கள்
ஹாய் மதன்
ஹாய் மதன்
 
ஹாய் மதன்
ஹாய் மதன்
ஹாய் மதன்
ஹாய் மதன்

போஸ்டல் ராஜ், கடலூர்.

இந்திய மன்னர்கள், போரில் 50 ஆயிரம் யானைகள், லட்சம் குதிரைகள், பல லட்சம் வீரர்கள் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுவதெல்லாம் உண்மையா?

உண்மைதான்! விஜயநகரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த கிருஷ்ண தேவராயாரின் பல அமைச்சர்களில் ஒருவரான சளுவ நரசிங்க நாயகர் என்பவருக்குக்கூட பிரத்யேகமாக 30 ஆயிரம் காலாட்படை வீரர்களும், 3 ஆயிரம் குதிரை வீரர்களும், 30 யானை களும் கொண்ட ராணுவம் தரப்பட்டது (அமைச்சர்கள் மீது என்ன நம்பிக்கை!) என்றால், சக்ரவர்த்தியின் படை பலம்பற்றி புரிந்துகொள்ளலாம்!

கலிங்கத்துப் போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் இறந்ததாக அசோகரின் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அப்படியெனில், அசோகரின் படை எவ்வளவு பிரமாண்டமானதாக இருந்திருக்க வேண்டும். இப்போது 'ஆர்மி'யில் உள்ளது போல பண்டைய காலத்திலும் ராணுவத்தில் படைப் பிரிவுகள் - பட்டி, சேனாழகா, வாஹினி, அக்ஷாகினி என்றெல்லாம் உண்டு. 25 ஆயிரம் ரதங்கள், 70 ஆயிரம் குதிரை வீரர்கள், 20 ஆயிரம் யானை வீரர்கள், மற்றும் ஒண்ணே கால் லட்சம் காலாட்படை வீரர்கள் அடங்கியதுதான் ஒரு அக்ஷாகினி!

வட இந்திய மன்னர்களைவிட தமிழக மன்னர்கள் இன்னும் பெரும் படை வைத்திருந்த தாகச் சொல்லப்படுகிறது!


எம்.திலகவதி, சென்னை-28.

மும்பையை ஏன் இப்படிப் படுத்துகிறார்கள்? கொடூர மான இந்தக் கிருமிகளை (பயங்கரவாதத்தை) அழிக்கவே முடியாதா?

ஹாய் மதன்

நம்மைவிட ரொம்பச் சின்ன நாடு இஸ்ரேல். வட்டமாக எதிரிகளாலும் பயங்கரவாதத்தாலும் சூழப்பட்ட நாடு. ஆண்டாண்டு காலமாக, ஒவ்வொரு நிமிடமும் அந்த நாடு எச்சரிக்கையாக இருந்து வருகிறது. இஸ்ரேலின் தற்காப்பும், ஒற்றர்களின் திறமையும் ஆச்சர்யமானவை. இந்த எச்சரிக்கை உணர்வு இல்லாமல் இருந்தால், அந்த நாடு எப்போதோ அழிந்துபோயிருக்கும். இனி, நம்முடைய பாரத நாட்டுக்கும் இந்த எல்லாத் தகுதிகளும் தேவை. இல்லைஎனில், பல நகரங்கள் 'மும்பை' ஆகக்கூடும். இப்போது இருக்கும் அரசியல் தலைவர்களையும் ஆட்சிகளையும் பார்க்கும்போது கவலை அதிகமாகிறது. ஏனெனில், இந்த குண்டுவெடிப்புகளை வைத்துக்கூட ஏதாவது பணம் பண்ணலாமா, அல்லது குறைந்தபட்சம் பப்ளிசிட்டியாவது பண்ணிக்கொள்ளலாமா என்று சிந்திக்கும் நிறைய அரசியல்வாதிகளை நாம் தேர்ந்தெடுத்துக்கொண்டு வருகிறோம். ஆகவேதான் ரொம்ப பயமாக இருக்கிறது!


வி.குமரன், மதுரை-12. (இ-மெயில்)

இஸ்லாம் மதம் மற்ற மதங்களை வெறுக்கிறதா?

