இன்டர்நேஷனல் டெக்ஸ்டைல் மெஷினரி எக்ஸிபிஷன், என 4 ஆண்டு களுக்கு ஒரு முறை இந்தியாவில் நடைபெறும்!
உலகத்தின் எல்லா உற்பத்தியாளர்களும், உலகத்து அனைத்து ஜவுளித்தொழில் நுட்ப வல்லுநர்களும், நூற்பாலை - நெசவாலைப் பிரதிநிதிகளும், முதலாளிகளும், நிர்வாகிகளும் கலந்துகொள்வார்கள். 1980-ல் முதலில் மும்பையில் தொடங்கிய இந்தக் கண்காட்சியில் தொடர்ந்து நானும் கலந்துகொள்கிறேன். சீன, ஜப்பானிய, கொரிய, ஜெர்மானிய, இத்தாலிய இயந்திரங்கள்... இந்திய, சிரிய, பாகிஸ்தானிய, வங்காள தேசப் பார்வையாளர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் என 8 நாட்கள், ஒரு பெரிய மேளா போன்று நடக்கும். சுமார் 700 நிறுவனங்கள் பங்கேற்கும். இந்த முறை பெங்களூரில் நடைபெற்றது.
மும்முரகதியில் கண்காட்சி நடந்துகொண்டு இருந்த நாளில், முன்னாள் பாரதப் பிரதமர் தேவகவுடா நடத்திய அரசியல் கட்சிப் பேரணி ஒன்றில் மூன்று லட்சம் பேர் கலந்துகொண்டனர். அன்று கண்காட்சி முடிந்து, தும்கூர் சாலையில் 15-வது கிலோ மீட்டரில் இருக்கும் கண்காட்சி மைதானத்தில் இருந்து, பெங்களூரு மத்தியப் பகுதியின் மெஜஸ்டிக் சர்க்கிள் வந்து சேர மூன்றரை மணி நேரம் எடுத்தது.
வெளிநாட்டு, உள்நாட்டு முதலாளிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், நிர்வாகிகள், வணிகர்கள், பிற பார்வையாளர் எங்ஙனமோ தொலைந்துபோகட்டும். இந்தியாவை அவர்கள் அறிந்துகொள்ள அதி அற்புதமான சந்தர்ப்பம். ஆனால், ஆயிரக்கணக்கான நர்சரிக் குழந்தைகள், சிறுவர் - சிறுமியர், பிற்பகல் மூன்று மணிக்கு பள்ளிவிட்டு வீடு வந்து சேர இரவு ஒன்பது மணி ஆகியது. சற்றுயோசித் துப் பாருங்கள்... பள்ளியிலேயே குடிநீரை, தின்பண்டங்களைக் காலிசெய்து வீடு திரும்பும் சின்னஞ்சிறு எதிர்கால இந்தியா, பசித்து, தாகித்து, சிறுநீர் முட்டி,தூசி யில், புகையில் மூச்சு முட்டி, கண் எரிந்து, சலித்து சோர்ந்து, அழுது, தூங்கி விழுந்து... எந்தத் தகவலும் இல்லாமல் பள்ளி வாகனம் வந்து நிற்கும் நிறுத்தங் களில் குழந்தைகளை எதிர்நோக்கி நிற்கும் பெற்றோரையும் சற்று எண்ணிப்பாருங் கள். அடுத்த நாள் ஆங்கிலப் பத்திரிகைகளில் செய்தி வந்தது. முன்னாள் பிரத மரும் மற்றுமோர் வாய்ப்புக்கு வாயூறி நிற்பவரும் சொல்கிறார், 'தப்பு தங்கள்மீது இல்லை!' என. தமது குடிமக்களின் வாழ்நாளில் நான்கு மணி நேரத்தைச் சராசரி யாகக் கவர்ந்துகொண்டவர் எத்தனை பொறுப்புடன் பேசுகிறார் பாருங்கள்!
ஊர்வலங்களுக்காக, பேரணிகளுக்காக, நாம் விரும்பாத, சம்பந்தப்படாத, கதவடைப்பு, மறியல், பந்த்துக்காக நமது வாழ்வின் எத்தனை நாட்களை நாம் இழக்கிறோம்? குடியரசுத் தலைவர்களுக்கு, பிரதம அமைச்சர்களுக்கு, முதலமைச்சர்களுக்கு, பிற அரசியல் கட்சி முதலாளிகளுக்கெல்லாம் ஆயிரம் வேலைகள் இருக்கும். தமது பெண்டு பிள்ளைகளுக்கு, பேரன்-பேத்திகளுக்கு ஓடி ஓடிப் பொருள் தேடுவார்கள். பொருள் சேர்ப்பதன்றி, வேறெந்த ஜனநாயகக் கடமையும் புண்ணாக்கும் கிடையாது. ஆனால், இவர்கள் நகருக்குள் புகும் போதும், போகும்போதும், எமது வாழ்நாளில் பல மணி நேரத்தைப் பறித்துக் கொள்கிறார்கள்.