எனக்குக் 'கொஞ்சூண்டு' தெரிந்த வரையில் - இல்லை என்பதுதான் உண்மை. மெக்காவைக் கைப்பற்றிய கையோடு, நபிகள் நாயகம் செய்த முதல் காரியம் - பல கொடுமைகள் நிகழ்த்திய எதிரிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு (general Amnesty) வழங்கியதேயாகும். 'குர்- ஆன்', 'எல்லாம் வல்ல இறைவனை (அல்லாஹ்) மிகுந்த விசுவாசத்துடன்தான் வணங்குகிறேன். (மற்ற மதத்தினரைப் பொருத்தவரை) உங்களுக்கு எது அல்லது யார் பிடித்தமோ வணங்கிக்கொள்ளுங்கள்'

ஹாய் மதன்

என்றும், 'எனக்கு என் மதம். உனக்கு உன் மதம்' என்றும்தான் வருகிறது. ஆகவே, அடிப்படையில் எந்த மதமும்... இஸ்லாம் உட்பட, பயங்கரவாதத்தை வளர்த்து அப்பாவி மக்களைக் கொன்று தீர்ப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை!


வெ.கா, கடையநல்லூர்.

இந்த ராக்கெட் யுகத்தில்கூட வில்வித்தைக்கு (Archery) ஒலிம்பிக்ஸில் இடமா?

துப்பாக்கி வந்துவிட்டது. ஏன் ஈட்டி எறிதல்? மோட்டார் சைக்கிள், கார் வந்துவிட்டது. ஏன் ஓட்டப் பந்தயம்? இப்படியே சிந்தித்தால், ஒலிம்பிக்ஸ் ஒரு நாளில் முடிந்துவிடும்!


செந்தில்குமரன், சென்னை-34.

தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் உள்ளவர்கள் படிப்பதற்கென்று எதேனும் புத்தகம் உள்ளதா? நீங்கள் ஏன் அது போல் ஒன்று எழுதக் கூடாது?

'தற்கொலை மனநிலையில் உள்ளவர்கள் படிக்க...' என்றால் என்ன அர்த்தம்? தற்கொலையை எப்படி (எல்லாம்) செய்துகொள்வது என்றுகூடப் புத்தகம் இருக்கிறது! (ஜப்பானில் எரிமலைகள் சற்று அதிகமாக உண்டு. ஏதேனும் எரிமலைகள் வெடிக்கும்போது, பல இளைஞர்கள், இளைஞிகள் ஓடிச் சென்று எரியும் 'லாவா' குழம்பில் குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதால், ஜப்பானிய அரசு எரிமலைக்குப் 'பாதுகாப்பு அரண்' போட்டதாக ஒரு செய்தியை நான் படித்தேன்!) ஒவ்வொரு தற்கொலைக்காரருக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. ஆகவே, மொத்தமாக ஒரு புத்தகம் எழுதுவதில் பலன் இருக்காது!


டி.எம்.பானுமதி, சென்னை-88.

முன்பெல்லாம் வெயில் காலம் வந்துவிட்டால், மொட்டை மாடியில் நட்சத்திரங்களை ரசித்தவாறு படுப்பதும், வீட்டுக்கு வெளியே கட்டில் போட்டுக்கொண்டு படுப்பதும், திண்ணை உள்ள வீடுகளில், திண்ணையில் படுப்பதும் சகஜம். ஆனால் இப்போதெல்லாம், கிராமங்களில்கூட இம்மாதிரி காட்சியைக் காண முடியவில்லை, பார்த்தீர்களா?!

பெருமூச்சு விடவைக்கும் கேள்வி! இதற்குச் சிம்பிளான விடை, முன்பைவிட இப்போது குற்றங்கள் பல மடங்கு அதிகமாகிவிட்டன. மக்களுக்குப் பாதுகாப்பு குறைந்துவிட்டது. பயம் அதிகரித்துவிட்டது. ஆரோக்கியம் குறைந்துவிட்டது. அடுக்குமாடிக் கட்டடங்கள் வந்துவிட்டன. (அங்கிருந்து பைனாகுலரால் பார்ப்பார்கள்!)

ஆனால் ஒன்று, இப்போது உங்கள் படுக்கையறையின் கூரைப் பகுதியில் வானம் - நட்சத்திரங்களை (மினுமினுக்கின்றன!) தத்ரூபமாக செயற்கையாக ஏற்படுத்தித் தருகிறார்கள். நிஜ வானம் ஃப்ரீ. செயற்கைக்கு நிறைய செலவாகும்!

 
ஹாய் மதன்
ஹாய் மதன்