வரி என எம்மிடம் வசூலிக்கும் பணத்தில் பெரும்பங்கைக் கவர்ந்துகொள்கிறார்கள்; ஊழல் மலிந்த திட்டங்களின் மூலம் எமது சாலை, மின்சார, மருத்துவ, கல்வி, வேலைவாய்ப்பு வசதிகளைப் பறித்துக்கொள்கிறார்கள்; அவரவர் குடும்ப சேனல்களின் மூலம், தயாரிக்கும் சினிமாக்களின் வழியாக எமது பண்பாட்டை, மனநலத்தைக் கவர்ந்துகொள்கிறார்கள்; எமது ஆரோக்கியத்தைக் கெடுக்கிறார்கள்; சாலைகளில் சிவப்பு விளக்குகளின் முன்னால் காத்திருக்கச் செய்து எமது நேரத் தையும் பறித்துக்கொள்கிறார்கள். இதுபற்றி எந்தக் கவலையும், அக்கறையும், முணுமுணுப்பும், கோபமும் நமக்கு இல்லை. என்ன பாரம் ஏற்றினாலும், எத் தனை பாரம் ஏற்றினாலும், கூன்கொண்ட நமது முதுகு தாங்கும். ஏனெனில், நாம் மக்களாட்சியின் வாக்காளக் கழுதைகள்.
'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகும்' என்கிறார் இளங்கோவடிகள். அந்த அறம் ஒளிந்திருக்கிறதா, உயிரோடுதான் இருக்கிறதா அல்லது அறம் என்ற ஒன்றே கற்பனைதானா என்று எமக்குக் கேள்வி கள் எழுகின்றன.
பெங்களூரு பேரணியின்போது மூன்று மத்திய அமைச்சர்கள் விமானத்தைத் தவறவிட்டனர் என்பது செய்தி. அமைச்சர்கள், பன்னாட்டு நிறுவனத் தலைவர்கள் சொந்த விமானத்திலோ, சார்ட்டட் விமானத் திலோ போவார்கள். அவர்கள் உரிமை பெற்ற இனம், மேன் மக்கள்.
ஆனால், இரண்டு மாதம் முன்பு பதிவு செய்தால் தான் ரயில் சீட்டு கிடைக்கும் என்ற இந்திய பயணச் சூழலில் ரயிலைத் தவறவிட்டவன் என்ன செய்வான்? திருமணத்துக்குப் போகிறவன், சாவுக்குப் போகிறவன், விபத்தில் காயம்பட்டு மருத்துவமனையில் கிடக்கும் மகனை அல்லது மகளைப் பார்க்கப் போகிறவன், வெளிநாட்டுப் பயணச் சீட்டுக்களைக் கையில் வைத்துக்கொண்டு மும்பையில் விமானம் பிடிக்கத் திட்டமிட்டவன், வேலைக்கான நேர்காணலுக்குப் போகிறவன் எல்லாம் என்ன செய்வான் ஐயா?
எவர் ஆட்சி செய்தாலும் எம் கதி ஒன்றுதான். சரணாகதி, நிர்க்கதி, அதோகதி! அவர் தமக்குள் சொத்துக் குவிப்பதில் ஆயிரம் போட்டிகள். நாம் சாலையோரம், சிக்னல் விளக்கு பார்த்து, இருவசமும் போக்குவரத்து வாகனங்கள் பார்த்து நடக்கும் கீழ்ப்படிதலுள்ள, சட்டத்துக்குப் பயந்து சாகும் சாதாரண மானுடர். ஓட்டலுக்குப் போனால், முதலில் விலைப்பட்டியல் வாசித்து, கூட்டிப் பார்த்து உணவு ஆர்டர் செய்கிறவர். எவன் ஆண்டால் என்ன, எவன் மாண்டால் என்ன என்பது நமது மனநிலை. நம்மை இழுத்துப் போட்டுப் புடைப்பவரை, வாருகோலால் சாத்துபவரை, தலையில் சாணி கரைத்து ஊற்றுபவரை நாம் எவ்விதம் எதிர்கொள்ளப்போகிறோம்?
சென்னை சென்டரலுக்கு ஒரு நாளில் நூற்றுக்கணக்கில் ரயில்கள் வந்து சேர்கின்றன. ஒவ்வொரு வண்டியிலும் ஆயிரம் பயணிகள் வந்து இறங்குகிறார்கள். அவர்களில் முதியோர் உண்டு, குழந்தைகள் உண்டு, நோயாளிகள் உண்டு, கர்ப்பிணிகள் உண்டு.
இரண்டு மாதங்கள் முன்பு பதிவு செய்து, பயணம் இரண்டு நாட்கள் முன்பு தொடங்கிய நிலையில், முழு நாள் பந்த் அறிவிக்கப்படுகிறது என்றால், என்ன செய்வார்கள் பயணிகள்? சுத்தமான கழிப்பறைகள்கூட இல்லாத ரயில் நிலையத்தில் எப்படி காலைக்கடன் முடிப்பார்கள்? என்ன உண்ணக் கிடைக்கும்? பந்த் முடிகிற வரை எங்கு உட்கார்ந்திருப்பார்கள்?
தனது சொந்தக் குடிமக்கள் மேல் சற்றும் அக்கறையற்று நடக்கும் அரசாட்சியில் வாக்காளன் என்பவன் யார்? ரயில் தண்டவாளத்தின் அடியில் கிடக்கும் ஸ்லீப்பர் கட்டை போன்றவனா?
மழை, வெள்ளம், புயல், பூகம்பம் எனில் புரிந்துகொள்ளலாம். இயற்கை என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லை. விதியைத்தான் நொந்துகொள்ள முடியும்? ஆனால் இந்தப் பேரணிகள், மாநாடுகள், பந்த்துகள் அப்படியா?
|